Sunday, August 7, 2016

நிரந்தர கொடுப்பனவை பெற்றுத்தர லாய்க்கற்ற தமிழ் முற்போக்கு கூட்டணி

இடைக்கால கொடுப்பனவான 2,500 ரூபாயை முழுமையாகப் பெற வேண்டுமெனில், ஒரு தொழிலாளி கட்டாயமாக  25 நாட்களுக்கு வேலை செய்திருக்க வேண்டும். எந்தக் கம்பனி, தொழிலாளிகளுக்கு 25 நாட்கள் வேலை வழங்குகின்றது' என்று கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கணபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாயை பெற்றுக்கொடுத்துவிட்டோம். இதற்காக முதல் முறையாக அரச திறைச்சேரியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் வெற்றியாகும் என சிலர் கூறித்திரிகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக சொல்லப்படுகின்ற 2,500 ரூபாய் என்பது சம்பள உயர்வல்ல.   இடைக்கால கொடுப்பனவு மாத்திரமே என்பதை தொழிலாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அதிலும், தொழிலாளி பெற்றுக்கொள்ளும் சம்பளத்தோடு 2,500 ரூபாய் கொடுப்பனவை முழுமையாக வழங்கும் எந்த ஏற்பாடும் கிடையாது. மாறாக நாளுக்கு 100 ரூபாய்தான் வழங்கப்படும்' எனவும் அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, 'இடைக்கால கொடுப்பனவை மாபெரும் சாதனையாகக்காட்டி அரசியல் இலாபத்தை அறுவடைச் செய்யத்துடிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர்,  2,500 ரூபாய் ஒரிரு மாதங்களுக்கு மட்டுமே   தொழிலாளருக்கு கிடைக்கும் என்பதை சொன்னால் சிறப்பாக இருக்கும். 

தனியார்த்துறை தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்க வேண்டும் என சட்டம் இயற்றிய மார்ச் மாதத்திலிருந்து, இம்மாதம் வரையிலான நிலுவையையும் இணைத்து தோட்டத் தொழிலாளருக்கு வழங்க வேண்டும்' என்றார். 'நல்லாட்சிக்காரருக்கு வாக்குகளை வாரி வழங்கிய பெருந்தோட்டத் தொழிலாளருக்கு, 2,500 ரூபாய் கொடுப்பனவை முழுமையாகவும் நிரந்தரமாகவும் வழங்க அரசாங்கம் மறுப்பதால் தோட்டத் தொழிலாளர்களை பாரபட்சமாக நடத்துவது அம்பலமாகியுள்ளது. அத்துடன், நிரந்தர கொடுப்பனவை பெற்றுத்தர லாய்க்கற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியினரின் இயலாமையும் அம்பலத்துக்கு  வந்துள்ளது' என அவர் கூறினார்.

No comments: