மலையகத்தை அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்!
மேலைநாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த பன்றிக் காய்ச்சல் இப்போது இலங்கையில் மலையகப் பகுதிகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக மத்திய மாகாண பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.
இதேவேளை சில பிரதேசங்களில் முன் பள்ளிகளும் கூட மூடப்பட்டுள்ளன. நுவரெலியா, கண்டி, பேராதனை, நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் 200 இற்கும் அதிகமானோர் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் பன்றிக்காய்ச்சல் மேலும் பரவாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தோடு பொது மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் எனவும் சுகாதாரத் தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.
பன்றிக் காய்ச்சல் வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டைவலி, சோர்வு உடல்வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும். இந் நோய்த் தாக்கத்தால் உயிரிழப்பும் ஏற்படும்.
இந்த நோய் ஏற்பட்டுள்ளதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனைகளின் பின்னரே நோயை உறுதிப்படுத்த முடியும். நோய் தாக்கியவரிடமிருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும்.
சளி மூலம் அதிகளவில் பரவும். நோய் தாக்கியவரின் உமிழ் நீர் அல்லது சளியை தொட்டுவிட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும்.
எனவே நோய் தாக்கியவரை தனிமைபடுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும். இந் நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் தவறாது வைத்திய பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
No comments:
Post a Comment