Tuesday, January 26, 2016
Saturday, January 9, 2016
லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி
தெஹியோவிற்ற, டென்ஸ்வர்த் தோட்ட மக்கள் தமது குடியிருப்பு மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தனர். மகஜரை பெற்றுக்கொண்ட அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் மலையக புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்துடன் இணைந்து உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
மேற்படி மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சப்ரகமுவ மாகாண கேகாலை மாவட்ட தெரணியகலை டென்ஸ்வர்த் தோட்டத்தில் வாழ்ந்து வரும் தொழிலாளர்களாகிய நாம் கடந்த 200 வருட வரலாற்றைக் கொண்டதுடன் தேயிலை உற்பத்தியின் மூலம் அந்நிய செலாவனியை ஈட்டித்தருவதற்கு காரணமாக இருந்த எமது வாழ்வாதாரம் இன்றும் அதே நிலையில் இருக்கிறது. கவனிப்பாரற்ற நிலையில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றோம்.
தோட்ட தொழிலாளர்களின் வரலாற்றில் பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறோம். அரசியல் ரீதியில் மலையகம் பல மாற்றங்களை கண்டுள்ள போதிலும் எமது பகுதி மக்கள் அரசியல் அநாதைகளாக வாழ்ந்து வருகின்றனர். பெருந்தோட்டப்புறங்களுக்கு பல நன்மைகள் கிடைத்தும் கூட எங்கள் தோட்டத்திற்கு எந்தவித வசதி வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வரும் நமது தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை பெற்றுக்கொண்ட பின்னர் எங்களைக் கண்டுகொள்வதே இல்லை. வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை. எமது தோட்டப்பகுதிகளுக்கு அண்மித்த கிராமப்பகுதி மக்கள் 20 வருடங்களுக்கு முன்னரே தனிவீட்டு உரிமையைப் பெற்றுக் கொண்டார்கள். கிராமப்பகுதிகள் பல அபிவிருத்திகளை கண்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களான நாம் இன்னும் அதே லயன் காம்பராக்களில் சிறிய அறைகளில் குடும்பத்தில் 10 பேருக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஒன்றாக வசிக்கும் துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வருகிறோம்.
இந்நிலை தொடருமானால் எங்கள் எதிர்கால சந்ததியினரின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கப்போகிறது. டென்ஸ்வர்த் தோட்டத்தில் தரம் 7 வரையான ஆரம்ப பாடசாலையும் இருக்கிறது. இப்பாடசாலை எவ்வித அபிவிருத்தியும் இல்லாத நிலையிலேயே இயங்கி வருகிறது. சில தேவைகள் உங்கள் கவனத்திற்கு கீழே குறிப்பிடுகின்றோம். பாடசாலை அபிவிருத்தி, பாதை அபிவிருத்தி, வாசிக சாலை வசதியின்மை, ஆலய திருத்த வேலை, மைதானம் இவ்வாறான பல தேவைகள் உள்ளன. இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றில் சில விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
அத்துடன் மிக முக்கிய விடயமான கிராமிய வீட்டு வசதி தொடர்பில் தோட்டத்தில் தற்போது இறப்பர் பால் சேகரிக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு நிலப்பரப்பில் இருந்த இறப்பர் மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அவ்விடத்தில் இடமோ பாதை, பாடசாலை, கோயில் பிள்ளை பராமரிக்கும் நிலையம், மின்சார வசதி, நீர் வசதி போன்ற பல முக்கிய தேவைகளை இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி இருக்கிறது.
அது மட்டுமல்லாது எந்தவித மண்சரிவு அபாயமும் அறிவிக்கப்படாத இடமாக இருக்கின்றது. இவ்விடத்தில் இருக்கும் மரங்களை அகற்றி மீண்டும் இறப்பரோ அல்லது வேறு எந்த பயிர்களோ பயிரிடும் முன்பதாக அந்த இடத்தை பெற்றுக் கொடுத்து லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனிவீட்டு உரிமையை பெற்றுக்கொடுக்குமாறு பணிவோடும் மிக தாழ்மையோடும் எங்கள் தோட்ட பொது மக்களாகிய நாங்கள் எங்களுடைய கையொப்பங்களை இட்டு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹேவாஹெட்டையில் மண்சரிவு
அங்குராங்கெத்த ஹேவாஹெட்டை தோட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாரிய மண்சரிவு, தாழிறக்கம் மற்றும் பாறைகள் புரண்டதன் காரணமாக 25 தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாறு நிலத்தாழிறக்கம், மண்சரிவு, வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் மலையிலிருந்து கற்களும் புரண்டு கொண்டிருக்கின்றன. சீரற்ற காலநிலையுடன் தொடர்ச்சியாக மழை பெய்வதன் காரணமாக இடம்பெயர்ந்த மேற்படி 65 பேரும் ஹேவா ஹெட்டை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை பாரிய சத்தத்துடன் பாறை ஒன்று உருண்டு வந்ததைத் தொடர்ந்து நேற்றைய தினமும் பாராங்கற்கள் வரத் தொடங்கின. இதேநேரம் மண்சரிவும், நிலவெடிப்பும், நிலத்தாழிறக்கமும் சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்திருந்தன.
நிலைமையுணர்ந்து உடனடியாக செயற்பட்ட தோட் ட முகாமையாளர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். கிராம உத்தியோகத்தர் வி. நந்தகுமார் மற்றும் அங்குராங்கெத்த பிரதேச செயலாளர் பரதிப் சுமனசேகர உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர அவசிய உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகைதந்திருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கண்டி உப.தலைவர் சின்னையா வேலு மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மானில பிரதிநிதி கறுப்பையா ராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் நிலைமைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அங்கு தொடர்ந்தும் சீரற்ற காலநிலையே காணப்பட்டு வருகின்றது.
பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் தீ விபத்து
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் இன்று பிற்பகல் 12.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 16 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 16 குடும்பங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கிரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது.
பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், சிறிது சிறிதாக சேகரித்த தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Friday, January 8, 2016
சாத்வீக போராட்டத்துக்கு தயாராக வேண்டும்
மலையக இளைஞர் - யுவதிகளும் வடக்கு, கிழக்கு இளைஞர் - யுவதிகளும் ஒன்றிணைந்து, உரிமைகளை வென்றெடுப்பதற்கான சாத்வீக போராட்டத்துக்கு தயாராக வேண்டுமெனவும் அதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் நிலவிய யுத்தம் காரணமாக நாம் இணைந்து செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எமது மக்கள் மீது சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலை அன்று இருந்ததன் காரணமாக நாங்களும் மிகுந்த பயத்துடன் வாழக்கூடிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகினோம்' என்றார். 'தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. எனவே, இந்த சூழ்நிலையை நாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மலையக இளைஞர், யுவதிகளையும் வடக்கு, கிழக்கு இளைஞர், யுவதிகளையும் ஒன்றிணைத்து சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்து, அதன்மூலம் எமது உரிமைகளைப் பெறுவதற்கு முன்வரவேண்டும்.
மலையக இளைஞர்களுடைய பிரச்சினைகளும் வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுடைய பிரச்சினைகளும் வேறுபட்டவை. ஆனாலும், நாம் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயற்பட்டால் அனைத்துவிதமான விடயங்களையும்; வெற்றிகொள்ள முடியும். நாங்கள் தற்போது சமூக ரீதியாக ஒன்றுபட்டு செயற்படுகின்ற நிலைமை உருவாகியுள்ளது. அதனால், வடக்கு - கிழக்கு இளைஞர்களை இணைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.மலையக இளைஞர்களை ஒன்றிணைக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்' என்றும் அவர் கூறினார். '
மலையகத்தை பொறுத்த வரையில் எமக்கு கல்வி ரீதியாக பல பிரச்சினைகள் உள்ளன. மலையகத்தில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான குறைபாடுகள் நிலவுகின்றன. அவ்வாறான விடயங்களில் வடக்கு, கிழக்கில் இருந்து எமக்கு உதவி செய்ய முடியும். இந்த நாட்டில் நாம் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும்; செயற்பட்டால் மாத்திரமே எமது இலக்கை அடைய முடியும். மலையகத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்பு தற்போது ஓர் அமைப்பாக அதாவது தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அமைப்பாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.
எதிர்காலத்தில் தமிழ்; தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலம் கனிந்து வருகின்றது. அதனையே மக்களும் எதிர்பார்க்கின்றனர். எனவே, எதிர்கால எமது இளைஞர்கள் ஒற்றுமையாக செயற்படுவதற்காக நாம் இன்று அதற்கான அடித்தளத்தை இடவேண்டும். அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழு ஒத்துழைப்பையும் எமக்கு வழங்க வேண்டும்' என அவர் கூறினார்.
மலையக பல்கலைக்கு கெட்டப்புலாவில் காணி
புதிய ஆட்சியில், மலையகத்தின் கல்வி வளர்ச்சியை அதிகரிக்கவும் மலையகத்தில் பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழகக் கல்லூரியை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாவலபிட்டி, கெட்டபுலா தோட்டத்தில் பல்கலைக்கழக கல்லூரியொன்றை நிர்மாணிப்பாதற்காக 5 ஏக்கர் காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'நுவரெலியா மாவட்டத்தில் தமிழ், சிங்கள மொழி மூலமான மாணவர்கள், ஆங்கில மொழியில் கல்வி கற்பதற்காக புதிய பாடசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளது. 2016 தொடக்கம் 2020ஆம் ஆண்டுக் காலத்துக்கான புதிய கல்விக்கொள்கையில், மலையகக் கல்வி அபிவிருத்தி தொடர்பில் தேசிய கல்வி நிறுவனம் புதிய நடைமுறைகளையும் அதற்கான பிரிவையும் ஆரம்பிக்கவுள்ளது' என்றார். 'அதேபோல் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு, ஆளனி பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர்தரத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளை அபிவிருத்தி செய்யவும் அதற்கான ஆசிரிய நியமனங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்தாக அவர் மேலும் கூறினார்.
மெத்தகந்த தோட்ட மக்களுக்கு பலவந்தமாக காணிகள்
பலாங்கொடை மெத்தகந்த தோட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கும் அரசாங்கத்தினால் அமைத்துகொடுத்தக்கப்படவுள்ள வீடுகளுக்கு தோட்ட நிர்வாகம் காணிகளை ஒதுக்கி கொடுப்பதற்கு முன்வராவிட்டால் அத்தோட்டத்திலே பலவந்தமாக காணிகளை பிரித்துகொடுக்க வேண்டிய நிலை ஏற்படுமென சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இணைத் தலைவர்களான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க ஆகியோரின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பலாங்கொடை பிரதேச செயலாளர் சம்பிக நிரோஷ் தர்மபால, 'மெத்தகந்த தோட்டத்தில் மண்சரிவால பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளபோதிலும் அவர்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பதற்கான போதிய காணிகளை மேற்படி தோட்ட நிர்வாகம் வழங்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்க முடியாதுள்ளது' என்றார்.
'மேற்படி தோட்டத்தில் போதிய காணிகள் கிடைக்குமாக இருந்தால் விரைவில் வீடுகள் அமைத்து கொடுக்கப்படும். எனவே காணிகளை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அவர் கூறினார். இதற்கு பதிலளித்து உரையாற்றும்போதே சப்ரகமுவ மாகாண முதலமைச்சருமான மஹிபால ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'தோட்ட மக்கள் வியர்வை சிந்தி, அரும்பாடுபட்டு கம்பனிக்கு இலாபத்தை பெற்று கொடுக்கின்றார்கள். ஆபத்தான நிலைமைகளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் முன்வந்தாலும் தோட்ட நிர்வாகங்கள் அதற்கு இடையூராக உள்ளன.
குறிப்பாக தோட்ட மக்கள் தமக்கான மலசலகூடங்களை அமைத்துகொள்வதென்றாலும் அதற்கான இடத்தை தோட்ட நிர்வாகம் வழங்குவதில்லை என நான் அறிந்துகொண்டேன். பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற தோட்ட தொழிலாளர்களும் மனிதர்கள்தான். அவர்களின் முன்னேற்றத்துக்கு தோட்ட நிர்வாகம் தடையாகவுள்ளது. தோட்ட மக்கள் குறித்து தோட்ட நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை. இம்மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுக்க தோட்ட நிர்வாகம் முன்வராவிட்டால் மக்களால் நியமிக்கப்பட்ட அரசியல்வாதிகள் என்ற வகையில், மெந்தகந்த தோட்ட மக்களுக்கு அந்த தோட்டத்திலே காணிகளை பலவந்தமாக பெற்றுகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இதுகுறித்து தோட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்' என அவர் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)




