Tuesday, April 28, 2009

இடைநிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்க கோரிக்கை

புசல்லாவை இரட்டைப்பாதை நகரிலிருந்து தொரகல மற்றும் நயபனை பகுதிகளுக்கான பஸ் போக்குவரத்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது. இரட்டைப் பாதையிலிருந்து நயபனை மற்றும் தொரகல செல்லும் வழியில் அமைந்துள்ள பாலம் ஒன்று உடைந்து விழுந்ததால் இவ்வீதியில் இடம்பெற்ற இரு பஸ் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. தற்போது பாலம் புனரமைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இவ்வீதியினூடான பஸ் போக்குவரத்து சேவையை நடத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதிப்பை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜோசப்

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு ஆசிரியர்களை அனுமதிக்கும் போது குறித்த பாடத்தில் குறைந்த பட்சம் க.பொ.த. (சா த.) பரீட்சையில் திறமைச் சித்தி அவசியமாகும். ஆனால், அண்மையில் தோட்டப் பகுதிப் பாடசாலைகளுக்கு சாதாரண சித்தியுடன் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியாததால் மாணவர்களே பாதிக்கப்படுவர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தோட்டப் பகுதிப் பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் முகமாக அண்மையில் 3,300 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சாதாரண சித்தியுடனேயே நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அனுமதிக்கும் போது குறித்த பாடத்தில் அவ்வாசிரியர்கள் க.பொ.த. (சா த) பரீட்சையில் குறைந்தது திறமைச் சித்திப் பெற்றிருக்க வேண்டுமென வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தோட்டப்புறப் பாடசாலைகளுக்கு சாதாரண தர சித்தியுடைய ஆசிரியர்கள் செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு மொத்தமாக 4,000; பேர் விண்ணப்பிக்கின்ற நிலையில் 1000 பேரே உள்ளீர்க்கப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் இந்த ஆசிரியர்கள் பயிற்சியை பெற முடியாததால் மாணவர்களே இதனால் பாதிக்கப்படுவர். எனவே மாணவர்களின் பாதிப்பை தடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
நியாயமான சம்பள உயர்வுக்கு தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த செயற்பாடு

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றினைந்து சிந்தித்து செயற்படுவதன் மூலம் தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இரா.தங்கவேல் கெட்டபுலா தோட்டத்தில் இடம்பெற்ற தொழிற்சங்க கூட்டத்தில் தெரிவித்தார் கூட்டு ஒப்பந்தத்தை சாடுவதனாலோ விபரிதமான அறிக்கைகளை விடுவதனாலோ மரண சாசனம் என கொச்சைப் படுத்தி கூறுவதாலோ மலையக மக்களுக்கு எந்த விமோசனமும் கிட்டப் போவதில்லை. மாறாக கூட்டு ஒப்பந்தத்தின் கூட்டாளிகளை தம்வசப்படுத்தும் வகையில் தொழிலாளர்களுடைய அபிலாஷைகளையும் தேவைகளையும் கோரிக்கைகளையும் அதற்கான சான்றிதழ்களையும் சம்பந்தப்பட்டவர்களோடு கலந்துரையாடி ஆக்கபூர்வமான பங்களிப்பை அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக இணைந்து செயற்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தோட்ட முதலாளிகளும் அரசும் ஏற்றுக் கொள்ள அழுத்தம் கொடுப்பதாக அமையும் என்றார். இன்று அவசியம் தேவைப்படுவதெல்லாம் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரே குரலில் ஒரே அழுத்தத்தில் உரிய கோரிக்கைகளை முன்வைப்பதே ஆகும். இதற்கு தொழிற்சங்க தலைவர்களின் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையுமே அவசியம்.

Monday, April 27, 2009

மலையக தோட்டங்கள் மீண்டும் துண்டாடப்படுமா

கடந்த வருட இறுதியில் சர்வதேச ரீதியில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான இலங்கை தேயிலைக் கொள்வனவில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக இலங்கையின் தேயிலை விற்பனை குறைவடைந்ததுடன் தேயிலையின் விலையும் வீழ்ச்சியுற்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் பெருமளவு கொள்வனவு செய்யும் தென் மாகாணத் தாழ்நிலத் தேயிலை விற்பனை பாரியளவில் வீழ்ச்சியுற்றதுடன் பல சிறு தோட்டத் தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டன. சிறு உற்பத்தியாளர் தம் தேயிலைக் கொழுந்தினை விற்பனை செய்ய முடியாமல் போய்விட்டது. உற்பத்தி செய்யப்பட்ட பல்லாயிரம் தொன் தேயிலை விற்பனை செய்யப்படாமல் முடக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தலையீடு செய்து, தேயி லைச் சபையினூடாக விற்பனை செய்யப்படாத தேயிலையை கொள்வனவு செய்ததுடன் தேயிலை உரத்தின் விலையையும் குறைத்து, சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலைக்கு உரம் வழங்கி தேயிலை உற்பத்தியை காப்பாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டது. இப்பாதிப்பு பின்னர் பாரிய கம்பனிகளுக்கும் விரிவடைலாயிற்று.
இப்பின்புலத்தில் அரசாங்கம் தேயிலை உற்பத்தித்துறையினை சீர்செய்யும் வகையில் குறிப்பாக பெருந்தோட்டங்களை பரிசீலிப்பதற்காக அமைச்சரவை துணைக் குழுவொன்றினை நியமித்தது. அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் டியூ குணசேகரவின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட இக்குழுவில் ஏனைய அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, ஜீவன் குமாரதுங்க மற்றும் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இவ் அமைச்சரவை குழு இம்மாத முற்பகுதியில் தமது பரிசீலனை அறிக்கையை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சமர்ப்பித்தது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் விதந்துரைப்புகள் அண்மையில் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் பிரசுரிக்கப்பட்டது. இவ் விதந்துரைப்புகளில் ஒன்று மலையக தோட்டமக்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. டியூ குணசேகரவின் தலைமையிலான அமைச்சரவை குழு பெருந்தோட்டங்களில் காணப்படும் உற்பத்தி செய்யப்படாத காணிகளை சிறு தோட்ட உரிமை யாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என விதந்துரைத்துள்ளது. மேலும் திருமதி பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ், விவசாய அமைச்சராக இருந்த கொப்பேகடுவவினால் முன்வைக்கப்பட்ட நிலச்சீர்திருத்த சட்டத்தின் குறிக்கோள்கள் முழுமையாக எய்தப்படவில்லை எனவும் அதனால் அதனை முன் னெடுப்பது அவசியம் எனவும் வலியுறுத் தியுள்ளது.
""Unproductive lands to be distributed among small holdeers. The bone-fode objectives of late lands and AGriculture Minister Hector Kobbekaduwa in the 1970-77 Srimao Bandaranayade regime, when the lands Reforms Act was introduced have not been met (Daily Mirror 20th April 2009) அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான அமைச்சரவைக் குழுவின் இவ்விதந்துரைப்பானது மீண்டும் மலையகத் தோட்ட மக்கள் 19721975 இல் சந்தித்த நிலையினை சந்திக்க நிர்ப்பந்திக்கும் என்பதுடன் மீண்டும் தோட்டங்கள் துண்டாடப்பட்டு, அம்மக்களது பாதுகாப்பு நிரந்தர கேள்விக்குறியாக மாறுவதற்கு வித்திடும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது..
ஹெக்டர் கொப்பேகடுவவினால் 1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலச்சீர்திருத்த சட்டத்தின் பிரதான குறிக்கோள் யாதெனில், நிலமற்ற சிங்கள மக்களுக்கு மலையக தோட்டக் காணிகளை பகிர்ந்தளிப்பதாகும். 1971 ஆம் ஆண்டு நடந்த ஏப்ரல் கிளர்ச்சி பற்றி ஆராய்ந்த அலஸ் தலைமையிலான ஆணைக்குழு, ஏப்ரல் கிளர்ச்சிக்கு பிரதான காரணம் சிங்கள இளைஞர் மத்தியில் காணப்படும் வேலையின்மையாகும். எனவே இப்பிரச்சினைக்குப் பரிகாரம் தேடும் வகையில் சிங்கள கிராம மக்கள் சுய உற்பத்தி தொழிலில் ஈடுபடுவதற்கு காணி கள் வழங்கப்பட வேண்டும் என விதந்து ரைத் தது. இதுவே 1972ஆம் ஆண்டு நிலச்சீர்திருத்த சட்டத்திற்கு அடித்தளமாக்கப்பட்டது..
இச்சட்டத்திற்கமைய தனிநபர் கொண்டிருக்கக்கூடிய காணியின் அளவு 50 ஏக்கராக நி;ணயிக்கப்பட்டது. இதற்கமைய முதலாவதாக உள்நாட்டவர்களின் தோட்டங்கள் (ரூபா கம்பனி) அரசுடைமையாக்கப்பட்டதுடன் அக்காணிகள் காணியற்ற சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை பகுதிகளில் காணப்பட்ட தனியார் தோட்டத் தமிழ் தொழிலாளர்கள் வெளியகற்றப்பட்டனர். குறிப்பாக கண்டி நகரில் ஆயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளர் வீதியோரங்களில் தஞ்சமடைந்தனர். பின்னர் அவர்கள் வவுனியா நோக்கிச் சென்றனர். நட்சா என்ற பெயரில் மாற்றுப் பயிர்ச் செய்கையும் சிங்கள குடியேற்றமும் மேற்கொள்ளப்பட்டது. சில தோட்டங்கள் கூட்டுறவு என்ற பெயரில் (உசவசம) துண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1975ல் ஸ்டேரிலிங் கம்பனி தோட்டங்கள் (வெளியாருக்கு சொந்தமான பாரிய தோட்டங்கள்) அரச பெருந்தோட்ட யாக்கம் மற்றும் ஜனவசம எனும் அரச கம்பனிகளின் கீழ் கொண்டுவரப்பட்டு நாளடைவில் இப்பெருந்தோட்டங்களின் ஒருசில டிவிசன்கள் மூடப்பட்டு பெரும்பான்மையோருக்கு சிறு உற்பத்தி காணிகளாக வழங்கப்பட்டன. அத்தோட்டங்களில் வாழ்ந்த தமிழ் தொழிலாளர்களுக்கு இக்காணிகள் வழங்கப்படவில்லை. ஆனால், அவர்கள் தொடர்ந்து சிறு உற்பத்தியாளர்களிடம் பணிபுரியும் கூலிகளாக வைக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாது அவர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டனர். இதுவே அமைச்சர் டியூ குணசேகர பெருமிதத்துடன் கூறியுள்ள ஹெக்டர் கொப்பேகடுவவின் நிலச்சீர்திருத்த சட்டத்தின் சிறப்பு குறிக்கோள். திருமதி. சிறிமாவின் முக்கூட்டணி அரசாங்கம் 1977இல் வீழ்ச்சியுற்றதுடன் ஆட்சிபீடமேறிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தற்காலிகமாக இச்செயற்பாட்டை நிறுத்தியது..
அதுவும் மலையகத் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட எதிர்ப்பின் விளைவாகவே மேற்கொள்ளப்பட்டது. 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி தொழிற்சங்கங்களின் அழுத்தத்திற்கமைய அத்திட்டத்தை கைவிட்ட போதிலும் 1989 ஆம் ஆண்டு மீண்டும் மறைந்த காமினி திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இதனை அமுல்படுத்த முனைந்தது. அச்சமயம் இக்கட்டுரையாளர் இவ்வாறான கட்டுரையொன்றை எழுதியதன் மூலம் அப்பிரச்சினையை வெளிக்கொணர்ந்ததுடன் தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புகளும் அறிவுஜீவிகளும் அத்திட்டத்திற்கு ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். காமினியின் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகள் குறிப்பாக மலையக நகரங்களுக்கு அண்மைய தோட்டக் காணித்துண்டுகள் அடையாளம் காணப்பட்டு கிராமத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மலையகத்தின் ஒருமித்த அழுத்தம் காரணமாக அன்றைய பிரேமதாசவின் அரசாங்கம் இதனைக் கைவிட்டது. கைவிடப்பட்ட இத்திட்டங்களையே அமைச்சர் டியூ குணசேகர அமுல் படுத்தும்படி விதந்துரைத்துள்ளார்..
இவ்வரலாற்று பின்புலத்துடன் நோக்கும் போது மீண்டும் மலையகத்தை துண்டாடுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இவ்விடயத்தில் மலையகத்தின் அனைத்து அமைப்புகளும் ஓரணியில் திரண்டு அழுத்தம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் டியூ குணசேகரவின் இவ்விதந்துரைப்பிற்கு தோட்ட முகாமையாளர் சங்க செயலாளர் நாயகம் மலின் குணதிலக்க விடுத்த மறுப்பு அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார். அதாவது பெருந்தோட்டங்கள் சிறு உடைமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுமாயின் 9,41,341 தோட்ட வாழ் மக்களின் சமூக, பொருளாதார விடயத்தில் அரசாங்கத்திற்கும் பிரச்சினையை இது ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்..
மலின் குணதிலக்க கூறிய சமூக, பொருளாதார பிரச்சினையுடன் அவர்களது பாதுகாப்பும் இவ்விடயத்தில் உள்ளடங்கியுள்ளது. கடந்த பல வருடங்களாக இரத்தினபுரி, மதுகம, களுத்துர, தெனியாய போன்ற பகுதிகளில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். 1972 ஆம் ஆண்டிற்கு முன்னர்,சிங்களவர் தோட்டத்தினுள் புகுந்து தமிழ் தொழிலாளர்களைத் தாக்கியதில்லை. எனவே மலையகத்தின் அனைத்து அமைப்புகளும் இம்முயற்சியினை ஒருமித்து எதிர்க்க வேண்டும். அரசாங்கம் பெருந்தோட்டங்களில் காணப்படும் நட்டத்தை சுட்டிக்காட்டி சிறு உடைமையாளர்களுக்கு கொடுத்தாக வேண்டுமெனக் கூறினால் அதனை தோட்டத்தில் வாழும் தமிழ், சிங்கள தொழிலாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும் எனக் கோர வேண்டும் அல்லது நீண்ட கால குத்தகைக்கு அவர்களுக்கே வழங்கப்பட வேண்டுமெனக் கோர வேண்டும். அத்துடன் அக்காணிகளை பராமரிக்க அவர்களுக்கு மானியம் வழங்கும்படி கோர வேண்டும். .
மிக அண்மையில் மாத்தளைப் பகுதியின் விளைச்சல் குன்றிய காணித்துண்டுகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. இது தொடர்பில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் சார்பாக பேராசிரியர் டியூடர் டி சில்வா தலைமையிலான குழு ஆய்வொன்றினை மேற்கொண்டது. இவ்வாய்வின் மூலம் பின்வரும் விடயம் கண்டறியப்பட்டது. அதாவது, வழங்கப்பட்ட பசளையற்ற காணித்துண்டுகளை வளம்பெறச் செய்ய எவ்வித மானியங்களையும் தோட்ட முகாமைத்துவம் வழங்கவில்லை . .
மாறாக கொழுந்தை மட்டுமே பெற்றுக்கொண்டன. இதனால் பல தோட்டத் தொழிலாளர்கள் அதனை மீண்டும் தோட்ட முகாமைத்துவத்திடமே வழங்கியுள்ளனர். மறுபுறம் தோட்ட முகாமைத்துவம் வழங்கிய காணித்துண்டுகளை தோட்டத் தொழிலாளர்கள் மறுத்த வேளையில் அதனை கிராம சிங்களவர்களுக்கு வழங்கப் போவதாக பயமுறுத்தி வழங்கியுள்ளனர். எனவே மலையகத் தொழிற்சங்கங்கள் இவ்விட யத்தில் சிரத்தைக்காட்ட வேண்டும். இத்திட்டத்தை அமுல்படுத்த இடமளித்தால் மலையகத்தின் நுவரெலியாப் பகுதியில் ஒரு சில தோட்டங்களைத் தவிர ஏனைய தோட்டங்கள் சிறு உடை மையாக்கப்படும். இதன் மூலம் மலையக மக்களது செறிவு அரிதாக்கப்படுவதுடன் அவர்களது அரசியல் பேரம் பேசும் சக்தி குறைக்கப்படும் அபாயம் ஏற்படலாம். ஆகையால் இப்போதே தமது எதிர்ப்புகளை தெரிவிக்க வேண்டும்.
நன்றி- வீரகேசரி

Sunday, April 26, 2009

மலையக மக்களின் உணர்வுப் பிரவாகமான மலையக நாட்டார் பாடல்கள் ஒலிப்பேழைகளாக வேண்டும்

இலங்கைத் தமிழ் வழக்கில் இன்று மலையகத் தமிழர் எனும் சொற்றொடர் இலங்கையின் மலைப் பிரதேசங்களிலுள்ள பெருந்தோட்டங்களிலும் அவற்றைச் சார்ந்த நகரங்களிலும் வாழும் இந்திய வம்சாவளித் தமிழரை குறிப்பதாகும்.
மலையக மக்கள் என்ற பெயரால் இன்று அழைக்கப்படும் இந்தியத் தமிழர் குடியேற்றங்கள் 1828ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்டன. மலையக பகுதிகளை சாராத பகுதிகளிலுள்ள பெருந்தோட்டங்களில் அதாவது மேல்-தென் மாகாணங்கள், வடகிழக்கு பகுதியான விவசாய பிரதேசங்கள் கொழும்பில் வாழ்பவர்களையும் கூட மலையகத் தமிழர் என்ற தொடர்கொண்டே சுட்டும் மரபு இன்று வழக்கிலுள்ளது. கோப்பித் தோட்டங்களிலும் பின்னர் தேயிலை, இறப்பர் தோட்டங்களிலும் குடியமர்த்தப்பட்ட மக்களின் வழித்தோன்றல்களே இன்று இவ்விதம் அழைக்கப்படுகின்றார்கள். பிரித்தானிய பேரரசால் ஆயிரக்கணக்கான மக்கள் கடல் கடந்து இலங்கை வந்து மலைப் பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் யாவரும் தென்னிந்திய விவசாயிகளாவர். இவர்கள் தமது இன, மத, மொழி, பண்பாட்டுக் கலாசாரத்தை பேணத் தலைப்பட்டனர். அவ்விதம் அவர்கள் பேணியது தென்னிந்தியக் கலாசாரமே. இவர்கள் ஏழைகளாகவும் கல்வியறிவு குறைந்தவர்களாகவும் இருந்தனர். எழுத்தறிவில்லாத மக்களிடையே வாய்மொழி இலக்கியமும், கலைகளும் செழிப்புறும் என்பது வரலாறு கண்ட உண்மை. அந்த வகையில் மலையக தமிழரிடையேயும் நாட்டுப் பாடல்கள் அதிகமாகவே வாய்மொழி வழக்கில் காணப்பட்டு வந்தன.
கல்வியறிவில்லாத எளிய பாமர மக்களாக காணப்பட்ட இவர்கள் தங்களுடைய இனிமையான பேச்சுவகையிலும் எல்லோரும் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் தங்களது இன்பதுன்பங்களை பாடல் வடிவில் ஆக்குகின்றனர். இவற்றையே நாட்டுப்புறப் பாடல் என்கிறோம்.
இப் பாடல்கள் மேடையேறி பாடுவதற்கோ, ஒரு கூட்டத்தை மகிழ்விப்பதற்காகவோ பாடப் பெற்றவை அல்ல. அந்நேரத்தில் பாடுவோரின் உணர்ச்சிகள் அடங்கிய இன்பதுன்பங்களை வெளிப்படுத்துபவையாகவே உள்ளன.
எழுத வாசிக்கத் தெரியாதவர்களின் சொத்தாகவே இதுவரை உயிர் வாழ்ந்து வரும் இந்நாட்டார் பாடல்கள் ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறை கேள்வி மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும் அறிந்துகொள்ளும் முறையில் அமைந்துள்ளன. தென்னிந்தியாவிலிருந்து கண்டிச் சீமைக்கு வாழ்வு தேடிவந்த இந்த மக்கள் தமது வாழ்வில் கண்டதென்ன? விவசாயம் தழைத்தோங்கும் பிரதேசங்களில் வாழும் உழைக்கும் மக்கள் மத்தியிலே வாய்மொழிப் பாடல்கள் வீறார்ந்த நிலையில் காணப்படும் என்பார் க. கைலாசபதி.
ஆயிரக்கணக்கில் காணக்கிடைக்கும் இப்பாடல்களில் அவர்களின் கட்டுக்கடங்காத துன்பம், துயரம், ஏக்கம், ஏமாற்றம், ஆத்திரம், ஆடி மகிழும் ஆனந்தப் பூரிப்பு, மனக்குமைச்சல் அடங்கிய இதய ஒலிகளாக மனித மனத்தின் நித்திய உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் முறையில் அமைந்துள்ளன. இப்பாடல்களில்,
‘ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப்பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாய நான் மறந்தேன்’

போன்ற நெஞ்சை நெகிழும் வரிகள் பல காணப்படுகின்றன. இப்பாடல்கள் பல தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளமை பாராட்டுக்குரியது.

எனினும் எத்தனை பேருக்கு இந்நூல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் பெருந்தோட்ட மக்களிடையே எத்தனை பேருக்கு வாசிக்க முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இப்பாடல்கள் ஒலிப்பேழைகளாக வெளிவர வேண்டும் என்பதே எமது அவாவாகும்.
ஏனெனில் வாசிக்க முடியாதவர்களும் இப்பாடலை கேட்பதன் மூலம் விளங்கி இப்பாடல்கள் மீண்டும் மக்கள் வாய்களில் முணுமுணுக்க வேண்டும். மலையகத்தில் இருந்து உதயமாகி பிரபலமான இசையமைப்பாளர்கள் இலங்கையில் உள்ளனர். இவர்கள் இம்முயற்சியில் இறங்கி வெற்றிபெற வேண்டும். மலையக இலக்கியங்களின் பாதுகாப்பும் அதன் அவசியமும் உணர்ந்தவர்கள் இந்நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
வே. முரளிதரன் (நோர்வூட்)

Saturday, April 25, 2009

இம் மேதினத்திலாவது மலையகத் தியாகிகளை நினைவு கூருவோம்!

இந்நாட்டின் வரலாற்றில் 1866 ஆம் ஆண்டு மாபெரும் மாற்றத்தை உண்டாக்கினார் ஜேம்ஸ் டெய்லர் என்ற ஆங்கிலேயர் கண்டி மாவட்டத்தில் ஹேவாஹெட்ட லூல் கந்துர தோட்டத்தில் முதன் முதலாக தனது காணியின் பத்து ஏக்கரில் தேயிலை பயிர்ச் செய்கையை ஆரம்பித்தார்.
இப் பயிர்ச் செய்கையை பரீட்சார்த்தமாக மேற்கொள்வதற்காக இந்தியாவின் அசாமிலிருந்து தேயிலை விதைகளை தருவித்து பயிரிட்டார். இதில் பெரிய வெற்றியையும் கண்டு பெரியதோர் மாற்றத்தையும் கொண்டு வந்தார். ஜேம்ஸ் டெய்லரின் லூல் கந்துர பங்களாவிலேயே சிறிய தொழிற்சாலையையும் உருவாக்கினார். இந்தத் தொழிற்சாலையில் தனது காணியிலிருந்து பெறப்படும் தேயிலைக் கொழுந்தை உலர்த்தி தூளாக்கி லண்டனுக்கு அனுப்பினார். இவரின் தேயிலைத் தூளுக்கு லண்டன் மாநகர வர்த்தக மையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
சிலோன் தேயிலைக்கு பெரும் வரவேற்பும், ஆதாயமும் கிடைப்பதை பலர் தெரிந்து கொண்டனர். இதன் காரணமாக பிரித்தானியர், ஸ்கொட்டிசார் ஐரிஸ்காரர்கள், வெல்ஷ்காரர்கள் உட்பட பெருந் தொகையான ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வரத் தொடங்கினர். இவ்வாறு வந்த இவர்கள் அன்றைய கண்டி, நுவரெலியா பிதேசங்களை பார்வையிட்டனர். பெருங்காடுகளையும், கற்பாறைகளையும் கொண்ட இப்பிரதேசத்தின் காணியில் ஒரு ஏக்கர் ஒரு பவுணுக்கு வெள்ளைக்காரர்களின் ஆட்சி வழங்கியது. இந்த விலைக்கு ஒவ்வொரு வெளிநாட்டு வெள்ளைக்கார கம்பெனிகளும் பல ஏக்கர்களை விலைக்கு வாங்கின. கமம்பெனிகாரர்களுடன், போட்டி போட்டுக்கொண்டு தனியாரும் காணிகளை கொள்முதல் செய்வதில் பெரும் ஆர்வம் காட்டினர்.
வெள்ளைக்காரர்கள் காடு நிறைந்த காணிகளை செப்பனிட முதன் முதலில் சிங்களத் தொழிலாளர்களை பயன்படுத்தினர். பெரும் காடுகளில் அட்டைகள், விஷபூச்சிகள், பாம்புகள், மிருகங்கள், தொல்லைகளாலும் கடுங்குளிரினாலும் பெரிதாகப் பாதிக்கப்பட்ட இவர்கள் வெள்ளைக்காரர்களிடம் கூலிகளாக வேலை செய்ய மறுத்தனர். அவர்களுடன் முரண்பட்டனர். முக்கியமாக சிங்களவர்களுக்கு ஆங்கிலமும், ஆங்கிலேயர்களுக்கு சிங்களமும் தெரியாதமையினால் மொழிப்பிரச்சினையும் ஏற்பட்டது.
ஏற்கனவே தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து கோப்பித் தோட்டங்களில் தொழிலாளர்களாக இருந்து வந்த பலர் தேயிலைத் தோட்டங்களில் இணைந்தனர். அப்போது கோப்பி மரங்களில் நோய் பரவவே கோப்பித் தொழிலில் மந்தநிலை நிலவியது. இலங்கையின் தேசாதிபதியாகவிருந்த சேர் ஹெர்க்குயூலெஸ் ஜோர்ஜ் றோபர்ட் ரொபின்ச (1865- 1873) னின் உதவியோடு தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை வரவழைக்க வெள்ளைக்கார துரைமார்கள் திட்டம் தீட்டினர். இவர்களின் முயற்சிக்கு எற்கனவே இங்கு தென்னிந்தியா விலிருந்து வருகை தந்தோரும் உடந்தையாகினர். துரைமார்களின் திட்டத்துக்கு தேசாதிபதி றோபர்ட் ரொபின்சன் பெரிதும் உதவினார்.
மிகவும் தந்திரவழி வகைகளை கையாண்டு தமிழ் நாட்டிலிருந்து திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்களை பாம்பன் தனுஷ்கோடியினூடே கடல் மார்க்கமாக இலங்கையின் வடபகுதி தலைமன்னாருக்கு அழைத்து வந்து மலையகத்தில் குடியேற்றம் செய்தனர். இவர்கள் கடுமையாக உழைத்தனர். காட்டில் கொடிய மிருகங்களுடன் போராடி அட்டைக் கடிக்கும், கொசுக்கடிக்கும் பயம் கொள்ளாது காடுகளை அழித்து செப்பனிட்டார்கள் எமது முதாதையர்கள். வெள்ளைக்காரர்களால் எமது மூதாதையர்கள் இந்நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருக்காவிட்டால் இன்று மலையகம் எனப்படும் பிரதேசம் காடாகவும் கற்களாலுமே மூடப்பட்டிருக்கும். எமது மூதாதையர்களே காட்டையும், கற்களையும் வெட்டி ஒதுக்கி வீதிகளையும், பாதைகளையும் அமைத்து பாறை நிலத்தில் தேயிலைச் செடிகளை நாட்டி, தேயிலைச் செடிகளால் மலைகளை மூடி அழகு பார்த்தனர்.
180 வருட வரலாற்றைக் கொண்ட இம் மக்களின் துயரங்கள், அவலங்கள், இன்றும் தீர்ந்ததாக இல்லை. இம் மக்களை மலையகத்து அரசியல் தொழிற் சங்கங்கள் இன்றும் வெள்ளைக்கார துரைமார்களை விட மோசமாக ஏமாற்றி வருகிறது. இன்று மலையகத் தோட்டத் தொழிலாளிகளின் வழி நடத்துபவர்களாக அறுபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொழில் திணைக்களத்தில் பதிவாகியுள்ளன.
1939 முதல் 1979 வரை 36 மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற் சங்க போராட்டங்களில் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவர்களின் வரலாறு எத்தனை மலையகத் தலைவர்களுக்குத் தெரியும். 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலையகத் தலைவர்களை நாடாளுமன்ற, மாகாணசபை, நகரசபை, பிரதேச சபைகள் மீது ஆசை ஈர்த்துவிட்டது. அதனால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் நோக்கமாக உள்ளனரே தவிர தங்களை வளர்த்துவிட்ட மக்கள் மீது எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை.
எதிர்காலத்தில் மலையகத் தலைவர்கள் அம் மக்களாலேயே ஓரங்கட்டப்படுவர் என்பது உண்மையாகும். அண்மையில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் இதனையே எடுத்தியம்புகின்றன.
இன்று மலையக அரசியல் தொழிற் சங்கங்களின் செயற்பாடு அம் மக்களின் எழுச்சிக்கு உந்து சக்தியாக அமைய வேண்டும். அந்த நிலைமை இன்று மலையக அரசியல் தொழிற் சங்க செயற்பாடுகளில் இல்லை. இது தொடருமானால் எதிர்வரும் பொதுத் தேர்தல் பலருக்கு அதிர்ச்சித் தோல்வியைத் தரக் கூடியதாக அமையலாம்.
அரசியல் அடக்குமுறைகள், தொழிற்சங்க தலைவர்களின் கெடுபிடிகள், அந்நியப்படுத்தல், எனப் பல அடக்கு முறைகள் இன்றும் இவர்கள் மீது பலவந்தமாக திணிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதலாம் திகதி மேதினம் கொண்டாடப்படுகிறது. இது வரை காலமும் மலையகத்தில் பல போராட்டங்களில் ஈடுபட்டு உயிர் நீத்த 36 தியாகிகளுக்கு எவ்வித மரியாதையையும் மேதினத்தில் வழங்காமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். மே தினத்தன்று மாபெரும் ஊர்வலமும், வெறுமனே கோஷமும், தீர்மானங்களும்
நிறைவேற்றப்படுவதால் எவ்வித பயனும் மக்களை சென்றடையப் போவதில்லை. மலையக மக்களின் உரிமைக்காகப் போராடிய 36 தியாகிகளதும் வாழ்க்கை வரலாறு நூல் வடிவம் பெற வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு அது முக்கியமாகும். மே தினத்தன்று 36 தியாகிகளும் நினைவு கூரப்பட வேண்டும். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.
கோவிந்தன் முல்லோயா தோட்டம், ஹேவாஹெட்ட, 1939, வேலாயுதம் கந்தளா தோட்டம், புப்புரஸ்ஸ, 1942 வேலுசாமி கந்தனா தோட்டம், புப்புரஸ்ஸ, 19 வெள்ளையன் மீரியாக்கொட தோட்டம், சாமிமலை. 1950, எட்லின் நோனா, என்கலவல தோட்டம், தெபுவான. 1953, ஆதியப்பன், மல்கொல தோட்டம், நாவலப்பிட்டிய. 1953, வேதன் லின்டல் தோட்டம், நேபொட. 1957, வைத்திலிங்கம், டெவன் பனிய பத்தனை, தலவாக்கலை. 1957, நடேசன் வெறேயர் தோட்டம், இரத்தினபுரி. 1957, ஏப்ரஹாம் சிங்கோ, ரவுன்பங்களாத் தோட்டம், அக்கரப்பத்தனை. 1958, ஐயாவு, பொகவந்தலாவ தோட்டம், பொகவந்தலாவை. 1958, பிரான்சிஸ் பொகவந்தலாவை தோட்டம், பொகவந்தலாவை. 1958, கொம்பாண்டி, சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958, பொன்னையா சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958, கருமலை, நல்லதண்ணீர் தோட்டம், மஸ்கெலியா. 1959, முத்துசாமி, காலகார, மாதென்ன தோட்டம், எல்கடுவ. 1959, ஜேம்ஸ் சில்வா, கமாவளை தோட்டம், பசறை. 1959, தங்கவேல், முகலாசேனை தோட்டம், இறக்குவானை. 1959, சிதம்பரம், மல்வான தோட்டம், நிட்டம்புவ. 1960, முனியாண்டி, வெத்திலையூர் தோட்டம், எட்டியாந்தோட்ட. 1960, செல்லையா, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, ஆராயி, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, மாரியப்பன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, நடேசன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, விஜயசேன, எல்வதுரை தோட்டம், இங்கிரியா 1961, சோலை, சின்ன கிலாபோக்கு தோட்டம், மடுல்கல. 1961, அழகன், கந்தநுவர தோட்டம், எல்கடுவ. 1969, ரெங்கசாமி கந்தநுரவ தோட்டம், எல்கடுவ. 1969, இராமையா, சீனாக்கள தோட்டம், பதுளை. 1970, அழகர் சாமி சீனாக்கல தோட்டம், பதுளை. 1970, கந்தையா நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, பார்வதி நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, ஆறுமுகன் நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, இராமசாமி, நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, லெட்சுமணன் சிவனு யொக்ஸ்போர்ட் தோட்டம் வட்டகொட. 1977. பழனிவேல், பல்லேகலத் தோட்டம், கண்டி. 1979.
14-05-2005 இல் தியாகி சிவனு லெட்சுமணின் நினைவு தினத்தையொட்டி தலவாக்கலை மேல் கொத்மலைத் திட்டத்தை கைவிடுமாறு கோரி பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தை தலைமைதாங்கி நடத்தியவர் இறுதியில் அதே மின்சார அபிவிருத்தித் திட்டத்தில் உயர் பதவியேற்று வாகனமும் பெற்று சுக போகங்களை அனுபவித்து வருகின்றார்.
கே.பி.பி. புஷ்பராஜா
நன்றி- தினகரன்

Thursday, April 23, 2009

தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கருத்தரங்கு

தோட்டத் தொழிலாளர்களின் முக்கிய பிரச்சினையாக விளங்கும் சம்பள உயர்வு தொடர்பாக தெளிவுபடுத்தும் பொது கருத்தரங்கு ஒன்றை எதிர்வரும் 26-04-2009 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பதுளையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக ஐக்கிய தோட்ட தொழில் சங்கக் கூட்டமைப்பின் உப தலைவர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்
தோட்டத் தொழிலாளர்களின் மிக முக்கிய பிரச்சினையான சம்பள உயர்வு சம்பந்தமாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்பு போன்றவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. அதேவேளை இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளாத தொழிற் சங்கங்கள் ஊடகங்கள் மூலமாக பல்வேறு கருத்துகளை தெரிவித்த வண்ணமுள்ளன. தற்போது தோட்டங்களில் பல்வேறு தொழிற் சங்கங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சில காலங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பல சங்கங்களும் மறைந்துவிட்டன. தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தொழிற் சங்கங்கள் சம்பள உயர்வு மற்றும் ஏனைய பொதுப் பிரச்சினைகள் சம்பந்தமான கோரிக்கைகளை ஒன்றிணைந்து முன்வைத்தால் நிச்சயமாக வெற்றி காணமுடியும். இதையே பெரும்பாலான தொழிலாளர்கள் விரும்புகின்றனர். இதை விடுத்து பல்வேறு கோஷங்களை கடந்த காலங்களைப்போல முன்வைத்துக் கொண்டிருந்தால் அது தோட்டக் கம்பனிகளுக்கு வசதியாக அமைந்துவிடுவதுடன் அப்பாவித் தொழிலாளர்களையும் பாதித்துவிடும். ஆகவே இவற்றைத் தெளிவுபடுத்தும் இக் கருத்தரங்கில் தொழிற் சங்கத் தலைவர்கள், தோட்டத் தலைவர்கள், தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்புத் தலைவர்கள், சட்டத்தரணிகள், சர்வகலாசாலை விரிவுரையாளர்கள் போன்றோர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.