மலையகத்தில் சனத்தொகை அதிகரிப்பு அண்மை காலமாக குறைவடைந்து காணப்படுகின்றது. தேசிய ரீதியில் சனத்தொகை அதிகரிப்பு வீதம் 1.7ஆக உள்ள நிலையில் மலையகத்தில் இது 0.7 வீதமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. மலையகத்தின் சனத்தொகையைக் குறைப்பதற்கும் அம்மக்களின் இருப்பினை சீர்குலைப்பதற்கும் கடந்த காலத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அபிவிருத்தி எனும் பெயரில் மக்களை இடம்மாற்றுதல் திட்டமிட்ட குடியேற்றங்களை தாபித்தல் என்பன அவற்றுள் சிலவாகும். இதனடிப்படையில் கட்டாய கருத்தடை திட்டமும் குறிப்பிடத்தக்கதாகும்.
மலையக பெண்களின் விருப்பமின்றி சில இடங்களில் கட்டாய கருத்தடை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையை அறிய முடிகின்றது. சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நடவடிக்கைக்கு துணை போகின்றமையானது வருந்தத்தக்க விடயமாகும். ஆசை வார்த்தைகளைக் கூறி அற்ப சொற்ப சலுகைகளை வழங்கி மலையக பெண்களை கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கி வரும் செயல் ஒரு மனித உரிமை மீறலாகும். அதிகமானோர் கருத்தடை செய்து கொள்வார்களானால் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு சன்மானமும் வழங்கப்படுவதாக செய்திகள் அடிபடுகின்றன. சொந்த நலன்களுக்காக ஒரு சமூகத்தை காட்டிக்கொடுக்கும் அல்லது சமூகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இத்தகைய செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவையாகும்.
கட்டாய கருத்தடையின் காரணமாக பல்வேறு பாதக விளைவுகள் ஏற்படுகின்றன. எனினும் இவ்விடயம் தொடர்பாக மலையக அரசியல்வாதிகள் அலட்சிய போக்கினையே கடைப்பிடித்து வருகின்றனர். பிரச்சினையின் உக்கிர தன்மையை அரசியல்வாதிகள் விளங்கிக்கொள்ள வேண்டும். கட்டாயக் கருத்தடையின் பாதக விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment