அவர் இது குறித்து மேலும் கூறுகையில் தனிமனிதன் சமூகம் என்ற வகையில் உரிமைகள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. ஓவ்வொருவரும் தத்தமது உரிமைகளை எவ்வித தடையுமின்றி சுதந்திரமாக அனுபவிக்கும் நிலைமை காணப்படுதல் வேண்டும். மலையக சமூகத்தை பொறுத்தவரையில் இவர்கள் பல்வேறு உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகிறது. அடிப்படை உரிமைகள் தேவைகள் நிறைவு செய்யப்படாத நிலையில் இச் சமூகம் பெரும் சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இருக்கின்ற உரிமைகளை உரியவாறு அனுபவிக்கும் சந்தர்ப்பம் இவர்களுக்கு கிட்டவில்லை.
மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் தமது சமூகம் சார்பாக எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் மக்களை எவ்வாறு வழிநடாத்துகிறார்கள் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. அரசியல் மற்றும் தொழிற்சங்கத் தகைமை இல்லாதவர்களாக காணப்படுகின்றார்கள். இதனால் இம் மக்களின் உரிமைகள் பறிபோய்க்கொண்டிருக்கிறது. தொழிலாளர்களின் சம்பள விடயம் கூட கம்பனிகளின் இழுத்தடிப்பு நிலை இன்னும் தொடர்கின்றது. யானையையும், குதிரையையும் பெற்றுக்கொடுப்போம் என்று வாய் வீரம் பேசியவர்கள் இன்று மௌனித்துப் போயுள்ளார்கள்.
மலையக மக்களை தொடர்ந்தும் கடனாளியாக்கும் நடவடிக்கையிலேயே மலையக அரசியல்வாதிகள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறார்கள். பெருந்தோட்டங்களினதும், அங்கு வாழும் மக்களினதும் அபிவிருத்தி கருதி பொதுத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு அரசாங்கத்திடம் முன்வைக்கப்படுதல் வேண்டும். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுத்தல் அவசியம் அரசியல்வாதிகளிடையே கருத்து ஒருமிப்பு கிடையாது. ஓவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினை கூறிவருகின்றனர்.
தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பாக 07 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் 10 பேர்ச்சஸ் வழங்கப்பட வேண்டும் என்று இன்னொரு சாராரும் தெரிவிக்கின்றனர். இவ்வாறான கருத்துக்கள் அரசாங்கங்களுக்கு வாய்ப்பாக போய்விடுகின்றன. தனிவீட்டுத்திட்டம் இழுபறி நிலையில் உள்ளமைக்கு மலையக அரசியல்வாதிகளின் பிழையான அணுகுமுறைகளை காரணமாகும். மலையகத்தை மாற்றிக் காண்பிப்பதாக சிலர் மேடைகளில் பேசி வருகின்றனர். முதலில் இவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு எமது சமூக நலன் கருதி அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமாகும்
பெருந்தோட்டங்களை கம்பனிக்ள பொறுப்பேற்றபோது தோட்டங்கள் வளமுடன் காணப்பட்டன. ஆனால் கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் தோட்டங்கள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்றன. தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுவதனையே இலக்காக கொண்ட கம்பனிகள் மக்களின் பொருளதாரத்தினை சீர்குலைத்துள்ளனர்.
இப்போது தோட்டங்களை தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிழையான செயலுக்கு யாரும் துணைபோகக்கூடாது. அரசுடன் இணைந்துள்ள அரசியல்வாதிகள் மலையக மக்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். தனது பொறுப்பில் இருந்தும் விலகிச் செல்ல முற்படக்கூடாது அத்தோடு காலாகாலமும் இன்னொருவரை குறை கூறிக்கொண்டு தமது பணியை உருப்படியாக செய்யாதிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகையோரை மக்கள் தூக்கியெறிவது நிச்சயமாகும் என்றார்.
No comments:
Post a Comment