தனியார்துறை ஊழியர்களுக்கான 2,500ரூபாய் சம்பள அதிகரிப்பு, தோட்டத் தொழிலாளருக்கு மறுக்கப்பட்டுவிட்டது. அதேபோல ஏப்ரல், மே மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட நாளொன்றுக்கு 100 ரூபாய் இடைக்கால நிவாரணக் கொடுப்பனவும் கானல் நீராகிவிட்டது' இவையிரண்டும் மண்ணெண்ணெய் நாடகமாகும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், '2,500 ரூபாயை பெற்றுக்கொடுப்போம் எனவும், முதன்முதலில் அரசாங்கம் முன்மொழிந்த சம்பள அதிகரிப்பு தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கப்போகிறது எனவும் தம்பட்டம் அடித்தவர்கள், அது கைக்கூடாது என்ற நிலை வந்தவுடன்; தற்போது இடைக்கால நிவாரணம் என்ற கூத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இடைக்கால கொடுப்பனவு இரண்டு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுமாம். புதிய கூட்டுஒப்பந்தம் கையெழுத்திட்டவுடன் இவ்வாறு வழங்கப்படுகின்ற தொகையை தொழிலாளர் சம்பளத்திலிருந்து கழித்துக்கொள்வார்களாம்.
அரசாங்கத்திடமிருந்து பெருந்தோட்ட கம்பனிகளுக்கு கடன் வழங்கப்பட்டால் மட்டுமே இந்த இடைக்கால நிவாரண கொடுப்பனவை தோட்டக் கம்பனிகள் வழங்குமாம். இந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் தோட்டத் தொழிலாளர்கள் நிவாரண கடனுக்காக கையேந்தும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது' என்றார். 'கடந்த ஒன்றரை வருடத்தில் மலையக மக்கள் பல பொய்களையும் பித்தலாட்டங்களையும் மண்ணெண்ணை நாடகங்களையும் நன்கு புரிந்து வைத்துள்ளனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், பொருத்தமான நேரத்தில் சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து காய்நகர்ததல்களை ஆரம்பித்தார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அனுபவமில்லாமல் தலையிட்டு, இன்று மூக்குடைப்பட்டு நிற்பவர்கள் அன்று அமைதியாக இருந்திருந்தால் கடந்த ஒரு வருடகாலத்துக்கு முன்பே சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்திருக்கும்' என அவர் மேலும் கூறினார். '
கடந்த பொதுத் தேர்தலில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தோட்ட கம்பனிகளுடன் மறைமுகமாக கூட்டுச்சேர்ந்து ஒரு சமூகத்தின் வாழ்வாதாரத்தை அரசியலாக்கி கெடுத்த வரலாற்று சம்பவமாக இது அமைந்துவிட்டது. எனினும், தொடர்ச்சியாக பெருந்தோட்ட கம்பனிகளுடன் புதிய கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொள்வது குறித்த பேச்சுவார்தைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகின்றது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சில சாதகமான நகர்வுகள் தென்பட்டன. ஆனால், கடந்த ஒன்றரை வருட கால நிலுவை தொடர்பில் காங்கிரஸ் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது. எனினும் தொண்டமான், நாடு திரும்பியவுடன் தோட்டக் கம்பனிகளுடனான பேச்சுவார்த்தை தொடரவுள்ளதுடன், வெகு விரைவில் புதிய கூட்டுஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் ' என்றார்.
No comments:
Post a Comment