தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஆறு மாதங்கள் ஆகியும் புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை. அதனால், தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் கிடைக்கவில்லை.
மேலும் தீபாவளிப் பண்டிகை காலத்தில் அத்தியாவசியப்
பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. எனவே,
தொழிலாளர்களின் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம்
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணி உப
தலைவர் செல்லையா சிவசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தமது அறிக்கையில், தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பருப்பு, சீனி முதலான அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்
இருக்கின்றது. இதனால் குறைந்த வருமானம் பெறுகின்ற தோட்டத்
தொழிலாளர்கள் பெரும் பொருளாதாரச் சுமைக்கு முகங் கொடுக்க வேண்டிய
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கும், தனியார் துறை ஊழியர்களுக்கும் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சம்பள அதிகரிப்பு தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை. மேலும், அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கிடைக்க வேண்டிய சம்பள உயர்வும் கிடைக்கவில்லை.
அதற்காக தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும்
இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே
முடிவடைந்துள்ளன. இந்நிலையில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் தோட்டத் தொழிலாளர்கள் புத்தாடை கொள்வனவு செய்யவும், பண்டிகைக்குத் தேவையான
பலகாரங்களைத் தயாரிக்கவும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி
வருகின்றார்கள். பண்டிகை காலத்துக்குத் தேவையான அத்தியாவசியப்
பொருட்கள் அனைத்தினதும் விலைவாசி திடீரென அதிகரித்துள்ளது. இதனால்
ஏற்கனவே, பொருளாதாரச் சுமையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள்
மேலும் சுமைக்கு ஆளாகி இருக்கின்றார்கள். கம்பனிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில்
இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இழுபறி நிலையில்
காணப்படுகின்றது. எனவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் இன்றைய அரசாங்கம் ஆட்சியமைக்க பெருமளவில் நம்பிக்கையுடன் வாக்களித்த
மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் அரசாங்கம் தலையிட்டு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்லையா
சிவசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment