சம்பள உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றுக்கு ஏற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளிப் பண்டிகைக்காக பத்தாயிரம் ரூபாய் பெருநாள் முற்பணம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் பெருந் தோட்ட தொழிலாளி ஒருவருக்கு நாட் சம்பளமாக 405 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் தொழிலாளர்களுக்கு பெருநாள் முற்பணமாக 4500 ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இன்று தோட்டத் தொழிலாளி ஒருவர் 620 ரூபாய் நாட் சம்பளம் பெறுகிறார்கள். எனவே, அவர்களுக்கு ஏன் பத்தாயிரம் ரூபாய் முற்பணம் வழங்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரமே பெருந்தோட்டத் தொழிலாளிகளின் சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு 405 ரூபாவாக இருந்த நாட் சம்பளம் 2011 ஆம் ஆண்டு 515 ரூபாவாகவும் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி 620 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டது. எனவே 2009 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 53 சதவீத சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளிகளின் 53 சதவீத சம்பள அதிகரிப்பிற்கேற்ப 7500 ரூபாய் பெருநாள் முற்பணத்தினை வழங்கலாம். ஆனால், அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கமையவே பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டுமென நான் வலியுறுத்துகின்றேன்.
கடந்த ஏப்ரல் மாதம் அவசர அவசரமாக கூட்டு ஒப்பந்தத்தினை மேற்கொண்டவர்கள் இந்த தீபாவளி முற்பணத்தினை தற்போதைய கால சூழலுக்கேற்ப பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏனென புரியவில்லை.
மலையகத்தில் பல பகுதிகளில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் பெய்த கடும் மழையினால் வேலை நாட்கள் குறைக்கப்பட்டன. இதனால், தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தையே அந்த மாதங்களில் பெற்றனர். ஆகையால், அப்போது அவர்கள் கடன்களைப் பெற்று தமது செலவுகளை சமாளித்தனர். இவ்வாறான நிலையில் பெருநாள் முற்பணமும் குறைவாக கிடைத்தால் அவர்களால் தீபாவளியை கொண்டாட முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி- வீரகேசரி
No comments:
Post a Comment