Monday, March 10, 2014

மலையகத்தின் தேவை- தலைநகரின் தேவை என்ன என்பதை இ.தொ.கா உணர்ந்திருக்கிறது

தேர்தல் காலங்களில் தமது ஆதரவாளர்களிடம் மக்கள் பிரதிநிதி எனக்கூறப்படுபவர்கள் அச்சமின்றி செல்ல வேண்டும். வாக்குகளை பெற்று பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை பெற்று விட்டால் மாத்திரம் போதாது. மக்களிடத்தில் சென்று அவர்களது குறைகளை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் செயற்பட வேண்டியது பிரதானமாகும். அவ்வாறு செயற்பட்டவர்களே தயக்கமின்றி அவர்களிடத்தில் செல்லவும் முடியும்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மேல்மாகாண சபைக்கான தேர்தலுடன் முடிச்சு போடுவதற்கான தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ{க்கு கிடையாது. மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தின் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை காங்கிரஸ் உணர்ந்திருக்கின்றது என்று அதன் உபதலைவரும் கொழும்பு மாவட்ட தேர்தல் பிரசார பொறுப்பாளருமான எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது மக்களிடத்தில் செல்வதற்கு எந்த தயக்கமும் கொள்ளத் தேவையில்லை. நாம் மக்களுக்கு ஆற்றிய சேவைகளை முன்னிறுத்தியே அவர்களிடத்தில் செல்கின்றோம். உரிமை என்றும் போராட்டம் என்றும் காலங்களை கடத்திக்கொண்டிருப்பதால் நடைபெற போவது எதுவுமில்லை. எனவே, இன்றைய நிலையினை உணர்ந்து மக்களின் தேவைகளை அறிந்து ஆக்க பூர்வமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்களில் இறங்க வேண்டும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸைப் பொறுத்தவரையில் அது இடமறிந்து செயல்படும். மலையகத்தின் தேவை என்ன என்பதையும் தலைநகரின் தேவை என்ன என்பதையும் காங்கிரஸ் நன்கு உணர்ந்திருக்கின்றது. தலைநகர் வாழ் தமிழ் மக்களிடத்தில் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினைப் பற்றி பேசுவதால் அர்த்தம் இருக்காது. அதேபோன்றுதான் மலையகத்துக்கு சென்று தலைநகர் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவது பிரயோசனம் அற்றதாகும் கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை இ.தொ.கா. நிறைவேற்றிக் காட்டும்.

சிறுவனின் முகத்தில் சூடு வைத்த பாட்டிக்கு 10,000 ரூபா அபராதம்

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் விக்னேஸ்வரன் என்ற சிறுவனின் முகத்தில் சூடு வைத்த பாட்டிக்கு அட்டன் நீதிமன்றம் 10ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது

குறித்த சிறுவனின் தந்தை, தாய் இருவரும் வெளிநாட்டில் பணிப்புரிவதால் பாட்டியின் பாதுகாப்பிலேயே குறித்த சிறுவன் இருந்துள்ளான். இந்நிலையில் குறித்த சிறுவன் பாடசாலைகளில் சில பொருட்களை திருடுவதனால் தான் பாட்டி விறகுகட்டையால் சூடு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து பாட்டியை கைது செய்து அட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 8, 2014

Saturday, February 15, 2014

மலையகத்தில் கடும் வரட்சி

மலையகத்தில் தற்போது காணப்படும் வரட்சியான காலநிலை காரணமாக மலையக மக்களுக்கு மற்றும் கிராமபுர மக்களுக்கும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைபோல் விவாசாயிகளுக்கும் தேயிலைக்கும் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 

மலையகத்தில் நீர்தேக்கமான காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை, கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களில் நீர்மட்டம் மின்சாரத்தை உற்பத்தியை செய்யமுடியாத அளவில் குறைந்து இருப்பதாக மின்சார சபையும் தெரிவிக்கின்றது. 

தேயிலை தோட்டங்களில் தேயிலை கருகி இருப்பதனால் தோட்ட தொழிலாளிகளின் வேலை நாட்கள் குறைந்துள்ளதால் அவர்களின் பொருளாதார வசதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையக பகுதிகளில் தோட்ட தொழிலாளியும் கிராமபுர மக்களும் மரக்கறி உற்பத்தியை மிக சிறப்பாக செய்துள்ளனர். ஆனால் தற்போது இருக்கும் காலநிலையின் காரணமாக மரக்கறி வகைகளை உற்பத்தி செய்துகொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். 

அதேபோல் மலையக பகுதிகளில் குடிநீர் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குடிநீருக்காக குடிநீர் காணப்படும்  தூர இடங்களுக்கு சென்று குடிநீரை பெறுகின்றார்கள். 

மாடுகளை வளர்ப்பவர்களுக்கு புற்கள் இல்லாத காரணத்தால் பால் உற்பத்தியும் குறைந்திருப்பதாக பால் உற்பத்தியுள்ளார்கள் தெரிவிக்கின்றனர். 

நீர் காணப்படும் இடங்களில் தீ வைத்ததால் குடிநீருக்கு மிக பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிரி தெரிவிக்கின்றார். 

மலையகத்தில் இவ்வாறான காலநிலை தொடர்ந்தும் காணப்பட்டால் மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்கப்படும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம்

மலையக மக்களுக்கு இந்தி அரசினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன் பொதுச்செயலாளரும், கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கெட்டம்பே விலங்கள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது இந்திய வீட்டுத்திட்டம் பற்றி கலந்துரையாடப்பட்டது. 

இந்திய வீட்டுத்திட்டம் கிராமவாரியாக அனைவருக்கும் வழங்கப்படும் எனவும், மேலும் அங்கு பாடசாலை, கோவில், தேவாலயங்கள், பள்ளிவாசல் போன்ற சகல வசதிகளும் தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரஜாசக்தி, நவசக்தி ஆகிய செயற்திட்டத்தினூடாக இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் உயர் அதிகாரிகள் தோட்ட முகாமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா

மலையகத்தின் அடையாளமாக இருந்து கடந்த ஐம்பதாண்டு காலமாக எழுத்துலகில் முத்திரைப்பதித்து வெற்றிநடை போடும் மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஈழத்து இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவருமான தெளிவத்தை ஜோசப்பின் இரண்டாவது சிறுகதை நூலான ´தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்´ வெளியீடும் அவரது ஏனைய இரண்டு நூல்களின் அறிமுகமும் பாராட்டு விழாவும் 16-02-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது. 

தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள் 

1960 களில் இருந்து தொடர்ச்சியாக ஐம்பது வருடமாக எழுதி வரும் தெளிவத்தை ஜோசப் அவர்களின் சிறுகதைகள் 1979 ஆம் ஆண்டு பேராசிரியர் மு.நித்தியானந்தன் தனது அவர்களின் வைகறை பதிப்பகம் ஊடாக வெளியிட்ட ´நாமிருக்கும் நாடே´ தொகுதிக்குப் பின்னர் நூலுருப்பெறவில்லை. அந்தக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக மல்லியப்புசந்தி திலகரின் ´பாக்யா பதிப்பகம்´ ´தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்´ எனும் மகுடத்தில் 17 கதைகளை தொகுத்து வெளியீடு செய்துள்ளது. 

இதன் வெளியீட்டு விழா அன்றைய தினம் கொழும்புத் தமிழச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கோ.நடேசய்யர் அரங்க அமர்வில் நடைபெறவுள்ளது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் காப்பாளரும் முன்னாள் அமைச்சுச் செயலாளருமான எம்.வாமதேவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நூலினை மூத்த பத்திரிகையாளர் திருமதி.அன்னலடசுமி ராஜதுரை வெளியிட்டு வைக்க புரவலர் ஹாசிம் உமர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் சிங்கள-தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் காப்பாளர் அமரசிங்க குடகல்லார ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொள்கின்றனர். நூலாய்வுரையை திறனாய்வாளர் லெனின் மதிவானம் நிகழ்த்தவுள்ளார். 

மீன்கள் 

தமிழகத்தின் எழுத்தாளர் ஜெயமோகனின் பிரபல படைப்பான ´விஷ்ணுபுரம்´ பெயரில் இயங்கும் வாசகர் வட்டத்தினரே தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு ´விஷ்ணுபுரம்´ விருதினை வழங்கி விழாவெடுத்திருந்தனர். அதே விழாவில் இன்னுமொரு பரிசாக தெளிவத்தையின் 9 சிறுகதைகளை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே தொகுப்பாசிரியராக ´மீன்கள்´ எனும் மகுடத்தில் வெளியிட்டு தெளிவத்தைக்கு கௌரவம் செய்தார். தெளிவத்தையின் ´கூனல்´ என்ற சிறுகதையை உலகப்பெருமை மிக்க சிறுகதையென எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறிப்பிட்டுள்ளார். 

தெளிவத்தையின் ´மீன்கள்´ எனும் சிறுகதையை தமிழில் வெளிவந்த முதல் நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக ஜெயமோகன் பட்டியலிட்டுள்ளார். அந்த ´மீன்கள்´ தொகுப்பின் அறிமுக நிகழ்வு மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை அரங்க அமர்வாக ´ஞானம்´ ஆசிரியர் தி.ஞானசேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது. நூலின் முதல் பிரதியை கொடகே பதிப்பக உரிமையாளர் தேசபந்து ஸ்ரீ சுமன கொடகே அவர்கள் வெளியிட்டு வைக்க தொழிலதிபர் நடராஜா, பேராசிரியர் தை.தனராஜ், கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் இரகுபதி பால ஸ்ரீதரன், சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் செயலாளர் கமல் பெரேரா ஆகியோர் பெற்றுக்கொள்ளவுள்ளனர். நூலாய்வுரையை கவிஞரும் சிறுகதையாசிரியருமான அல்அஸ{மத் ஆற்றவுள்ளார். 

குடைநிழல் 

தேசிய கலை இலக்கிய பேரவையும் - சுபமங்களாவும் இணைந்து நடாத்திய போட்டியில் பரிசு பெற்ற நாவலான தெளிவத்தை ஜோசப்பின் ´குடைநிழல்´ கொடகே பதிப்பகத்தினரால் ஏற்கனவே நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாவலின் பெறுமதி; கருதி அதனை மறுபதிப்பு செய்து தமிழகத்தின் ´எழுத்து´ பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். விஷ்ணுபுரம் விருது விழாவில் இன்னுமொரு பரிசாக அமைந்த இந்த மறுபதிப்பு நூல் இவ்விழாவில் மலையக சிறுகதை முன்னோடி என்.எஸ்.எம்.இராமையா அரங்க அமர்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நூல் தமிழகத்தில் வெளிவருவதற்கு பங்களிப்பை வழங்கிய கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பெ.முத்துலிங்கம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் எழுத்தாளரும் கலைஞருமான அந்தனிஜீவா நூலினை வெளியிட்டு வைக்க துரைவி பதிப்பக உரிமையாளர் துரைவி.ராஜ்பிரசாத் சட்டத்தரணி சோ.தேவராஜா கவிஞர் மேமன்கவி மற்றும் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் ஹேமசந்திர பத்திரண ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர். 

தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு பாராட்டு 

தமிழகத்தில் ´விஷ்ணுபுரம்´ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதன் மூலம் தமிழக மக்களுக்கு மலையக மக்கள் பற்றிய காத்திரமான செய்தியினை எடுத்துச் சென்ற தெளிவத்தை ஜோசப் அவர்களின் ஆளுமையை பாராட்டி மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் கௌரவம் செய்யவுள்ளது. 

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் உபதலைவரான மு.சிவலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெறும் பாராட்டு நிகழ்வில் மன்றத்தின் இணைச் செயலாளர்களான ஜி.சேனாதிராஜா இரா.சடகோபன் ஆகியோருடன் இலக்கிய செயற்பாட்டாளர் மு.தயாபரன் மற்றும் காப்பியக்கோ ஜின்னாஹ் சரிப்புதீன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கவுள்ளனர். 

நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் ஒழுங்கமைப்பினை மல்லியப்புசந்தி திலகர் மேற்கொள்ள சுப்பையா கமலதாசன் வரவேற்புரை நிகழ்;த்தவுள்ளார். அமுதவிழா காணும் தெளிவத்தை ஜோசப் அவர்களின பிறந்த நாளான அன்று அவரது வாழ்க்கைப் பயணத்தினை தொகுப்பாக ஆவணப்படுத்தும் காணொளியும் தேநீர் விருந்தும் சிறப்பு நிகழ்வாக இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, February 13, 2014

பாதையை புனரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை நகரத்தில் இருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மணிக்பாலம் கால்நடை பண்ணைக்கு செல்லும் பிரதான பாதை பல வருடகாலமாக செப்பணிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றதால் இப்பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களக்கு முகம் கொடுக்கின்றனர். 

இதேவேளை ஹோம்வூட் தோட்டம் மற்றும் போபத்தலாவ பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர்களும் கர்ப்பிணி தாய்மார்களும் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கும் ஆளாகின்றனர். 

நடந்து முடிந்த மத்திய மாகாண சபை தேர்தலின் போது இப்பாதையை புனரமைப்பு செய்வதாக வாக்குறுதிகளை வழங்கியவர்கள் தேர்தலின் பின் இப்பிரதேசத்தை கண்டும்காணாமல் இருப்பதாக மக்கள் விசனம் தொவிக்கின்றனர். 

இப்பாதையை புனரமைத்து தருமாறு நுவரெலியா மாவட்ட அரசியல்வாதிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்த போதிலும் எவரும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று (13.02.2014) மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டனர்.