Tuesday, July 5, 2016

பாதுகாப்பு இல்லையா? உடன் பதியவும்

கொழும்பு மற்றும் புறநகர்களில்; பாதுகாப்பில்லாத இடங்களில் வேலைக்கமர்த்தப்படும் மலையக இளைஞர், யுவதிகளின் சுயவிவரங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளதாக, காங்கிரஸின் உப-தலைவரும் சிரேஷ்ட தொழிலுறவு இயக்குநருமான எம்.வேங்குருசாமி தெரிவித்தார். சௌமிய பவனில் நடைபெற்ற மலையக இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தோட்டங்களில் படித்துவிட்டு வேலையின்றி அவதிப்படும் இளைஞர், யுவதிகளுக்கு அவர்களது தகுதிக்கேற்ப தோட்டங்களிலேயே, தொழில் வழங்கப்பட வேண்டும். ஆனால், தோட்ட நிர்வாகங்கள் தொழில் வழங்க மறுக்கின்றன. இதனால், விரக்தியடைந்த இளைஞர், யுவதிகள் தொழிலைத் தேடி கொழும்பு மற்றும் புற நகருக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்' என்றார். 'தோட்டங்களில் ஆள் பிடிக்கும் தரகர்கள், இப்போது தோட்டங்களில் அதிகமாக உலாவி வருகின்றனர். இவர்கள், தொழில்தருநர்களிடமிருந்து  ரூபாய் 5,000 முதல் ரூபாய் 10,000 வரை பணம் பெற்றுக்கொள்வதுடன் பெற்றோரை  ஏமாற்றி, பிள்ளைகளை பலவந்தமாக அழைத்துச் செல்லும் நிலை தோன்றியுள்ளது. தொழிற்சங்க சட்டதிட்டங்களின்படி, ஒருவர் தொழில்புரிய வேண்டுமெனில் 18 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆனால், மலையகத்தில் 14, 15 வயதுகளிலேயே இளைஞர், யுவதிகள்; வேலைக்காக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும்' என்றார். 

இது இவ்வாறிருக்க, வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக அனுப்புவதாக ஆசைவார்த்தைகள் கூறி, இந்த தரகர்கள் அப்பாவிப் பெண்களை ஏமாற்றி கஷ்டத்துக்குள் தள்ளிவிடுகின்றார்கள். இதேவேளை, கொழும்பில் பல வருடங்களாக தொழில்புரியும் இளைஞர், யுவதிகளுக்கு உருப்படியான சம்பளம், ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி போன்ற கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படுவதில்லை. இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இவற்றை எம்மால் அனுமதிக்க முடியாது.   

எனவே, இ.தொ.கா இவர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன்பொருட்டு மலையக பெருந்தோட்டங்களிலிருந்து கொழும்புக்குச் செல்லும் இளைஞர், யுவதிகள் தமது முழு விபரங்களையும் இ.தொ.கா தலைமைக் காரியாலயத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்துகொள்பவர்கள் தமது முழுப்பெயர், பெற்றோரின் விபரம், வதியும் தோட்டம், மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை குறிப்பிடுவது அவசியமாகும்' என்றார். 'இ.தொ.கா தலைமைக் காரியாலயம், 72, ஆனந்த குமாரசாமி மாவத்தை, கொழும்பு 07 அல்லது 011 2301359 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுகொள்ள முடியும்' எனவும் அவர் கூறினார்

முதலாளிமார் சம்மேளனத்தின் ஆலோசனைகள் - தொழிலாளர்களின் அடிமை நிலை

தொழிலாளர்களை கூறுபோடும் நோக்கில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள பல்வேறு ஆலோசனைகள் செயல்வடிவம் பெறுமானால் தொழிலாளர்களின் அடிமை நிலை மேலும் வலுப்பெறுவதோடு கம்பனிகள் ராஜபோகத்தை தொடர்ந்து அனுபவிக்கும் நிலைமை உருவாகும் என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ் சதாசிவம் குறிப்பிட்டுள்ளார். 

ர் மேலும் தெரிவிக்கையில் கம்பனிகள் தோட்டங்களை தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு பிரிந்து கொடுப்பதனை அடிப்படையாக கொண்டு ஆலோசனைகளை முன்வைத்துள்ளது. ஊழைப்பின் மகத்துவத்தை இந்நாட்டிற்கு புரியவைத்த பெருமை படைத்தவர்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் விளங்குகின்றார்கள். இவர்களால்தான் இந் நாடு வளம்பெற்று விளங்குகின்றது. இவர்கள் தன்னிலும் மேலாக நாட்டை நேசிக்கின்றார்கள். எனினும் நாடு இவர்களை நேசிக்கின்றதா, என்பது கேள்விக்குறியோகவே இருக்கின்றது.  

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமிழர்களாக இருப்பதாலோ என்னவோ இவர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றன. இனவாத நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் காரணமாக இம் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி இருக்கின்றது. ஒவ்வொரு அரசாங்கத்தையும் ஆட்சிபீடம் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார்கள். தங்களுக்கு என்னவோ அரசாங்கங்களின் ஊடாக கிடைக்கப் போகின்றது என்று வெறும் கனவு காண்கிறார்கள். 

ஆனால் எதுவுமே சாத்தியப்படாத நிலையில் பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு அது குறித்த கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்ட நிலையில் மலையக மக்கள் எதிர்கொண்டுள்ளனர். 

இரண்டு முகம் காட்டுகின்ற அராசாங்கங்களை போன்றே இப்போது கம்பனியினரும் மலையக மக்களை ஓரம் கட்டுவதற்கும் அம் மக்களின் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை மழுங்கடிப்பதற்கும் முனைப்புடன் செயற்படுகின்றமை வெளிப்படையாகவே தெரிகின்றது. கம்பனியினரின் அண்மைக்கால நடவடிக்கைகள் மென்மேம் தொழிலாளர்களை அடிமைப்படுத்துவதாகவே உள்ளது. 

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 12 நாட்கள் மட்டுமே வேலை வழங்குகின்ற ஒரு திட்டத்தை கம்பனியினர் ஆலோசனைகளில் வலியுறுத்தி இருக்கின்றனர்.

தேயிலை விற்பனையின் மூலம் ஏனைய நாட்களில் தொழிலாளர் தமது வருமானத்தினை ஈட்டிக்கொள்ளும் திட்டம் தொடர்பிலும் முன்வைப்புகள் இடம் பெற்று வருகின்றன. எவ்வாறெனினும் இது ஒரு சாதகமான முன்னெடுப்பாகத் தெரியவில்லை. இதனால் பாதக விளைவுகளே அதிகமாக இருப்பதாகத் தெரிகின்றது.

தொழிலாளர்களின் உரிமைகள் பலவும் பறிபோகும் நிலையே இதனால் ஏற்படும். அத்தோடு தொழிலாளர்களின் வருமானம் அப்போதைய வருமானத்திலும் கணிசமாக குறைவடையும் அபாகரமான நிலைமையே மேலெழும் 

ஊழியர் சேமலாபநிதி, உழியர் நம்பிக்கை நிதி என்பவற்றிலும் பாதிப்பு நிலைமை அதிகமாக ஏற்படும். கம்பனியினர் வளமிக்க காணிகனை தம்மிடத்தில் வைத்துக்கொண்டு விளைச்சல் குறைந்த காணிகளை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க உள்ள சூழ்சிகரமான நடவடிக்கைகள் தொடர்பிலும் இப்போது தெரியவந்துள்ளது. 

இத்தகைய வினைத்திறன் குறைந்த காணிகளை தொழிலாளகளுக்கு குத்தகைக்கு வழங்குவதன் ஊடாக எவ்வாறு தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும் என சிந்திக்க வேண்டியுள்ளது. 

கம்பனியினரின் சூழ்ச்சி நிலைபற்றி தெரிந்தும் மலையக அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கைகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாது ஏன் வாய்மூடி மௌனியாக இருந்து வருகின்றார்கள் ஏன் என்று புரியவில்லை. கம்பனியினரின் தான்தோன்றித்தனமாக முடிவுகளுக்கு மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகள் துணை போகின்றார்களா? ஆப்படியானால் இவர்களை நம்பி வாக்களித்து அரசியல் பீடமேற்றிய தொழிலாளர்களின் நிலைமை என்னாவது?

மலையக அரசியல்வாதிகள் மௌனித்திருப்பது தொழிலாளர்களைக் காட்டிக் கொடுக்கின்ற ஒரு செயலாகும். கம்பனியினரின் நடவடிக்கைகளுக்கு துணைபோகாது இவர்கள் தொழிலாளர்களை அடிமை நிலையில் இருந்து மீட்டெடுக்க முனைதல் வேண்டும்.

கலந்துரையாடல்களின் மூலம் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்தல் வேண்டும். தொழிலாளர்களின் உரிமைக்கு தோள் கொடுக்க அரசியல்வாதிகள் முற்பட வேண்டுமே தவிர வேலியே பயிரை மேயும் கீழ்த்தரமான செயற்பாடுகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Saturday, July 2, 2016

கொட்டகங்கை தோட்ட காணி தனியாருக்கு விற்பனை - எதிராக ஆர்ப்பாட்டம்

ரங்கல, கொட்டகங்கை தோட்டத்தின் மேற்பிரிவிலுள்ள பல ஏக்கர் காணியை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு எதிராக தோட்ட மக்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொட்டகங்கை மேற்பிரிவு தோட்டத்திலுள்ள சுமார் 60 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான தமது தோட்டப் பகுதியில் 50 ஏக்கர் காணி விற்பனை செய்யப்பட உள்ளதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தோட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொட்டகங்கை தோட்டத்திலுள்ள மக்களுக்கே அந்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்துவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து அறிந்துகொள்வதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு வினவினோம்.
அமைச்சர் தற்சமயம் வெளிநாடு சென்றிருப்பதாகவும், அமைச்சர் நாடு திரும்பிய பின்னர் அதுகுறித்து அவரது கவனத்திற்குக் கொண்டுவரப்படும் என்றும் அந்த அலுவலகத்திலுள்ள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
நன்றி- நியூஸ் பெஸ்ட்

Friday, July 1, 2016

ஜனாதிபதி ஆலோசனைக்கு அமைய 3,000 வீடுகளை அமைக்கும் பணி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  ஆலோசனைக்கு அமைய, கேகாலை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 3,000 வீடுகளை அமைக்கும் பணியை விரையில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் அதன் இணைத் தலைவர்களான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மின்சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, கேகாலை மாவட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோர் தலைமையில்  கேகாலை மாவட்ட செயகத்தில் நடைபெற்றது.

இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  கேகாலை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 3,000 வீடுகளை அமைத்து கொடுக்கவென 800 ஏக்கர் காணிகள் தேவைப்படுகின்றது.  இதில் 75 வீதமான காணிகள் புவியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பெற்றுகொடுக்கப்பட்டுள்ளன.  

இதனடிப்படையில் கேகாலை பெருந்தோட்ட கம்பனியின் மூலம் 190 ஏக்கர் காணிகளும், பொகந்தலாவை பெருந்தோட்ட கம்பனியின் மூலம் 49 ஏக்கர் காணிகளும், கெலனிவெளி பெருந்தோட்ட கம்பனியின் மூலம் 72 ஏக்கர் காணிகளும், மல்வத்த பெருந்தோட்ட கம்பனியின் மூலம் 17 ஏக்கர் காணிகளும் மற்றும் ஜனவசம மூலம் 3 ஏக்கர் காணிகளும் பெற்று கொள்ளப்பட்டுள்ளன.

இதைத்தவிர, மேற்படி மாவட்டத்தில் 6 பாடசாலைகளும் 3 மத வழிபாட்டு ஸ்தலங்களும் மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை புதிதாக அமைத்துக் கொடுக்வும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவில் பாதிக்கப்பட்ட தெஹியோவிட்ட தமிழ் வித்தியாலயத்தை வேறு இடத்தில் அமைப்பதற்காக கெலனிவெளி பெருந்தோட்ட கம்பனியின் மூலம் 2 ஏக்கர் காணியும் பெற்று கொள்ளப்பட்டுள்ளன. தற்போது இக்காணிகளை அளக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, மேற்படி மாவட்டத்தில் வீடுகளை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக முப்படையினரன் உதவிகளை பெற்று கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ் வீடுகள் அமைப்பதற்காக மூன்று திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளன. அரசாங்கத்தினால் 20 பேர்ச் காணியில் வீடுகள் அமைக்கப்படும். அதற்காக 12 இலட்சம் பெறுமதியான கட்;டப் பொருட்கள் அரசாங்கத்தினால் பெற்று கொடுக்கப்படும். உடலுழைப்பு மறு;றும் கட்டடப் பொருட்களை பெற்று கொடுப்பதன் மூலம் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீடு ஒன்று பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு சொந்தமாகும்.

இதற்காக சகல செலவுகளையும் மேற்கொள்வதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக, அமைச்சரவையில் அவசர அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டு அனுமதி பெற்று கொள்ளப்படவுள்ளது.

3,000 வீடுகளுக்கு மேலதிகமாக வீதி அபிவிருத்தி மற்றும் நீர், மின்சாரம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கத்தின் மூலம் பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் வெள்ளம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் மின்சாரம், நீர் உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கத்தின் மூலம் அமைத்து கொடுக்கப்படும்.

அத்தோடு, விவசாய நிலங்களை இழந்த மக்களுக்கு புதிதாக ஒரு ஏக்கர் காணிகள் வீதம் பெற்று கொடுப்பதற்கும் மற்றும் தமது சொத்துக்களை இழந்த சிறிய, பெறிய வியாபாரிகளுக்கு அரசாங்கத்தின் ஊடாக வந்திகளை பெற்று கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயம் மற்றும் வியாபாரத்தை இழந்த மக்கள் மீண்டும் அவற்றை சீர்படுத்திகொள்ளும் வரை அந்த குடும்பங்களுக்காக மாதாந்தம் சிறு கொடுப்பனவை வழங்குவதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தள்ளதாக மேற்படி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Thursday, June 30, 2016

இலங்கை தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்தின் யோசனையை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுப்பு

இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்தின் புதிய யோசனையை ஏற்கப்போவதில்லை என தொழிற்சங்கங்கள்  தெரிவித்துள்ளன.
தற்போது தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற 620 ரூபாய் ஒரு நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றன.
இதன் காரணமாக, தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்களுக்கும் இடையிலான கூட்டு ஓப்பந்தம் காலாவதியாகி 15 மாதங்களாகி விட்ட போதிலும், அதனை புதுப்பிக்க முடியாமல் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது.
சம்மேளனத்தினால் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள யோசனையில், 12 நாட்களுக்கு மட்டும் 720 ரூபாய் நாள் சம்பளம் வழங்கப்படும் . ஏனைய நாட்களில், பறிக்கப்படும் தேயிலை கொழுந்தின் நிறைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் துனைத் தலைவர்களில் ஒருவரான முத்து சிவலிங்கம், இந்த யோசனை சாத்தியமற்றது என்று கூறியுள்ளார்.
12 நாட்களை தவிர்த்து, ஏனைய நாட்களில் சம்பளம் கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவித்துள்ள அவர் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடையும் காலங்களில் தொழிலாளர்களுக்கு இது பாதிப்பாக அமையும் என்று தெரிவித்தார்.
மற்றுமோர் தொழிற்சங்கமான லங்கா பெருந்தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரான எஸ். இராமநாதன், தொழிலாளர்களுக்கு 12 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கும் திட்டத்திற்கான முயற்சி இது என்று தெரிவித்தார்.
மலையக தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் 620 ரூபாய் நாள் என்பது 2013-ஆம் ஆண்டு உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்களுக்குமிடையிலான கூட்டு ஓப்பந்தத்தின் போது நிர்ணயம் செய்யப்பட்டது.
இரு வருடங்களுக்கு ஒரு தடவை செய்யப்படும் கூட்டு ஒப்பந்தம், கடந்த வருடம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கள் முன் வைத்துள்ள கோரிக்கை காரணமாக 15 மாதங்கள் கடந்தும், அந்த ஓப்பந்தம் தொடர்பாக இழுபறி நிலையே காணப்படுகிறது.
-நன்றி- பி.பி.சி -

Wednesday, June 29, 2016

தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண போராட்டத்திற்கு அழைப்பு

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கான 2500ரூபா இடைக்கால கொடுப்பனவை தோட்ட கம்பனிகள் வழங்காமல், மாற்று திட்டத்தை முன்வைக்க முயல்வதாக குற்றஞ்சாட்டிய முன்னணி சோசலிஷ சட்சியின் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் அமைப்பாளரும் செயலாளருமாகிய துமிந்த நாகமுவ தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளில் பாராளுமன்றம் சென்றுள்ளவர்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க விரும்புவதில்லை. அவர்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க மாத்திரமே விரும்புகின்றனர் என்றார்.

29-06-2016 அன்று ஹட்டனில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உடன்படிக்கை 2015.03.31ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், உடன்படிக்கை பேச்சுவார்தை இழுபறி நிலையில் இருந்தது. 

இந் நிலையில் பொருளாதார நெருக்கடியில் உள்ள தொழிலாளர்களுக்கு இடைக்கால தொகையாக 2500ரூபாவை வழங்க அரசாங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றபட்டது. எனினும் தோட்ட கம்பனிகள் தட்டி கழிக்கும் நோக்கில் ஈடுபட்டுள்ளதுடன், மாற்று திட்டத்தை முன்வைக்க முனைகின்றனர். நாம் அதனை எதிர்கின்றோம். 

தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளில் பாராளுமன்றம் சென்றுள்ள திகாம்பரம், தொண்டமான் போன்றோர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க விரும்புவதில்லை. அவர்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க மாத்திரமே விரும்புகின்றனர். 

தேயிலை மலையில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் கால்களில் அட்டை கடித்து இரத்தம் உறிஞ்சுவது போலவே மலையக அரசியல்வாதிகளும் தொழிலாளர்களின் பிரச்சினையில் குளிர் காய்கின்றனர்.

200 வருட காலமாக இலங்கையில் வாழும் தோட்ட தொழிலாளர்களும் ஏனைய சமூகத்தை போல, சகல உரிமைகளும் உடையவர்களாக வாழவேண்டும். நாட் சாம்பளமாக 1000 ரூபாவும் காணி மற்றும் வீட்டுரிமையும் வழங்கபட வேண்டுமென தெரிவித்தார். 

எமது போரட்டமானது தமிழ் சிங்கள் முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தே ஆரம்பிக்க உள்ளோம். ஆகவே இப் போராட்டத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் சமுக அமைப்புகளும் தோட்ட தொழிலாளர்களும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். 

கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கவும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தோட்டக்கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களுக்கான சம்பளப்பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அவர் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களோடு இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தை நடாத்தி தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்தி தர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தைக்கான திகதி இதுவரை எமக்கு அறிவிக்கப்படவில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். 

தொழிலாளர்களது சம்பள உயர்வு தொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நேரடியாக தோட்டக் கம்பனிகளுடனும் தொழில் அமைச்சு ஊடாகவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டபோதும் தோட்டக் கம்பனிகள் என்றுமில்லாதவாறு பிடிவாதமாக இருந்து வருகின்றனது என்பது தாங்கள் அறிந்ததே.

தொழிலாளகளுக்கான சம்பள உயர்வு வழங்கப்படாமையினால் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர் என்பதை நாம் உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. இப்பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டு வருவதால் தொழிலாளர்கள் அதிருப்தியும், விரக்தியும் அடைந்த நிலையில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். 

இராமநாதன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரதிகள் தொழில் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனிவிரத்ன, முதலாளிமார் சம்மேளனம் செயலாளர் நாயகம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.