Saturday, October 24, 2015

வெலிமடையில் 80 குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தில்..!

ஊவா மாகாணம் வெலிமடை பிரதேசத்திற்குட்பட்ட கிழச்சி தோட்டத்தில் 80 குடும்பங்களை சேர்ந்த மக்களை கடந்த 18 ஆம் திகதி மண்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்

 ஆனால் இவர்கள் தங்குவதற்கான இடத்தினை அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுக்கவில்லையென இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இத்தோட்டத்தில் அமைந்துள்ள குடியிருப்புகள் அனைத்தும் மண்மேடுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழ கூடிய இடங்களில் அமைக்கபட்டுள்ளதால் சரிவு ஏற்பட கூடிய அபாயம் அதிகமாகவே உள்ளது.

இதேவேளை சில வீடுகள் மண்மேட்டில் நிர்மாணிக்கபட்டுள்ளதால் எப்போது சரிந்து விழும் என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.
 
மேலும் பாதிக்கப்பட்ட மக்களை தோட்டத்தில் உள்ள பொது கட்டிடத்தில் தங்குமாறு அறிவித்தபோதிலும் இக்கட்டிடத்தில் தங்குவதற்கான எவ்வித வசதிகளும் இல்லை.
 
இதனால் இத்தோட்ட மக்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இது தொடர்பாக இப்பிரதேச அரசியல் வாதிகளிடம் அறிவித்தபோதிலும் இதுவரை எவரும் இத்தோட்டத்திற்கு வரவில்லையென தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். 

அத்தோடு தங்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என இம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே எங்களை பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments: