கடந்த 18 வருடங்களாக கூட்டு ஒப்பந்தம் மூலமே தோட்டத் தொழிலாளரின் சம்பளம் அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது. தொழிலாளரின் சம்பளத்தை அரசாங்கத்திடமிருந்து சுலபமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூட்டு ஒப்பந்த முறைமையை மிக மோசமாக விமர்சனம் செய்தும் வந்தவர்கள், தற்போது அரசாங்கத்திடமிருந்து சம்பள உயர்வைப் பெற்றுக் கொள்வது எந்தளவு கடினமானது என்பதையும் சாத்தியமற்றது என்பதையும் அனுபவ ரீதியாக உணர்ந்திருப்பார்கள் என்று பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் செயலாளர் நாயகமும் லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் பொதுச்செயலாளருமான எஸ். இராமநாதன் தெரிவித்தார்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் அமைச்சர்கள், ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் விபரங்களை கூட்டுக் கமிட்டியின் தோழமைச் சங்க தலைவர்களுக்கு விளக்குவதற்காக கண்டி இலங்கை தொழிலாளர் செங்கொடிச் சங்கக் காரியாலயத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். செங்கோடிச் சங்கத்தின் தலைவி மேனகா கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கே.எம். கிருஷ்ணமூர்த்தி, எஸ். முருகையா, ஏ. முத்துலிங்கம், எஸ். ஆனந்தி, எஸ். கந்தையா, ஆர். சிரில் ஆகிய முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்த இக்கூட்டத்தில் திரு இராமநாதன் தொடர்ந்து கருத்து தெரிவித்தபோது;
கூட்டு ஒப்பந்தத்தில் யார் கையொப்பமிடுவது என்பது முக்கியமல்ல. யார் கையொப்பமிட்டாலும் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்கு கூட்டு ஒப்பந்த முறைமையே சிறந்ததாகும் என்பதும் தொழிலாளர்களின் பலத்தின் மூலம் பேரம்பேசி சம்பள உயர்வையும் ஏனைய உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை நம்பி தொழிலாளரின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது.
இன்று முதலாளித்துவ தோட்டக் கம்பனிகளும் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் ஒன்றுபட்டு செயற்படுகின்றனர். தொழிலாளரின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதற்கு காரணம் அரசிலுள்ள பெரும் புள்ளிகளின் ஆதரவும் அனுசரணையும் தோட்டக் கம்பனிகளுக்கு இருக்கின்றமையேயாகும். இதனால் தான் என்றுமில்லாதவாறு தோட்டக் கம்பனிகள் முரட்டுப் பிடிவாதமாக நடந்து கொள்கின்றன. தோட்டக் கம்பனிகள் தமது இறுமாப்பைக் கைவிட்டு தொழிலாளரின் சம்பள உயர்வுக் கோரிக்கையில் நியாயமான தீர்வினை மேற்கொள்ள முன்வர வேண்டும். தொழிலாளர்களது அடிப்படை சம்பள உயர்வு, வரவு போனஸ், விலையேற்ற அல வன்ஸ், மேலதிக தேயிலை இறப்பருக்கான கொடுப்பனவுகளின் அதிகரிப்பையே நாம் முன்வைத்துள்ளோம்.
இக் கோரிக்கையினையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறோம். இக் கோரிக்கையினை வென்றெடுப்பதற்காக எதிர்வரும் நாட்களில் தோட்டக் கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் அழுத் தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானிக்கப் பட்டிருப்பதாக வும் கூறினார்.
|
No comments:
Post a Comment