Friday, August 27, 2010

சம்பள கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக வழக்கு


தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்க அங்கத்தவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதால் இதற்கெதிராக உயர் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள மீளாய்வுத் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம், பெருந் தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகிய தொழிற் சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம் பெற்று அதன் பின்பு கூட்டொப்பந்தம் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தக் கூட்டொப்பந்தமானது தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்குச் சாதகமாக மேற்கொள்ளப்படுவதால் தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியத்தினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படுகின்றது.

கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தமது அங்கத்தவர்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற இந்த கூட்டொப்பந்தமானது ஏனைய தொழிற் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கி விடுவதால் கூட்டொப்பந்தத்தில் உடன்படாத தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் விருப்பமின்றி கூட்டொப்பந்த சம்பளத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை நாம் அடிப்படை மனித உரிமை மீறலாக கருதுகின்றோம்.

இதனடிப்படையில் இந்தக் கூட்டொப்;பந்த்திற்கெதிராக உயர் நீதி மன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆராய்ந்து வருவதாக சதாசிவம் குறிப்பிட்டார்

No comments: