Monday, February 28, 2011

சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கத் தலைமைகள் மௌனம் ஏன்?

கடந்த வருடங்களில் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு தொடர்பாக மலையக தொழிற்சங்கத் தலைமைகள் ஐந்தாறு மாதங்களுக்கு முன்பிருந்தே ஆரவாரத்துடன் அமர்க்களமாக குரல் எழுப்பி வந்தன. முழங்கின. அறிக்கைகளை ஆர்ப்பரித்துவிட்டு வந்தன.

இந்த வருடம் இன்னும் சில வாரங்களே இருக்கின்ற நிலையில் 20 இற்கும் மேலான தொழிற்சங்கங்கள் இருந்தும் ஒரே ஒரு தொழிற்சங்கம் மாத்திரம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 700 ரூபா சம்பள உயர்வினை வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்து அறிக்கை விட்டிருக்கிறது. ஏனைய தொழிற்சங்கங்கள் மௌனம் சாதித்து வருவது எதனால், இதுதான் தொழிலாளர் நலன் கருதி ஆற்றுகின்ற சேவையா?

கடந்த காலங்களில் நாம் கேட்ட சம்பளத்; தொகை கிடைக்கவா செய்தது என்ற தாழ்வு மனப்பான்மையில் இருக்கின்றனரா, அல்லது பெரும் தொழிற்சங்கங்கள் என்ன தொகை கேட்கிறதோ அதனைப் பார்த்துவிட்டு பிறகு கேட்போம் என்ற நிலையில் இருக்கின்றனவா? ஆனால் ஏனைய தொழிற்சங்கங்கள் கேட்கும் தொகைக்கு ஏறுக்கு மாறாக அல்லது கூட்டிக் குறைத்து கேட்போம் என்ற நிலையில் இருப்போம் என்கின்றனரா?

தொழிலாளர்கள் நலனையே கொண்டு செயற்படும் தொழிற்சங்களாக இருந்தால் முன் கூட்டியே இந்த தொழிற்சங்கங்கள் கேட்டிருக்கும் அல்லவா?

இப்படி காலத்தை கடத்தி வந்தால் எப்படி? தலைவர்களுக்கு அப்படி ஒன்றும் நட்ட ஏற்பட போவதில்லை எப்படியும் தோட்டதொழிலாளர்களே நட்டமும் கஷ்டமும் அடைவர்.

வருடா வருடம் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கிடைக்கும் என்று தலைவர்களின் வாக்குறுதிகளை வேதவாக்காக எண்ணி மனப்பால் குடித்து பின்னர் இறுதியில் பெரும் ஏமாற்றம் அடைகின்றனர்.

இந்த நிலை தொடரக்கூடாது. தொழிற்சங்க மகத்துவம் மலையகத்தில் ஓரளவுக்கு மங்கி வருகின்ற வேளையில் தொழிலாளர் தலைவர்கள் மீதும் தொழிற்சங்கங்கள் மீதும் முன்பு போல் பிடிப்பு ஏற்பட வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஆயுதம் தொழிலாளர்களுக்கு நியாயபூர்வமான சம்பளத்தை பெற்று தருவதுதான். தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த காலங்களில் பெரும் தொகையினைப்பெற்றுத தருவோமென்று கூறி கடைசியில் யானைப் பசிக்கு சோளப்பொரி என்ற கதையாக்கியதை போன்ற கதையாகி விடக்கூடாது.

தலைவர்கள் தியாக சிந்தையுடனும் உயர் சிந்தையுடனும் உழைகை;கும் வர்க்கத்தின் மேன்மைக்காக ஒன்றிணைந்து இவ்வருடம் சம்பள உயர்வினை பெற்றுத் தருவார்கள் என்று பலரும் நம்பியே இருக்கின்றனர்.

இராகலை டி. ஆர். எஸ்

மரக்கறி உற்பத்தியாலர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு


மலையகத்தில் மரக்கறி உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் மரக்கறி வகைகளை சாக்குகளில் அடைத்து அனுப்புவது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் நுவரெலியா, கந்தப்பளை, வெலிமடை பகுதி விவசாயிகள் வர்த்தகர்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்

மரக்கறி வகைகளை உற்பத்தி செய்யும் தோட்டங்களில் இருந்து அதிக தூரத்தில் உள்ள பிரதான வீதிக்கு கொண்டுவரும் போது பிளாஸ்டிக் கூடைகளில் கொண்டு வருவது சிரமமாக இருப்பதாகவும் அதனால் சாக்குகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் அமைச்சரிடம் விடுதத கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

வெளிமாவட்டங்களுக்கும் மரக்கறி வகைகளை அனுப்பும்போது பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்துவதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.இன்னும் ஆறு மாதங்களில் அதனை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சாக்குகளில் மரக்கறிகளை அனுப்பும்போது அவை பழுதடைவதால் பிளாஸ்டிக் கூடைகளில் அவற்றை அனுப்பவேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

சாக்குகளில் மரக்கறிகளை உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து பிரதான பாதைக்கு கொண்டுவர சாக்குகளை பயன்படுத்த பொலிஸார் தடுப்பது குறித்தும் அமைச்சரின் கவனத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

Friday, February 25, 2011

தோட்டத் தொழிலாளியின் பயிர்ச் செய்கையை அழிக்க தோட்ட நிர்வாகம் முயற்சி


ஹொரணை பிரதேசத்திலுள்ள தோட்டத் தொழிலாளி ஒருவர் தமது குடியிருப்புக் குமுன்னால் உள்ள வீட்டுத் தோட்டத்தில் நீண்டகாலமாக மேற்கொண்டுவரும் தென்னை, வாழை, மரவள்ளி மற்றும் பயிர் வகைகள் கொண்ட காணியை தோட்ட நிர்வாகம் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டு மைதானத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியுடன் பயிச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள காணியையும் உள்ளடக்கும் நோக்குடனேயே தோட்ட நிர்வாகம் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கிராம உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி அதிகாரி, பொலிசார் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த தொழிற்சங்க பிரதிநிதி ஒருவரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக இவர் இங்கு பயிர்ச்செய்கை மேற்கொண்டுவரும் அதேவேளையில் 2007ம் ஆண்டிலும் தொழிலாளர்கள் இது போன்ற பயிர்ச்செய்கையைத் தோட்ட நிர்வாகம் அழித்து பெரும் சேதம் விளைவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பயிரிடப்படாத தோட்டக் காணிகளை சுவீகரித்து வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க அரசாங்கம் திட்டம் மேற்கொண்டிருக்கும் வேளையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பயிர்ச்செய்கையை தோட்ட நிர்வாகம் அழிக்க முற்படுவது குறித்து தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Thursday, February 24, 2011

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ 500 ஆக உயர்த்ப்பட வேண்டும்- மனோ கணேசன்



தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 285 ரூபாய் இன்று வழங்கப்படுகின்றது. இந்த அடிப்படை சம்பளம் மார்ச் மாதம் 30ம் திகதிக்கு பிறகு 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும். இதுவே எமது மலையக தமிழ் கூட்டமைப்பின் முதன்மை கோரிக்கையாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் ராகலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்; உரையாற்றியபோது தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று 285 ரூபாய் நாட்சம்பளமாக வழங்கப்படுகின்றது. இந்த தொகை 2009ம் வருடம் கையெழுத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டதாகும். கடந்த இரண்டு வருடங்களில் விலைவாசி வானளாவ உயர்ந்து விட்டது. அத்தியாவசிய உணவு பொருட்களான மாவு, அரிசி, சீனி, தேங்காய் விலைகள் இரண்டிலிருந்து, மூன்று மடங்குவரை உயர்ந்துவிட்டன. ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் இன்னும் 285 ரூபாய்தான். எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தப்பட்ச அடிப்படை சம்பளமாக 500 ரூபாய் வழங்கப்பட்டேயாக வேண்டும்.

கடந்தமுறை சம்பளம் 405 ரூபாய் என்று சொல்லப்பட்டாலும் அதில் அடிப்படை சம்பளமாக 285 ரூபாவே கிடைத்துவந்தது. மிகுதி 120 ரூபாய் வேலைக்கு சமூகமளிக்கும் நாட்களையும், பறிக்கப்படும் கொழுந்து நிறையையும் சார்ந்த ஊக்குவிப்பு கொடுப்பனவுகளாக வழங்கப்பட்டன. இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு தொகை நடைமுறை காரணங்களினால் பொரும்பாலான தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. ஆகவேதான் அடிப்படை சம்பளத்தை 285 ரூபாயிலிருந்து 500 ரூபாவாக உயர்த்துமாறு நாம் கோருகிறோம்.
கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் இன்று மக்கள் முன்னால் வந்து வாக்குகளை கோருவதற்கு முன்னர் சம்பளத்தை உயர்த்தவேண்டும். சம்பள பேச்சுவார்த்தையை கூட்டு ஒப்பந்தம் மார்ச் 30 திகதிக்கு பிறகு காலாவதியான பின்னர்தான் நடத்தவேண்டும் என்பது கட்டாயம் இல்லை. உண்மையில் இந்த பேச்சுவார்த்தைகள் ஜனவரி மாதமே ஆரம்பிக்கப்பட்டு, இன்று முடிவுக்கு வந்திருக்கவேண்டும். தேர்தல் நடக்கும்வரை பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காமல் காலம் கடத்துவது அரசியல் நோக்கம் கொண்டதாகும். தேர்தலுக்கு பிறகு 25 ரூபாவை உயர்த்திவிட்டு சம்பள உயர்வு வழங்கிவிட்டோம் என்று சொல்லும் நிலைமை ஏற்படக்கூடாது.

பொகவானத் தோட்டத் தொழிலாளர்களின் பணி நிறுத்தம் முடிவு


பொகவந்தலாவை பொகவானத் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் மேற்கொண்டு வந்த பணி நிறுத்தப்போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமையைத் தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் இன்று 24 ஆம் திகதி முதல் தமது வழமையான தொழிலுக்குச்சென்றனர்.

பொகவான தோட்டத்தில் கடந்த 19 ஆம் திகதி தேயிலை நாற்றுமேடையில் தொழில் புரிகின்ற தொழிலாளி ஒருவரை அந்தத்தோட்டத்தைச்சேர்ந்த உதவித்தோட்ட அதிகாரியும் தோட்ட உத்தியோகஸ்தர் ஒருவரும் சேர்ந்து தாக்கியதைத்தொடர்ந்து குறிப்பிட்டத்தொழிலாளியும் தோட்ட உதவி அதிகாரியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் தோட்டத்தொழிலாளியைத் தாக்கியவர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேறுமாறுக்கோரி பொகவானத் தோட்டத்தைச்சேர்ந்த சுமார் 700 தொழிலாளர்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் பணிநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தப்போராட்டம் தொடர்பாக தோட்டத்தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் தோட்ட நிருவாகத்திற்குமிடையில் அட்டன் தொழிற்திணைக்களத்தில் நேற்று 23 ஆம் திகதி மாலை இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட இணக்கப்பாட்டினைத்தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் இன்று 24 ஆம் திகதி முதல் மீளவும் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.


யெல்வடன் தோட்ட குடியிருப்புகளில் வெடிப்பு; 115 பேர் பெரும் பாதிப்பு

பதுளை யெல்வடன் தோட்டத்தில் தோட்டக் குடியிருப்புகளில் ஏற்பட்ட திடீர் வெடிப்புகளையடுத்து 49 குடும்பங்களைச் சேர்ந்த 115 பேர் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறி ஹாலி எல கொப்பேகடுவ சிங்கள வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழைகாரணமாக இப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், நிலம் மற்றும் குடியிருப்புகளில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் அச்சம் காரணமாக இந்தக் குடியிருப்புகளில் வசித்தவர்கள் ஹாலி எல கொப்பேகடுவ சிங்கள வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.இவர்களை ஹாலி எல பிரதேச செயலாளர் எம்.ஆர்.ரஞ்சித் நேரில் சென்று பார்வையிட்டதுடன், இவர்களுக்கு உலருணவுப் பொருட்களை கிரமமாக வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை பதுளையில் ஓரளவு மழை ஓய்ந்துள்ள போதிலும் நிலம் மற்றும் குடியிருப்புகளில் வெடிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது

யுவதியின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது


பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெய்த்திலி தோட்டத்தில் கடந்த திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்ட யுவுதியின் மரணம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து மூன்று சந்தேக நபர்கள் கைது செய்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மரணமான யுவதியின் தந்தையும் அண்ணனும் மாமானாரும் என தெரிய வருகின்றது. சாந்த கருணாசேன ஷாமிலாகுமாரி (வயது 20) என்ற இந்த யுவதியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் மரணமான யுவதி குறித்து பத்தனை பொலிஸில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற இந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது