Thursday, February 13, 2014

பாதையை புனரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை நகரத்தில் இருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மணிக்பாலம் கால்நடை பண்ணைக்கு செல்லும் பிரதான பாதை பல வருடகாலமாக செப்பணிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றதால் இப்பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களக்கு முகம் கொடுக்கின்றனர். 

இதேவேளை ஹோம்வூட் தோட்டம் மற்றும் போபத்தலாவ பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர்களும் கர்ப்பிணி தாய்மார்களும் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கும் ஆளாகின்றனர். 

நடந்து முடிந்த மத்திய மாகாண சபை தேர்தலின் போது இப்பாதையை புனரமைப்பு செய்வதாக வாக்குறுதிகளை வழங்கியவர்கள் தேர்தலின் பின் இப்பிரதேசத்தை கண்டும்காணாமல் இருப்பதாக மக்கள் விசனம் தொவிக்கின்றனர். 

இப்பாதையை புனரமைத்து தருமாறு நுவரெலியா மாவட்ட அரசியல்வாதிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்த போதிலும் எவரும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று (13.02.2014) மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டனர்.

நிரந்தர அதிபரை நியமிக்ககோரி ஆர்பாட்டம்

நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரிக்கு நிரந்தர அதிபர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு வலியுறுத்தி பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பெற்றோர்கள் தெரிவிக்கையில் நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி கடந்த எட்டு மாதங்களாக நிரந்தர அதிபர் இல்லாமல் செயற்படுகின்றது. இது தொடர்பாக தாங்கள் கல்வி திணைக்கள உயர் அதிகாரிகளிடமும் பிரதேச அரசியல்வாதிகளிடமும் அமைச்சர்களிடமும் மத்திய மாகாண சபை அமைச்சர்,உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை.

மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு தாங்கள் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே இன்று இந்த போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காத பட்சத்தில் தங்களுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையின் அதிபராக கடமையாற்றியவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு அவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.அந்த விசாரணை முடிவடைந்து அவர் வேறு ஒரு பாடசாலைக்கு பிரதி அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரின் குறித்த நியமனத்தை அடுத்து நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரிக்கு புதிய அதிபர் ஒருவரை நியமிக்க நுவரெலியா கல்வி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பாக அதிபர் ஒருவரை சிபாரிசு செய்து வலய கல்வி பணிப்பாளர் எம்.ஜீ.ஏ.பியதாச 24.01.2014 திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை மத்திய மாகாண கல்வி பணிமனைக்கு அனுப்பிவைத்துள்ளார். எனினும் இது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

தன்னை இனங்காட்டிக்கொள்ள விரும்பாத அதிகாரியொருவர்  கருத்து தெரிவிக்கையில், புதிய கல்வி செயலாளர் விவசாய திணைக்கள அமைச்சில் இருந்து நியமனம் பெற்று வந்திருக்கின்றமையால் இடமாற்றம் தொடர்பாக கோவைகளை பார்வையிட தனக்கு கால அவகாசம் வேண்டும் என தெரிவித்ததாக அந்த அதிகாரி தெரிவிக்கின்றார்.

Monday, February 10, 2014

நுவரெலியாவில் வறட்சி; இரவில் பனியும் குளிரும்

நுவரெலியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கடும் வறட்சி நிலவுகின்றது. பகல் வேளையில் வெய்யிலினால் உஷ்ணம் அதிகமாகவும் இரவில் பனி பெய்வதால் கடும் குளிரும் காணப்படுகின்றது.

நுவரெலியாவில் கடந்த ஒருவாரமாக பனி பெய்து வருவதால் உருளைக்கிழங்கு பீட்றூட் போன்ற செடிகளும் ஒரு சில தோட்டங்களில் தேயிலை செடிகளும் கருகி போயுள்ளன. 

மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை பனியினால் குளிர் அதிகமாக காணப்படுவதால் பாடசாலை மாணவர்களும் அதிகாலையில் தொழிலுக்கு செல்பவர்களும் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். 

இதேவேளை நுவரெலியாவில் குடி நீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாநகர சபை விநியோகிக்கும் குழாய் குடி நீரும் காலையிலும் மாலையிலும் மாத்திரம் விநியோகிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பெரும் தீ

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றியுள்ளது. நேற்று மாலை பரவிய தீ காரணமாக சுமார் 50 ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மலையகத்தில் தற்போது காணப்படும் அதிக வெப்பநிலை காரணமாக மலையகத்தில் உள்ள காடுகள் சிலவற்றுக்கு இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு வருகின்றனர்.

இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பவர்களின் தகவல் கிடைத்தால் உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் படி பொதுமக்களிடம் நுவரெலியா மாவட்ட செயலாளர் டி..பி.ஜி.குமாரசிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Thursday, January 23, 2014

தோட்ட உத்தியோகத்தர்களின் காணிப்பிரச்சனை

தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு வீடு கட்டிக்கொள்வதற்கு ஏழு பேர்ச்சஸ் காணித்துண்டு கொடுத்ததைப் போன்று தோட்ட உத்தியோகத்தர்களுக்கும் வீடு கட்டிக்கொள்வதற்கு 10 பேர்ச்சஸ் காணித்துண்டுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியின் ஆதரவுடன் இப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் தம்மிக்க ஜயவர்த்தன பொதுச்செயலாளர் கிங்ஸ்லி ராஜேந்திரன் றொபர்ட் ஆகியோர்களின் எற்பாட்டில் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் சமரசிங்க இதனை தெரிவித்தார். 

அவர் அங்கு உரையாற்றுகையில் தோட்ட உத்தியோகத்தர்களின் பிரச்சனை சம்பந்தமாக ஜனாதிபதியுடன் நேரில் பேசுவதற்கு ஒழுங்குகள் செய்து தரப்படும் என்றும் ஜனாதிபதிக்கும் உங்களின் சக்தி நன்கு தெரியும். அவர் பெருந்தோட்ட மக்கள் மீது நல்ல நம்பிக்கை கொண்டுள்ளார். 

ஆரம்ப கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் எடின்பரோ தோட்டத்தில் தோட்ட உத்தியோகத்தர்களுக்கு காணி வழங்குவதற்கு தோட்ட அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். இவர்களின் பிரச்சனை பல வருடகாலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த போதிலும் இப்போதுதான் செயற்படுகிறது. 

கண்டி, களுத்துறை, நாவலப்பிட்டி, ட்டன், நுவரெலியா, தலவாக்கலை, அவிசாவெல்ல, கேகாலை ஆகிய பகுதியிலிருந்து தோட்ட உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றார்கள்

மனித உரிமைகள் தொடர்பாக தற்போது அதிகமாக குரல் எழுப்பப்பட்டு வருகின்ற இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றமை வருந்தத்தக்க விடயமாகுமென மலையக மக்கள் முன்னணியில் அரசியல் பிரிவுத் தலைவர் வி. இராதாகிருஷ்ணன் நுவரெலியாவில் பொது மக்களுடனனான சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்தார். 

அவர் அங்கு தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்பின் சிகரமாக திகழ்கின்றார்கள். நாட்டுக்கு உரமூட்டுகிறார்கள.; இவர்களுக்கு நீண்டகால வரலாறு இருக்கின்ற போதும் இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிட வில்லை என்பது கசப்பான உண்மையாகும். தொழிலாளர்கள் குடியிருக்கும் லயன்கள் சுமார் 200 வருடத்துக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்டதாகும். இந்த வாழ்க்கை முறையை மாற்றியமைத்து தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக குரல் எழுப்பப்பட்டு வருகின்ற போதும் தனி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதில் இழுபறி நிலைகளே காணப்படுகின்றன.

