தமிழர்கள் செறிந்து வாழும் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அரசாங்கத் திணைக்களங்களில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்படுவதில்லை. இதனால் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அரச கரும மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை சகல அரச உத்தியோகத்தர்களும் ஓரளவுக்கேனும் அறிந்திருக்க வேண்டும் என்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் அச் சட்டங்கள் வெறும் ஏட்டுச் சட்டங்களாகவே இருக்கின்றன.
தமிழ் மொழி பேசுபவர்களுக்கு பெரும் சோதனை
அரச திணைக்களங்களுக்கு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக செல்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கு தங்களது தேவைகளை உரிய முறையில் சரியாக செய்து கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. தமிழ் மொழி பேசுகின்றவர்கள் தாங்கள் தமிழ் மொழி மூலம் தெரிவிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மலையகப் பகுதிகளிலுள்ள அரச திணைக்களங்களில் தொடர்பாடல் வசதியளிப்பாளர் என்ற நியமனங்களையும் அரசாங்கம் வழங்கியுள்ளது.
மேற்படி தொடர்பாடல் வசதியளிப்பாளர்கள் என நியமனம் பெற்றவர்கள் பிரதேச செயலகத்திலும் உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்திலும் தபாற் காரியாலயத்திலும் கடமையாற்றி வந்த போதிலும் அவர்களில் அதிகமானோர் ஆசிரியர் நியமனம் கிடைத்து சென்று விட்டனர். இவர்களின் வெற்றிடங்களுக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படாதமை தமிழ் மக்களுக்கு சோதனை மேல் சோதனையாக விளங்குகின்றது.
விளம்பரப் பலகைகளில் தமிழ் பிழைகள்
அரச மற்றும் தனியார் திணைக்களங்களிலுள்ள விளம்பர பலகைகளில் தமிழ் மொழியில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டாலும் கூட அதில் எண்ணிறைந்த தமிழ் பிழைகள் காணப்படுகின்றன. தமிழ் மொழிக்கு இவ்வாறு பாரபட்சம் காட்டப்படுவதனால் அரசாங்கத் திணைக்களங்களுக்கு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள செல்வோர் மொழி தெரியாமல் திரும்பி விடுகின்றனர்.
அரச காரியாலயங்களிலுள்ள நுழைவாயில் தொடக்கம் ஏனைய எல்லா இடங்களிலும் காட்சியளிக்கின்ற அறிவித்தல்கள் தமிழ் மொழி பேசுபவர்களுக்கு பெரும் சோதனையாகவே காணப்படுகின்றன. இவ்வாறு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவது இம் மாவட்டத்தில் பெருந் தொகையாக வாழும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலென பலரும் கருதுகின்றனர்.
தனிச் சிங்களத்தில் அனுப்பப்படும் சுற்று நிருபங்களால் பெரும் சிரமம்.
சம்பரகமுவ மாகாணத்தின் கல்வி அமைச்சு மற்றும் கல்விக் காரியாலங்களில் காணப்டுகின்ற அறிவித்தல்கள் எல்லாமே சிங்கள மொழியில் மாத்திரமே காணப்படுகின்றமையால் சேவைகைளைப் பெற்றுக் கொள்வதற்கு இக் காரியாலயங்களுக்கு வருகை தரும் நூற்றுக்கணக்கான தமிழ் ஆசிரியர்கள் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனனர்.
கல்வி அமைச்ச மற்றும் கல்வித் திணைக்களங்கள், காரியாலயங்கள் என்பவற்றிலிருந்து தமிழ் பாடசாலைககளுக்கு அனுப்பி வைக்கப்படும் அதிகளவான கடிதங்களும் சகல சுற்று நிருபங்களும் சிங்கள மொழியிலேயே அனுப்பப்பட்டு வருவாதாக அதிபர்களும் , ஆசிரியர்களும் முறையிடுகின்றனர். மேற்படி சுற்று நிருபங்களை மொழிப்பெயர்ப்பதற்காக சிங்கள மொழி தெரிந்தவர்களிடம் அதிபர்,ஆசிரியர்கள் செல்ல வேண்டியிருப்பதால் உரிய நேரத்திற்கு தகவல்களை சமர்ப்பிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
ஆசிரியர்களின் சம்பள உயர்வுக் கடிதங்கள் மற்றும் நியமனக் கடிதங்கள் என்பன சிங்கள மொழியில் இருப்பதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள விளம்பரத்தைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.
தபால் நிலையங்களில் தந்தி செய்திகளை தமிழில் அனுப்ப முடியாத நிலை
இம் மாவட்டத்தில் உள்ள தபால் மற்றும் உப தபாற் கந்தோர்களில் அவசர தந்திகள் கூட தமிழில் அனுப்ப முடியாமல் இருப்பதும் பெரும் கவலைக்குரிய விடயமென தெரிவிக்கப்படுகிறது. அரச நிறுவனங்களுக்கு அன்றாட கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள வரும் போதிய கல்வி அறிவில்லாத தோட்ட மக்கள் தரகர்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. இவர்களுக்கான கொடுப்பனவுகளும் கணிசமான தொகையாக இருப்பதால் ஏற்கனவே பொருளாதார பிரச்சினைகளால் நொந்திருக்கும் அநேகமானோர் இந் நிறுவனங்களுக்கு வருவதை தவிர்ப்பதே மேலென கருதுகின்றனர்.
தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படல் வேண்டும்
அரச கரும மொழியாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தமிழ் மொழிக்கு தகுந்த இடத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது சமுதாய முன்னேற்றத்தை விரும்பும் அரசியல்வாதிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் மலையக புத்திஜீவிகளின் தலையாய கடமையாகும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment