சிறுமியை (12 வயது) வீட்டு வேலை க்கு அமர்த்தி அடித்து கொடூரமாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தை யடுத்து தலாத்துஓயா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் தோட்ட அதிகாரி ஒருவரின் மனைவியை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
தலாத்துஓயா கெட்டவல பிரதேசத்தில் இரவு வேளை (8.40 மணியளவில்) சிறுமி ஒருவர் வீதியில் தனிமையில் அழுதுகொண்டு சென்றுக்கொண்டிருப்பதை அவதானித்த பிரதேச வர்த்தக நிலையப் பெண் ஒருவர் இச் சிறுமி குறித்த தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
சிறுமியை அழைத்து அப்பெண் விசாரித்தபோது அந்தச் சிறுமி தமிழ் சிறுமி என தெரியவரவே பெண் வேரொருவரை அழைத்து அவரின் உதவியுடன் சிறுமியை விசாரித்துள்ளார்.
சிறுமி தான் வேலை செய்து வந்த வீட்டில் எஜமானியினால் இழைக்கப்படும் கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டைவிட்டு ஒருவருக்கும் தெரியாமல் தப்பிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவசர பொலிஸ் பிரிவு 119 இலக்கத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து பொலிஸார் உடனடியாக அங்கு வி்ரைந்து சிறுமியைப் பொறுப்பேற்றனர்.
பொலிஸாரின் விசாரணைகளின்போது அச்சிறுமி தெரிவித்தாவது, எனது பெயர் சுப்பிரமணியம் மல்காந்தி, நான் அம்மாவுடனும் தம்பியுடனும் கலவான குண்டல தோட்டத்தில் வசித்து வருகின்றேன். தந்தை இறந்துபோனார், அம்மா தோட்டத்தில் வேலை செய்து வருகின்றார். தோட்டத்தில் தொழில் செய்யும் நபர் ஒருவர் கெட்டவலயில் உள்ள வீடொன்றிற்கு அழைத்து வந்தார்.
வீட்டிலிருந்த எஜமானியான நோனா கடுப்பானவர். எந்தநேரமும் கோபத்துடனேயே காணப்படுவார். அவர் என்னை அடிக்கடி தும்புத்தடியாலும் தடிகளாலும், கைகளாலும் அடிப்பார். கொடூரமாக சித்திரவதை செய்வார். என்னை படிக்கவைக்கப் போவதாக கூறிய அவர்கள், வீட்டை கூட்டி பெருக்குவது, சமையல் பானைகள், பிங்கான் கோப்பைகளை சுத்தம் செய்வது, அடுப்பு எரிப்பது போன்ற வேலைகளையே செய்ய வைப்பார்கள்.
எனக்கு படுக்க பாய், தலையணை, விரிப்பு போர்வை எதுவுமே கிடையாது.
நான் தரம் ஒன்று மட்டுமே பாடசாலை சென்று கல்விகற்றேன். அவர்கள் பாடசாலைக்கு அனுப்புவதாகத் தெரிவித்தபோதும் அது குறித்து எவ்வித கவனமும் எடுக்கவில்லை. பொடியன் ஒருவனைத் தேடி எனக்கு கட்டிவைப்பதாக எல்லாம் தெரிவித்தார்கள் என அழுத வண்ணம் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்தார். அதேவேளை தோட்ட அதிகாரியின் மனைவியே தனது எஜமானி என்றும் தெரிவித்தார்.
இதனை யடுத்து தலாத்துஓயா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உபேவங்சவின் ஆலோசனையின் பேரில் பொலிஸார் சந்தேகத்தின்பேரில் தோட்ட அதிகாரியின் மனைவியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-தினகரன் -
No comments:
Post a Comment