தொழிலாளர்களின் பல துறைகளில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்படவில்லை. இவர்களை ஏணியாக வைத்து பலர் முன்னேறி செல்கின்ற போதும் தொழிலாளர்கள் இருந்த இடத்திலேயே இருந்து வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 

வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற உலகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தொழிலாளர்களின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். அவர்களின் கல்வி, கலை, கலாச்சாரம் விளையாட்டு போன்ற இன்னோரன்ன துறைகளின் அபிவிருத்தி கருதி நடைமுறைச்சாத்தியமான திட்டங்களை வகுத்து முன்னெடுக்க வேண்டும்.

இலங்கையில் பல்லின மக்கள் வாழ்கின்றார்கள். இவர்களின் பிரச்சினைகள் மாறுபட்ட தன்மை கொண்டவை மலையக மக்களுக்கும் தனித்துவமான பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன. இவற்றை தீர்ப்பதற்கு அரசு ஆர்வம் காட்ட வேண்டும். இதேவேளை மலையக தலைமைகள் அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுத்து மலையக மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும். 

Sunday, January 19, 2014

தொழிலாளர்கள் சிறு தேயிலை தோட்ட உடமையாளர்களாக மாற வேண்டும்

தோட்டத் தொழிலாளர்கள் சிறு தேயிலை தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும் என்பதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால எதிர்;பார்ப்பாகும் என இ.தொ.கா பொதுச்செயலாளரும், கிராமிய கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் பத்தனை பிரதேசத்தில் முன்பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக வேர்ல்ட் விஷன் நிறுவனம் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஓர் அங்கமாக முன்பள்ளி கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. இதற்கெனபல லட்சம் ரூபாவை செலவிட்டு வருகின்றது. ஆரம்ப கல்விக்கு சரியான அடித்தளம் இடப்பட்டால்தான் உயர்கல்வியில் மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளை பெற முடியும் என்பதை உணர்ந்து செயற்பட்டு வருகின்றது. தொழிலாளர்களும் தமக்கு கிடைத்த இந்த வளங்களை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்று நாம் விரும்புகின்ற அதேவேளையில் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலாளியாகவே இருக்காமல் சிறு தேயிலை தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும். தோட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2- 3 ஏக்கர் தேயிலை காணிகளை வழங்கி அதை தொழிலாளர்களே பராமரித்து கொழுந்து பறித்து அதை தோட்ட நிர்வாகத்துக்கு விற்பனை செய்து வருமானத்தை ஈட்டி முதலாளிமார்களாக வளர வேண்டும் என்பதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான ஆலேலாசனைகளை முன்வைத்துள்ளோம். அவ்வாறு நாம் காணிகளை பெற்றுக்கொடுக்கும் போது அவற்றை வெளியாருக்கு யாரும் விற்பனை செய்து விடக்கூடாது. தங்களுக்கு கிடைத்த காணிகளில் தகுந்த வருமானத்தை தேடிக்கொள்வதோடு அந்தக் காணிகளுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும். 

கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட சுமார் 6,000 குடியிருப்புக்கள் வெளியாருக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதோடு அவற்றை விற்றவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் குடியிருப்புக்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 

மேலும் தீபாவளி பண்டிகை இரண்டு தினங்களுக்கு மாத்திரமே கொண்டாடப்பட வேண்டியதொன்றாகும். கடந்த வருடனம் ஒரு தோட்டத்தில் 10 நாட்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியுள்ளனராம். இந்த வருடம் ஒரு தோட்டத்தில் 30 நாட்கள் கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வேலைக்குச் செல்லாமல் செய்கின்ற தொழில் மீது அக்கறை இல்லாமல் இருந்தால் தேயிலை உற்பத்தி எவ்வாறு பெருகும். தொழிலாளர்களுக்கு எவ்வாறு வருமானம் கிடைக்கும்? தமது தேவைகளை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே, தொழிலாளர்கள் இந்த நாட்டில் கௌரவமாகவும் கண்ணியமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக நாம் மேற் கொள்ளும் வேலைத் திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதோடு, கட்டுப்பாடும் ஒழுக்கமும் உள்ள சமூகம் என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.