இன்று 17.10.2015 வறுமை ஒழிப்பு தினம்
ஒரு நாட்டின் பொருளாதார உயர்வானது அந்த நாடுகளில் வாழ்கின்ற குடிமக்கள் யாவரும் போதிய அளவு அத்தியாவசிய அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள் சுத்தமான குடிநீர் போதியளவு கல்வி அறிவு வீதி கட்டமைப்பு வசதி, நவீன தொலைத்தொடர்பு வசதி ஆகியவைகளுடன் தனிமனித சுதந்திரம் போன்றவைகளில் தன்னிறைவு உள்ளவர்களாக இருத்தல் வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.
1987 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த ஜோசப் ரெசின்சி உலகிலிருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டுமென தனது வாலிப வயதிலிருந்து குரல் கொடுத்து வந்ததுடன் அதற்கான சமூகம் தழுவிய வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டார். இதன் பலனாக 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உலக வறுமை ஒழிப்பு தினமாக அக்டோபர் 17 ஆம் திகதியை பிரகடனப்படுத்தி உள்ளது. ஜோசப் ரெசின்சி என்பவரே உலகில் முதன் முதலில் வறுமை ஒழிக்கப்படல் வேண்டுமென போராடி அதை உலகளவில் சமூகமயக்கியவர் எனலாம்.
இதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை தனது அங்கத்துவ நாடுகளை ஒன்றிணைந்து உலகிலிருந்து வறுமையை ஒழிப்பதற்கும் தனிமனித பொருளாதார உயர்விற்குமான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்.
உலகில் வறுமையான நிலையின் மனித இனம் வாட்டம் பெற போர், இயற்கை சீற்றங்கள், காலநிலையில் சடுதியான ஏற்றத்தாழ்வுகள் கல்வி அறிவின்மை, அடிமைத்தனம் போன்றவைகளுடன் அரசியல் ரீதியான தாக்கங்களும் காரணமாக இருக்கின்றன.
வறுமை அல்லது பட்டினி என்பது ஒரு தனிமனிதன் ஒரு நாளைக்கு 1800 கலோரி உணவுக்கு குறைவாக உட்கொள்கின்றான் என்பதே அர்த்தமாகும். போஷாக்கற்ற அல்லது சீரான நேரம் தவறிய உணவு முறைகளால் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றது. இன்று ஆபிரிக்காவில் மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் நிற்கின்றார்கள். அங்கு மனித இன அழிவு தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இன்று குறைந்த வருமானம் பெறும் சமூகத்தினரிடையே வறுமையைக் குறைப்பது சவால்மிக்க ஒரு பணியாகும். இது அரசாங்கம் மட்டுமின்றி உலகில் உள்ள முழுமொத்தச் சமூகமும் எதிர்நோக்க வேண்டிய சவாலாகும். உலகிலிருந்து வறுமையை நீக்கவென உலக வங்கி உட்பட பல நாட்டு நிதி நிறுவனங்கள் பல ஆக்கபூர்வமான பங்களிப்புக்களை மிகத் தீவிரமாக செய்து கொண்டுதான் உள்ளது. ஆனால் வறுமை முற்றாக அல்லது பாதியளவு குறைக்கப்பட்டிருக்கின்றதா என்பது ஆய்வு செய்ய வேண்டியது.
எமது இலங்கைத் திருநாட்டைப் பொறுத்தவரை தனிமனித வருமானம் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் அவ்வப்போது கூறிவந்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியின் வெளியிட்ட சிறு குழுக்கள் முறை நூலில் எமது நாட்டின் வறிய மக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும் தற்சமயம் அத்தொகை நாட்டின் மொத்த சனத்தொகையில் 15 வீதத்தை விடக் குறைவாக காணப்படுகின்றது என மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால் எழுதியுள்ளார். இதிலிருந்தும் தற்கால நல்லாட்சி அரசின் வேலைத்திட்டங்களின் மூலமாகவும் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மிகச் சீராக தூரநோக்கான செயல்திட்டத்துடன் முன்னெடுத்து வருகின்றது என சுட்டிக்காட்ட முடியும்.
கீழைத்தேய நாடுகளை ஆங்கிலேயர் ஆட்சி செய்த நேரத்தில் மக்களின் உணவிற்குத் தேவையான பொருட்களை பகிர்ந்தளித்தார்களே தவிர தூரநோக்கான பொருளாதார அபிவிருத்தியை மக்களுக்காகச் செய்யவில்லை. தங்களது நாட்டின் பொருளாதாரம் வெள்ளைக்கார மக்களின் நல்வாழ்விற்கான ஏற்பாடுகளை வசதிவாய்ப்புக்களுக்கு ஏற்புடைய தொழில் துறைகளையே ஏற்படுத்தி இருந்தனர்.
இதனால் தான் வறிய நாடுகள் செல்வந்த நாடுகள் என்ற இருபெரும் பிரிவுகள் தோற்றம் கண்டது. மக்களை வறுமை நிலையில் வைத்துக் கொள்ளவே விரும்பி அதற்கு செயல்வடிவமும் கொடுத்தார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்தவுடன் இந்த மானிய உணவு விநியோகம் தொடர்ந்து வந்த அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. அன்று மக்களுக்கு இலவசமாக ஒரு சேர் அரிசி இரண்டு சேர் (படி) அரிசி என்பன பெரும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அரசியலை புரட்டிப்போடும் அளவிற்கு மானிய விநியோகம் செல்வாக்கு பெற்றிருக்கின்றது. இன்றும் இதை சமுர்த்தி கொடுப்பனவு ஊடாக மக்கள் பெற்று வருகின்றார்கள்.
எந்தவொரு மானிய இலவச விநியோகத்திற்கும் பணம் வழங்கப்பட முடியாது என உலக வங்கி சிவப்புக் கொடியை காட்டுகின்றது. கடன் வாங்கும் போது கைக்கொள்ளப்படும் இறுக்கமான நடைமுறை அரசியல் நீரோட்டத்தில் மாற்றம் காணுகின்றது.
வறுமை ஒழிக்கப்படுவதற்கு சிக்கனம் சேமிப்பும் கண்டிப்பாக தனிமனிதரிடத்திலும் நாட்டிலும் இருத்தல் அவசியம். பிரித்தானியரின் குடியேற்றப் பொருளாதார அபிவிருத்திக்கு முதலீட்டாக்கம் முக்கியம் என கண்டறியப்பட்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சேமிப்பு வங்கியினை நிறுவிய முன்னோடிகள் என்ற பெருமை ஆளுநர் சேர். நாபர் வில்மட் ஹோட்டின் மற்றும் சேர். பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர்களையே சாரும்.
இலங்கையில் சேமிப்பு வங்கியானது 6.8.1832 ல் தாபிக்கப்பட்டது. அன்று சேமிப்பு கணக்குகள் பணத்திற்கு பதிலாக தங்கப் பவுண்கள் கொண்டு திறக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.
எனவே ஒரு நாட்டிலிருந்தும் உலகிலிருந்தும் வறுமை ஒழிக்கப்பட வேண்டுமாக இருந்தால் நாட்டில் உற்பத்தி தொழில் துறை சார்ந்த திட்டங்கள் உருவாக்கத்துடன் நல்ல தூரநோக்கான அரசுகள் நாட்டில் இருத்தல் அவசியம். லஞ்சம் ஊழல் அற்ற ஆட்சியினால் மிக விரைவாக வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.
வறுமை என்பது என்றைக்கும் நிலையானதல்ல. வறுமையானது சிலரது வாழ்நாட்களில் கடத்த வேண்டியிருக்கும் ஒரு தற்காலிக வாய்ப்பு மட்டுமே. சிலர் இவ்வாய்ப்பை துரிதமாக கடந்து முன்னோக்கி செல்வதோடு மற்றும் சிலர் சில நாட்கள் கடந்து தாமதித்தேனும் பொருளாதார மீட்சிபெறுகின்றான். உலக மக்கள் சமூகம் வறுமையை எதிர்த்து நின்று உழைத்தால் இதை விரட்டி அடிக்கலாம் என்று கூறமுடியும்.
No comments:
Post a Comment