எத்தனை ஆண்டுகள் கடந்த போதிலும், எத்தனையோ அரசியல் மாற்றங்கள் வந்த போதிலும், குயின்ஸ்பெரி பிரிவு பசுமலை தோட்ட மக்களின் வாழ்க்கை நிலைமையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை.
இரு இனங்கள் வாழும் பிரதேசங்களுக்கிடையில், இரு மாவட்டங்களுக்கிடையில், இரு நிர்வாக பிராந்தியங்களுக்கிடையில் எல்லையாக அமைந்துள்ள இடங்களில் இவ்வாறான குறைகள் காணப்படுவது வழமை. இவ்வாறான பிரதேசங்களில் பெரும்பாலானவை அபிவிருத்தி குன்றியதாகவும் பலரின் கவனத்திற்கு அகப்படாமலும் காணப்படுகின்றன.
மலையகத்தில் நவநாத சித்தர் வாழ்ந்ததாகக் கூறப்படும் குயின்ஸ்பெரி தோட்டத்திலும் இவ்வாறானதொரு நிலைமை காணப்படுகின்றது. குயன்ஸ்பெரி வடக்கு, குயின்ஸபெரி; மேற்கு, குயின்ஸ்பெரி கீழ்ப் பிரிவு ஆகியன காவத்தை பெருந்தோட்டக் கம்பனியின் நிர்வாகத்திற்குக் கீழ் இயங்கி வருகின்றன.
குயின்ஸ்பெரி கீழ்ப் பிரிவானது ஒருபகுதி கொத்மலை செயலகத்திற்கு உட்பட்டதாகவும், மற்றைய பகுதி கடியலென பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்டதாகவும் இயங்கி வருகின்றது. அதேநேரம் தனியார் ஒருவருக்குச் சொந்தமான பசுமலை பிரிவு பலரால் அறியப்படாத ஒரு பிரதேசமாகும். இந்தப் பிரதேசமும் கடியலென கிராம சேவகர் பிரிவுக்குரியதாகவும் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்குரியதாகவும் உள்ளது. 8 குடும்பங்கள் மட்டுமே இங்கு வாழ்ந்து வருகின்றன.
365 ஏக்கர் பரப்பைக் கொண்ட இந்த பசுமலை பிரிவானது 1970 களில் தோட்டங்கள் அரசு உடமையாக்கப்பட்டு தனியார் மயப்படுத்தப்பட்டபோது தனியொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தோட்டத்தினைச் செயற்படுத்த முடியாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. ஏறத்தாள 150 குடும்பங்கள் வாழ்ந்த போதிலும் பலர் தோட்டம் கைவிடப்பட்ட பின்னர் ஆங்காங்கே வெவ்வேறு தோட்டங்களுக்கு இடம்பெயர்ந்து சென்று விட்டனர். 8 குடும்பங்கள் மாத்திரமே தினக்கூலியாக வாழ்ந்து வருகின்றனர்.
சில காலத்திற்குப் பிறகு இத்தோட்டம் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிறு உடமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் உடமையாளரால்; இந்த எட்டு குடும்பங்களையும் உடனடியாக வெளியேறும்படியும் வெளியேறாவிடின் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவீர்கள் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங். பொன்னையா அவர்களினூடாக இம்மக்கள் தொழில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கின் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரை ஏக்கர் காணி வழங்க இணக்கம் காணப்பட்ட பொழுதும் இதுவரை அக்காணி வழங்கப்படவில்லை.
மிகவும் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் இவர்கள், தற்பொழுது பிரதானமாக பாதைப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.
இவர்களது குடியிருப்புக்குச் செல்லும் பிரதான பாதையைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் காணப்படுகின்றது.
இவர்களுக்கான நீர்விநியோகத்திற்கான ஆரம்ப இடம் மற்றொரு உடமையாளர்களுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதால் இவர்களுக்கான குடிநீர் குழாயினை மாற்றி அவர்களுடைய விவசாயத் தேவைகளுக்கு உபயோகித்து வருகின்றனர். இதற்கெதிராக கேட்கச் சென்றவர்களை பெண் மீது பாலியல் வல்லுறவு கொள்ள முயற்சித்தார்கள் என்று சோடிக்கப்பட்டு நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டுக்கமைய இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களை 5 நாட்கள் வரை விளக்கமறியலில் வைத்திருந்த அவலமும் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் மாணவர்கள் குயின்ஸ்பெரி பாடசாலையிலும், நாவலப்பிட்டி கதிரேசன் பாடசாலையிலும் கல்வி கற்று வருகின்றனர். குறித்த தோட்டம் தொடர்பிலும், நிலவும் பிரச்சினை தொடர்பிலும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பில் நேரில் சென்று பார்வையிட விஜயம் செய்திருந்தோம். இத்தனை வருட வரலாற்றில் அரசியல் சார்ந்தோ, அரசு சார்ந்தோ, தனியார் துறை சார்ந்த எந்தவொரு அலுவலரும் அங்கு வரவில்லை. அவர்களின் குறைகளைக் கேட்கவில்லை என்பதே அம்மக்களின் அங்கலாய்ப்பாக இருந்தது.
பாதை வசதி, இருப்பிட வசதி, குடிநீர் வசதி, வாழ்வாதார வசதி என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி வாழும் இம்மக்கள் விஷேட கவனத்திற்குரியவர்களேயாவர்.
இம்மக்களுக்கான தீர்வாக இவர்களுக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள அரை ஏக்கர் காணிகளை பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இக்குடும்பங்களுக்காக வீடமைப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி அவர்களுக்கு நிரந்தரமான குடியிருப்புகளைப் பெற்று கொடுக்கலாம். தற்காலிகமாக இவர்களுக்கான மாற்றுத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தும் வரை குடிநீர், பாதை, கூரைத் தகடுகளை பெற்றுக் கொடுக்கலாம்.
இதனடிப்படையில்; சமுதாய அபிவிருத்தி அமைச்சர்; பணிப்புரைக்கு அமைய குடிநீர்த் திட்டத்திற்கான நிதியொதுக்கீடு இப்போது செய்யப்பட்டுள்ளதோடு, கூரைத் தகடுகளும், வழங்கப்படவிருக்கின்றன. இந்திய வீடமைப்புத் திட்டத்திலும் இந்த 08 குடும்பங்களையும், உள்வாங்குவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ள அரை ஏக்கர் காணியினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி- தினகரன்
No comments:
Post a Comment