தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு வீடு கட்டிக்கொள்வதற்கு ஏழு பேர்ச்சஸ் காணித்துண்டு கொடுத்ததைப் போன்று தோட்ட உத்தியோகத்தர்களுக்கும் வீடு கட்டிக்கொள்வதற்கு 10 பேர்ச்சஸ் காணித்துண்டுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியின் ஆதரவுடன் இப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் தம்மிக்க ஜயவர்த்தன பொதுச்செயலாளர் கிங்ஸ்லி ராஜேந்திரன் றொபர்ட் ஆகியோர்களின் எற்பாட்டில் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் சமரசிங்க இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு உரையாற்றுகையில் தோட்ட உத்தியோகத்தர்களின் பிரச்சனை சம்பந்தமாக ஜனாதிபதியுடன் நேரில் பேசுவதற்கு ஒழுங்குகள் செய்து தரப்படும் என்றும் ஜனாதிபதிக்கும் உங்களின் சக்தி நன்கு தெரியும். அவர் பெருந்தோட்ட மக்கள் மீது நல்ல நம்பிக்கை கொண்டுள்ளார்.
ஆரம்ப கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் எடின்பரோ தோட்டத்தில் தோட்ட உத்தியோகத்தர்களுக்கு காணி வழங்குவதற்கு தோட்ட அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். இவர்களின் பிரச்சனை பல வருடகாலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த போதிலும் இப்போதுதான் செயற்படுகிறது.
கண்டி, களுத்துறை, நாவலப்பிட்டி, அட்டன், நுவரெலியா, தலவாக்கலை, அவிசாவெல்ல, கேகாலை ஆகிய பகுதியிலிருந்து தோட்ட உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment