மலையக மக்களின் பல்வேறு விடங்கள் தொடர்பாகவும் காலத்துக்குக்காலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் அபிவிருத்திக்கு வழிகாட்டுதல் வேண்டும் என்று திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஷ் தெரிவித்தார். மலையக மக்களின் சமகால போக்குகள் தொடர்பில் கருத்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து சந்திரபோஷ் மேலும் கருத்து தெரிவிக்கையில் மலையக சமூகம் என்பது இந்நாட்டில் முக்கியத்துவம் மிக்க தனித்துவம் வாய்ந்த ஒரு சமூகமாகும். இச்சமூகத்தின் கலாசார விழுமியங்கள் பெறுமதி மிக்கனவாக விளங்குகின்றன.
ஏனைய இனங்களிலிருந்தும் வேறுபட்ட விசேடித்த போக்குகள் இம்மக்களிடையே காணப்படுகின்றன. இம்மக்களின் மகத்துவம் சரியாக உணரப்படுதல் வேண்டும். நாட்டின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்கும் மலையக சமூகத்தினரின் எழுச்சிக்காக அரசாங்கம் தோள் கொடுக்க வேண்டியதும் மிகவும் அவசியமாக உள்ளது.
மலையக மக்கள் பல்வேறு புதிய பரிமாணங்களையும் கொண்டு விளங்குகின்றனர். இப்பரிமாணங்கள் தொடர்பில் ஆங்காங்கே கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள் என்பன இடம்பெற்று வருகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் எனப் பலரும் இது தொடர்பான விடயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கலாசாரம், பண்பாடு, பொருளாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
எனினும் சமகாலத்தில் மலையக மக்களிடையே ஏற்பட்டுள்ள பண்பாடு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான மாற்றத்தினையும் ஒட்டுமொத்தமாக பார்க்க முடியாத ஒரு நிலையில் இருக்கின்றோம். துறைசார்ந்த நிபுணர்கள், துறைசார்ந்த ஆர்வலர்கள் குறித்த விடயங்களை அறிந்து கொள்வதிலும் சிக்கல் நிலை மேலோங்கிக் காணப்படுகின்றது. சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் இந்த மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதும், இடர்பாடுகளை களைந்து அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல வேண்டியதும் மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது.
மலையக மக்களின் பல்வேறு விடயங்கள் குறித்தும் காலத்துக்கு காலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இந்த ஆய்வுகளின் ஊடாக நாம் பல்வேறு விடயங்களையும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வருடா வருடம் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள முடியாவிட்டாலும் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியை மையப்படுத்தி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஆய்வுகள் செய்து அபிவிருத்தி செய்வோம் என்பது ஒரு தொனிப்பொருளாகும். வரலாற்றைப் பார்த்து முன்னோக்கிச் செல்வோம் என்பதும் ஒரு முக்கியமான கருத்தாகும். இந்த நிலைகள் உரியவாறு கடைப்பிடிக்கப் படுதல் வேண்டும். ஆய்வு என்பது சகல மட்டங்களிலும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. உலக நாடுகள் பலவற்றில் சமூகம் குறித்த கருத்துப் பரிமாறல்களுக்கு களமாக ஆய்வு அமைந்திருக்கின்றது என்பதனை மறுத்துவிட முடியாது.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் ஆய்வுகள் பலவும் சமூக ரீதியில் புதிய பரிமாணங்கள் பலவற்றையும் ஏற்படுத்துவதற்கு உந்து சக்தியாக அமைகின்றது என்பதே உண்மையாகும். இந்திய வம்சாவளி மலையக சமூகத்தினர் இன்று பதினைந்து இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.
எனினும் துறைசார்ந்த நிபுணர்களை இனங்காண்பதற்கோ சமகால பார்வையினை செலுத்துவதற்கோ போதுமான தரவுகள் எம்மிடம் இல்லை. எனவே ஆய்வுத்துறையை வளர்த்தெடுக்க வேண்டியதென்பது மிகவும் அவசியமாகின்றது. மேற்கத்தேய நாடுகளைப் பொறுத்தவரையில் கருத்தரங்கு, கலந்துரையாடல்கள், ஆய்வுகள் என்பன அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. சாதக, பாதக விளைவுகள் ஆராயப்படுகின்றன. இத்தகைய நிலைமைகள் சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக அமைந்து வருகின்றன.
மலையக கல்வி தொடர்பில் மாநாடு நடத்தப்பட வேண்டுமென்று பேராசிரியர் தனராஜ் போன்றவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தனராஜ் கல்விப் புலத்தில் நீண்ட கால அனுபவமுள்ள ஒருவர். தேசிய சர்வதேச மாநாடுகள் பலவற்றிலும் அவர் பங்கேற்றுள்ளார். எனவே இந்த நிலையில் மலையக கல்வி தொடர்பில் மாநாடு ஒன்றினை நடத்துவது குறித்தும் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பல்வேறு ஆய்வுகள் சமூகத்தின் மேம்பாட்டுக்கும் அபிவிருத்திக்கும் பக்கபலமாகும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நன்றி- வீரகேசரி
No comments:
Post a Comment