Thursday, October 22, 2015

எல்லை நிர்ணயம் - தீர்வு காண குழு நியமனம்

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள, ஐவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சு தெரிவித்துள்ளது.

தொகுதி எல்லை பெயர்கள் மற்றும் இலக்க திருத்தம் அடங்கிய அறிக்கையொன்றை 3 மாதங்களுக்குள் குறித்த குழு சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தங்கள் குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் சன விகிதாசாரம், புவியியல் அமைப்பு, பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி மட்டத்தின் அளவு ஆகியவற்றை கருத்திற் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி அமைச்சின் முன்னாள் செயலாளர் அஷோக்க பீரிஸ் தலைமை வகிக்கும் இந்த குழுவில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஏ.எஸ் எம் மிஸ்பார் அங்கம் வகிப்பதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் சட்டத்தரணி கே. சாலிய அங்கம் வகிக்கின்றார்.
மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பில் பேராசிரியர் பி.பாலசுந்தரம் பிள்ளை ஐவரடங்கிய குழுவில் அங்கம் வகிக்கின்றார்.

பொது மக்களின் கருத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த குழுவினால் கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக மூவரடங்கிய தொழிநுட்ப குழுவும் நியமிக்கப்படவுள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவில் அளவையாளரால் நியமிக்கப்படும் அதிகாரி, தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்படும் அதிகாரியொருவர் மற்றும் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்படும் அதிகாரயொருவர் என மூவர் அடங்குகின்றனர்.

No comments: