Thursday, October 17, 2013

பெரிய மட்டுக்கலை மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்

நுவரெலியா மாவட்டம் லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய மட்டுக்கலை தோட்டத்தில் 600 மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று (15) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பாவனைக்கு உகந்ததாக இல்லாத தோட்டத்திலுள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைத்துத்து தருமாறு மக்களால் கோரிக்கை மனுவொன்று நுவரெலிய பிரதேச சபை தலைவருக்கு வழங்கப்பட்டதனடிப்படையில் 

நுவரெலியா பிரதான வீதியை புனரமைப்பு செய்யும் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் மைதான புனரமைப்புக்கு மண் நிரப்பப்பட்டது. 

அத்தோடு, மைதானத்தில் வடிகால் அமைப்பதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணி முற்றுபெற்றுள்ளது. 

வீதி அதிகார சபை மூலம் மைதானத்தில் நிரப்பப்பட்ட மண் சரியான முறையில் பரப்பப்படாத காரணத்தால் இரண்டு வருடமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த புனரமைப்பு பணியை மேற்கொள்ளுமாறு  நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு ககடிதம் வழங்கப்பட்டதையடுத்து விளையாட்டு மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த 13-10-2013 அன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. 

புனரமைக்கப்பட்ட மைதானத்திற்கு 15,80000 ரூபா செலவிட்டதாக கூறி நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காசோலை பெற முயற்சி செய்துள்ளதாக மக்களுக்கு தகவல் பரவியதையடுத்து  20 பேர் கொண்ட தோட்ட இளைஞர் குழு நேரடியாக நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு சென்று செயலாளரை சந்தித்து குறித்த உறுப்பினருக்கு காசோலை வழங்க வேண்டாம் என கோரப்பட்டதால் காசோலை வழங்கப்படவில்லை. இந்த மோசடி செயலை கண்டித்தே தோட்டத் தொழிலாளாகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து கருத்து வெளியிட்ட நுவரெலிய பிரதேச சபை உறுப்பினர் நாகராஜ், 02 வருடங்களுக்கு முன்பு மைதானம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் இதனை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்ததால் 05 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். 

இதனையே பொறுப்பேற்று வேறு ஒரு நபருக்கு வழங்கியதாகவும் 15,80000 இலட்சம் ரூபா என்ற குற்றச்சாட்டு பொய்யானது எனவும் தனக்கும் இதற்கும் எதுவித தொடர்பும் இல்லையென குறிப்பிட்டார்.

No comments: