மீரியபெத்தவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் முற்றுமுழுதாக மந்தகதியிலே இடம்பெற்று வருகின்றது. இதனைத் துரிதப்படுத்தி வெகுவிரைவில் அம் மக்களுக்கான வீடுகளை கையளிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பேன் என ஊவா மாகாண, தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.
மாகாண அமைச்சுக்களைப் பொறுப்பேற்ற அமைச்சர் செந்தில் தொண்டமான் மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் பொருட்டு அவர்கள் தங்கியிருக்கும் மாக்கந்தை தேயிலைத் தொழிற்சாலைக்கு விஜயம் செய்து அவர்களைச் சந்தித்து உரையாற்றுகையில், நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் மாற்றத்தினால் எம்மால் சமூக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. அக்காலம் இருள் சூழ்ந்த காலமாகவே காணப்பட்டது. ஊவா மாகாண சபையிலும் இதுபோன்ற நிலைமையே காணப்பட்டது.
மத்திய அரசில் எமக்கு அரசியல் பலம் இல்லாமல் இருந்தால் கூட ஊவா மாகாண சபை எனது பொறுப்பில் இருக்கும் அமைச்சுக்களைப் பயன்படுத்தி தடைப்பட்டிருந்த சமூகப் பணிகளையும் வீடமைப்பிலிருந்து வந்த மந்த கதியையும் நிவர்த்தி செய்ய முடியும். எனது முதற் பணி மீரியபெத்தவில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தினை துரிதமாக நிறைவு செய்வதாகும். வெகுவிரைவில் அவ்வீடுகளை எமது மக்களுக்கு கையளிக்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பேன். ஆகவே மக்கள் சோர்ந்து போகாமல் உற்சாகமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
ஊவா மாகாணத்தின் பாடசாலைகள், தோட்ட வைத்தியசாலைகள் ஆகியவற்றுக்கான பாதைகளை அமைக்கும் வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதைப் போன்று ஆகக் கூடிய முன்னுரிமையை மீரியாபெத்த வீடமைப்புத் திட்டத்திற்கு வழங்குவேன்.
அரசியல் மாற்றங்கள் எதுவும் இடம்பெறாமல் இருந்திருக்குமேயானால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் புதிய வீடுகளை நாம் கையளித்திருப்போம் என்றார்.
No comments:
Post a Comment