தேர்தல் காலங்களில் தமது ஆதரவாளர்களிடம் மக்கள் பிரதிநிதி எனக்கூறப்படுபவர்கள் அச்சமின்றி செல்ல வேண்டும். வாக்குகளை பெற்று பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை பெற்று விட்டால் மாத்திரம் போதாது. மக்களிடத்தில் சென்று அவர்களது குறைகளை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் செயற்பட வேண்டியது பிரதானமாகும். அவ்வாறு செயற்பட்டவர்களே தயக்கமின்றி அவர்களிடத்தில் செல்லவும் முடியும்.
தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மேல்மாகாண சபைக்கான தேர்தலுடன் முடிச்சு போடுவதற்கான தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ{க்கு கிடையாது. மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தின் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை காங்கிரஸ் உணர்ந்திருக்கின்றது என்று அதன் உபதலைவரும் கொழும்பு மாவட்ட தேர்தல் பிரசார பொறுப்பாளருமான எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது மக்களிடத்தில் செல்வதற்கு எந்த தயக்கமும் கொள்ளத் தேவையில்லை. நாம் மக்களுக்கு ஆற்றிய சேவைகளை முன்னிறுத்தியே அவர்களிடத்தில் செல்கின்றோம். உரிமை என்றும் போராட்டம் என்றும் காலங்களை கடத்திக்கொண்டிருப்பதால் நடைபெற போவது எதுவுமில்லை. எனவே, இன்றைய நிலையினை உணர்ந்து மக்களின் தேவைகளை அறிந்து ஆக்க பூர்வமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்களில் இறங்க வேண்டும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸைப் பொறுத்தவரையில் அது இடமறிந்து செயல்படும். மலையகத்தின் தேவை என்ன என்பதையும் தலைநகரின் தேவை என்ன என்பதையும் காங்கிரஸ் நன்கு உணர்ந்திருக்கின்றது. தலைநகர் வாழ் தமிழ் மக்களிடத்தில் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினைப் பற்றி பேசுவதால் அர்த்தம் இருக்காது. அதேபோன்றுதான் மலையகத்துக்கு சென்று தலைநகர் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவது பிரயோசனம் அற்றதாகும் கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை இ.தொ.கா. நிறைவேற்றிக் காட்டும்.
No comments:
Post a Comment