பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவர்த்தை கடந்த புதன் கிழமை 15-07-2015 கொழும்பு தொழில் அமைச்சில் தொழில் அமைச்சர் நாவின்ன தலைமையில் இடம்பெற்றது.
பேச்சுவார்த்தையின்போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தனர்.
பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 450 ரூபாயிலிருந்து 510 ரூபாயாக அதிகரிக்க முடியுமென முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்ததற்கமைய தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 510 ரூபாவாகவும்,; ஊக்குவிப்புத் தொகையாக 40 ரூபாயும் வரவுத்தொகையாக 140 ரூபாயும் ஊழியர் சேமலாப நிதியுடன் சேர்த்து மொத்தமாக 766 ரூபா வழங்குவதாக தெரிவித்துள்ளமையை இ.தொ.கா மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் எஸ் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை, கடந்த 2013 ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின் உடன்படிக்கை 2015 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 24ஆம் திகதியும் இரண்டாவது பேச்சுவார்த்தை மே 18, மூன்றாவது பேச்சுவார்த்தை ஜூன் 22, நான்காம்கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 2ம் நடைபெற்றது. இம்முறை நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் அவை எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் தோல்வியில் முடிவடைந்தன.
இதனையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த 06-07-2015 முதல் 1000 ரூபா வை வலியுறுத்தி மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை தொடர்ந்ததையடுத்து தோட்ட நிர்வாகங்களும் பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
இறுதிநாள் பேச்சுவார்த்தையின் போது இ.தொ.கா கடந்த ஒருவார காலமாக தொழிலாளர்களின் மெதுவாக வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தை வழங்குமாறு கோரியதுடன். சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தேர்தல் முடிந்த பிறகு மேற்கொள்ள கோரியுள்ளனர். முதலாளிமார் சம்மேளனம் இதற்கும் இணங்காததால் மீண்டும் பேச்சுவார்த்தை திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment