நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரிக்கு நிரந்தர அதிபர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு வலியுறுத்தி பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பெற்றோர்கள் தெரிவிக்கையில் நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி கடந்த எட்டு மாதங்களாக நிரந்தர அதிபர் இல்லாமல் செயற்படுகின்றது. இது தொடர்பாக தாங்கள் கல்வி திணைக்கள உயர் அதிகாரிகளிடமும் பிரதேச அரசியல்வாதிகளிடமும் அமைச்சர்களிடமும் மத்திய மாகாண சபை அமைச்சர்,உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை.
மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு தாங்கள் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே இன்று இந்த போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காத பட்சத்தில் தங்களுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையின் அதிபராக கடமையாற்றியவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு அவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.அந்த விசாரணை முடிவடைந்து அவர் வேறு ஒரு பாடசாலைக்கு பிரதி அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரின் குறித்த நியமனத்தை அடுத்து நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரிக்கு புதிய அதிபர் ஒருவரை நியமிக்க நுவரெலியா கல்வி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பாக அதிபர் ஒருவரை சிபாரிசு செய்து வலய கல்வி பணிப்பாளர் எம்.ஜீ.ஏ.பியதாச 24.01.2014 திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை மத்திய மாகாண கல்வி பணிமனைக்கு அனுப்பிவைத்துள்ளார். எனினும் இது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
தன்னை இனங்காட்டிக்கொள்ள விரும்பாத அதிகாரியொருவர் கருத்து தெரிவிக்கையில், புதிய கல்வி செயலாளர் விவசாய திணைக்கள அமைச்சில் இருந்து நியமனம் பெற்று வந்திருக்கின்றமையால் இடமாற்றம் தொடர்பாக கோவைகளை பார்வையிட தனக்கு கால அவகாசம் வேண்டும் என தெரிவித்ததாக அந்த அதிகாரி தெரிவிக்கின்றார்.
No comments:
Post a Comment