தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மட்டுமே மலையக அரசியல்வாதிகள்,; தொழிற்சங்கவாதிகள் பேசி வருகின்றனரே தவிர மலையக மக்களின் ஏனைய இன்னோரன்ன பிரச்சினைகள் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன என்று ஜே.வி.பி யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சமகால முன்னெடுப்புக்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் எந்தவொரு நாட்டிலும் தொழிலாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்கி சகல துறைகளிலும் தொழிலாளர்களை முன்னேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கின்றது. இதிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகிச்செல்ல முடியாது. ஊலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தொழிலாளர்களின் உன்னதமான போராட்டங்கள் கொச்சைப்படுத்தப்படுகின்றன. தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாத நிலையில் அவர்கள் பல்வேறு வழிகளில் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டள்ளார்கள். நாளுக்குநாள் தொழிலாளர்கள் மீதான சுமைகள் அதிகரித்து வருகின்றன. எனினும் இது தொடர்பாக யாரும் உரிய கவனம் செலுத்துவதாக இல்லை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்றார் சந்திரசேகரன்.
இலங்கையைப் பொறுத்தளவில் விசேடமாக நாம் மலையகத் தொழிலாளர்களை குறிப்பிட வேண்டும். இவர்களுக்கு அநீதி அதிகரித்து காணப்படுகின்றது. மலையக அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் இவர்களுக்கு உரிய உரிமைகளை பெற்றுக்கொடுக்கின்றனரா என்பது கேள்விக்குரியாகும். தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையை மட்டுமே முதன்மைப்படுத்தி கோசங்களை எழுப்பி வருகின்றனர். மலையக மக்களின் இன்னோரன்ன பிரச்சினைகளான வீடு, காணி, மக்களின் சமூக வாழ்க்கை, கல்வி, தொழில், சுகாதாரம் என ஏனைய பிரச்சினைகள் பற்றி குறிப்பிடுவதாகத் தெரியவில்லை. எனினும் இதனையும் உருப்படியாக செய்ததாக தெரியவில்லை. நல்லாட்சி இடம்பெறுவதாக தெரிவிக்கின்றார்கள் இன்று நல்லாட்சியில் இருக்கின்ற ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் என பலரும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுத் தருவதாக கூறினார்கள். இவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் இப்போது காற்றில் பறந்து விட்ட நிலையில் தொழிலாளர்களை கைவிட்டள்ளார்கள்.
தேசிய ரீதியில் தொழிலாளர்கள் இருந்தும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை மலையக அரசியல்வாதிகள் பிரித்து வைத்திருக்கிறார்கள். அவ்வாறு பிரிந்து வைத்திருப்பதால் பாதக விளைவுகளே ஏற்படுகின்றன. பாழாய் போன தொழிற்சங்கங்களையும் மலையக அரசியல்வாதிகளையும் மலையகத் தொழிலாளர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கும் அப்பால் வர்க்க ரீதியாக நாம் பார்க்கின்றபோது தொழிலாளர் சக்தி என்ற ஒன்று இருக்கிறது. மலையக தொழிலாளர்கள் நாட்டின் ஏனைய தொழிலாளர்களுடன் ஒன்று சேர்கின்றபோது தொழிலார் சக்தி பலமடைகின்றது. காத்திரமான வெற்றிகளை பெறக்கூடிய வாய்பர்பு அதிகமாகவே காணப்படுகின்றது.
தோட்ட மக்களுக்கு இப்போது சமூக ரீதியான பிரச்சினை ஒன்றும் உள்ளது மலையக பெருந்தோட்டங்களில் வாழ்வதா இல்லையா என்ற சிந்தனையுடன் இவர்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் நாட்டில் உள்ள ஏனைய தொழிலாளர்களுடன் கைகோர்த்து போராட்டத்தின் ஊடாக தமது பிரச்சினைக்கான பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் மலையக அரசியல்வாதிகளும், தொழிற்சங்கங்களும் தோல்வி கண்டிருக்கின்றன. எனவே தொழிலாளர்கள் தேசிய போராட்டத்தினை முன்னெடுப்பதே சிறந்ததாகும்.
68 வருட காலமாக முதலாளித்துவ ஆட்சியாளர்களும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க தவறியுள்ளனர். எனவே பொதுவாக நாட்டு மக்களுக்கு புதிய பாதை என்ற ஒன்று தேவைப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களின் மகிமையை தோட்டத் தொழிலாளர்களை பிரநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மழுங்கடிப்பு செய்கின்றன. இந்த நிலையில் இருந்து தொழிலா ளர்கள் மீண்டெழுதல் வேண்டும். அதற்கான காலம் இப்போது உதயமாகி இருக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment