மலையக பகுதியில் உள்ள தோட்டங்களில் தேயிலை செடிகளின் கொழுந்து விளைச்சல் அதிகமாக காணப்படுகின்றது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேயிலை மலைகளில் கொழுந்தின் விளைச்சல் குறைந்து வரட்சியான நிலைமை காணப்பட்டதால் தோட்ட தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் கஷ்டத்தை எதிர்நோக்கியதோடு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மாத்திரமே தோட்ட நிர்வாகத்தினால் தொழில் வழங்கப்பட்டது.
இதன் காரணமாக தொழிலாளர்கள் பொருளதார ரீதியில் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கி வந்ததோடு குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கடன் சுமைக்கு தள்ளப்பட்டார்கள்.
தற்போது கொழுந்து விளைச்சலின் காரணமாக தொழிலாளர்கள் குடும்ப வருமானத்தை கருத்தில் கொண்டு நாளுக்கு அதிகமான கிலோ கிராம் கொழுந்தினை பறித்து வருவதோடு அதிகாலை 6 மணிக்கு தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் மாலை 6 மணி வரை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலநிலை சீர்கேட்டினால் இத் தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்ட போதிலும் ஏதோ ஒரு வகையில் குடும்ப வருமானத்தை கருத்தில் கொண்டு மழை, குளிர் பாராமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருமானத்திற்காக போராடுகின்றனர்.
இத் தோட்ட தொழிலாளர்கள் படும் கஷ்டங்களையும், வேதனைகளையும் அறிந்த தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு பகல் உணவு வழங்குவதோடு மாலை நேரத்தில் கொழுந்து மடுவங்களில் வைத்து கோப்பி தேநீர் வழங்கி வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் மாலை நேரத்தில் அதிக நேரம் வேலை செய்வதாக தோட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சில தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தில் தண்ணீர் இருப்பதற்காகவும், கொமிஷன் என்ற அடிப்படையில் ஒரு நேர நிறுவைக்கு 3 கிலோ தொடக்கம் 5 கிலோ வரை தங்களுடைய கொழுந்து இறாத்தலில் கழிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இன்னும் சில தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு எவ்வித வசதிகளும் செய்து கொடுக்காமல் வருமானத்தை நோக்கி நிர்வாகம் கெடுபிடியாக நடந்து கொள்வதாகவும், கடுமையான மழை நேரத்தின் போது விடுமுறை கூட தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான கடும் கஷ்டத்தில் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு கிடைக்கப்படவில்லை என தொழிலாளர்கள் அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
கூட்டு ஒப்பந்தம் முடிவுவடைந்து ஒரு வருடமும் 2 மாதங்களும் கடந்த போதிலும் சம்பள உயர்வை பெற்று தருவதாக கோரிய மலையக அரசியல்வாதிகள் போராட்டங்களை மேற்கொண்டு விட்டு அமைதியாக மௌனம் சாதியப்பதாக தொழிலாளர்கள் அங்கலாயிகின்றனர்.
கடந்த வருடங்கள் பல போராட்டங்களை சம்பள உயர்வுக்காக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்ததாகவும், தொடர்ச்சியாக செய்யப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் சில மாதங்களுக்கு மாத்திரமே தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல் இருக்கும் எனவும், அதன்பின் கொழுந்து விளைச்சல் படிப்படியாக குறையும் என தொழிலாளர்கள் தெரிவிப்பதோடு மீண்டும் வரட்சி ஏற்படும். அப்போது மீண்டும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்று தருமாறு தோட்ட தொழிலாளர்கள் அரசியல்வாதிகளிடம் ஞாபகப்படுத்துகின்றனர்.
No comments:
Post a Comment