அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் கண்டி, மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சுமார் 100 கோடி ரூபாவை கோரி சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சருமான முத்துசிவலிங்கம் பி.பிசிக்கு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட சேமலாபநிதி, மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி, ஓய்வூதிய கொடுப்பனவுகள் என்பன கடந்த 10 முதல் 15 வருடத்துக்கு மேலாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளன.
அரசின் கீழ் உள்ள 3 நிறுவனங்களின் கீழ் இயங்கும் இந்தத் 15 தோட்டங்களும் முறையாக இயங்காதபடியாலேயே தொழிலாளர்களின் கொடுப்பனவுகள் உரிய முறையில் வைப்பிலிடப்படாமல் இருந்துள்ளதாக முத்து சிவலிங்கம் குறிப்பிடுகிறார்.
கண்டி, ஹந்தானை தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் அண்மையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை மீளச் செலுத்துமாறு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை முன்மாதிரியாகக் கொண்டு, ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்து சுமார் 100 கோடி ரூபா அளவான தொழிலாளர்களின் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கிறது
இதேவேளை, அரச நிர்வாகங்களின் கீழுள்ள தோட்டங்களிலுள்ள பழமையான, பெறுமதி மிக்க மரங்களை வெட்டி விற்று தொழிலாளர்களின் ஓய்வுகால கொடுப்பனவுகளை செலுத்த அரசாங்கம் முன்வந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் முத்து சிவலிங்கம் அவ்வாறு இல்லாவிட்டால் அரச திறைசேரியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு நீதிமன்றம் ஊடாக அரசாங்கத்தைக் கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மலையகத்தில் பெரும்பான்மை தொழிலாளர்களை சந்தாதாரர்களாகக் கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கக் கூட்டணியில் நீண்டகாலமாக பங்காளிக் கட்சியாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment