Tuesday, July 22, 2014

பாதிக்கப்படுகின்ற மலையக தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சட்டத்தில் இடமில்லை

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக தரவுகள் பெறப்படுகின்ற பொழுதிலும் பெருந்தோட்டப்புறங்களின் பாதிப்புகள் தொடர்பாக எந்தவிதமான தரவுகள் பெற்றுக்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ அதிகாரியிடம் மலையக மக்கள் முன்னணியின் இராதாகிருஷ்ணன் அதிகாரியிடம் கேட்டபொழுது பெருந்தோட்ட மக்களுக்கு உலர்உணவு பொருட்களை மாத்திரமே வழங்க முடியும். வேறு எந்த உதவிகளையும் தங்களால் செய்ய முடியாது எனவும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான கொடுப்பனவையும் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
 
அனர்த்த முகாமைத்துவ அதிகாரி தெரிவித்த கருத்துக்கள் அதிருப்திகுரியவை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் சட்டம் என்பது தோட்டத் தொழிலாளர் என்ற பாகுபாடில்லாது சகலருக்கும் சமமாக செயற்படுத்தப்பட வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து பெருந்தோட்ட மக்களுக்கும் பயன் உள்ளதாக மாற்றுமாறு பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டேன். ஆனால் இதுவரையில் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என நான் அறிந்து கொண்டேன்.
அப்படியானால் அரசாங்கம் பெருந்தோட்ட மக்கள் தொடர்பாக உரிய அக்கறை செலுத்தவில்லை என கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே நாம் தோட்ட தொழிலாளர்களுக்கு தனி வீடுகளை அமைத்து அவர்களுக்கான வீட்டு உரிமை பத்திரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கைகளை விடுத்துள்ளோம்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற உதவிகள் கிடைக்கா விட்டால் அது ஒரு புறத்தில் மனித உரிமை மீறல் செயலாகவும் கருத வேண்டியுள்ளது. ஒரு நாட்டில் சட்டம் ஒரு சாராருக்கு ஒரு மாதிரியும் இன்னொரு சாராருக்கு வேறு மாதிரியாகவும் நடைமுறைப்படுத்தப்படுமானால் அது எந்தவிதத்தில் நியாயமானது என எனக்கு புரியவில்லை.
 
அப்படியானால் அந்த சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய அதனை மாற்றியமைக்க வேண்டும். இது மட்டுமல்ல இன்று பிரதேச சபைகளில் பெருந்தோட்டங்களுக்கு வேலை செய்ய முடியாமல் உள்ளது. இதற்கும் சட்டம் ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் எந்த நாளும் வாக்களிக்கும் இயந்திரங்களாக மாத்திரம் இருக்க வேண்டும் என அரசாங்கம் நினைத்தால் அது பிழையான ஒரு செயல்பாடாகவே கருத வேண்டியுள்ளது.
 
எனவே, இவ்வாறான விடயங்களை கருத்தில்கொண்டு அரசாங்கம் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். நாம் பாராளுமன்றத்தில் பேசுகின்ற விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படா விட்டால் நாம் அங்கு பேசுவதில் எந்தவிதமான பலனும் இல்லை. அது மட்டுமல்லாமல் எதற்காக இந்த மக்கள் எங்களை தெரிவு செய்து இங்கு அனுப்பியுள்ளார்களோ அந்த நோக்கமும் நிறைவேறாமல் போய்விடும்.

No comments: