கினிகத்தேனை வைத்தியசாலையில் கர்ப்பிணித்
தாய்மாருக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் காலாவதியான திரிபோஷா
சத்துணவுப் பொதிகள் வழங்கப்படுவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர்
கணபதி கனகராஜ் குற்றம் சாட்டினார்.
மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டினார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில், கினிகத்தேனை பகுதிக்கு
சென்றிருந்த போது அங்கு சில கர்ப்பிணித் தாய்மாரும் பாலூட்டும்
தாய்மாரும் தமக்கு வைத்தியசாலையில் வழங்கப்பட்ட திரிபோஷா
சத்துணவுப் பொதிகளுடன் என்னை சந்தித்து கினிகத்தேனை
வைத்தியசாலையில் காலாவதியான திரிபோச சத்துணவு
வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
அத்துடன் என்னிடம் சில காலாவதியான பொதிகளையும்
வழங்கி சரியான தீர்வை பெற்றுக்கொடுக்குமாறும் கோரினர். அவர்கள்
என்னிடம் கொடுத்த காலாவதியான திரிபோஷா பொதிகளை இந்த சபையின்
கவனத்திற்கு கொண்டு வருவதோடு இவற்றை சுகாதார அமைச்சரிடம்
ஒப்படைக்கிறேன்.
மத்திய மாகாண சுகாதாரத் துறையில் இதுபோன்ற பல
குறைபாடுகள் காணப்படுவதை கடந்த காலங்களிலும் நான்
சுட்டிக்காட்டியிருக்கிறேன். அரசாங்க வைத்தியசாலைகளில்
காலாவதியான, மக்களின் சுகாதாரத்திற்கு பங்கம்
ஏற்படுத்துகின்றவற்றை வழங்குகின்றபோது அதனால் மக்களுக்கு
ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளை சுகாதார அமைச்சு கவனத்தில்
கொள்ளவேண்டும். இவ்வாறான நிலை தொடருமானால் சுகாதார துறையில் மக்கள்
நம்பிக்கை இழந்துவிடுவது மட்டுமல்லாமல், அவர்கள் மனரீதியிலும்
உடல் ரீதியிலும் பாதிப்படைவர்.
கினிகத்தேனை வைத்தியசாலையில் வழங்கப்பட்ட
காலாவதியான திரிபோஷா பொதிகளை மீளப்பெற்று உரியவர்களுக்கு
நிவாரணத்தை வழங்க வேண்டும். கினிகத்தேனை வைத்தியசாலை உட்பட மத்திய
மாகாணத்தில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளிலும் காலாவதியான திரிபோஷா
பொதிகள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தால் அவற்றை அகற்றுவதற்கு
நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.
இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண சகாதார அமைச்சர்
கூறுகையில் இவ்விடயம் தொடர்பில் பூரண விசாரணைக்கு தான் உத்தரவிடுவதாகவும்
அடுத்த மாகாண சபை அமர்வில் விசாரணை அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதாகவும்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment