Sunday, July 11, 2010

பிரதேச செயலகம், கிராம சேவகர் எல்லைகளை மீள் நிர்ணயிக்க முன்மொழிவுகள்

உள்ளுராட்சி அமைப்பின் எல்லைகளில் மாற்றங்களைக் கொண்டு வருதல் என்பது வெறுமனே புவியியலை மாத்திரம் மையப்படுத்தியதாக கொள்ள முடியாது. சிவில், அரசியல், பொருளாதார, கலாச்சார உரிமைகளைச் சார்ந்த சகல விடயங்களையும் தீர்மானிப்பதாக அமைந்திருக்கின்றது. எனவே குறிப்பாக சிறுபான்மை மக்கள் இவ்விடயம் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதென மனித அபிவிருத்தி ஸ்தாபனம் தெரிவிக்கிறது. கடந்த வாரங்களில் மலைய மக்களை மையமாகக் கொண்டு பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவகர் எல்லைகளை மீளமைத்தல், மீள் நிர்ணயம செய்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினர் மத்தியில் கலந்துரையாடல்களையும், கள ஆய்வுகளையும் மத்திய, ஊவா, சப்ரகமுவ போன்ற மாகாணங்களில் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து உயர்மட்ட கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றது. கலாநிதி ஏ.எஸ். சுந்திரபோஸ், பேராசிரியர் எம். எஸ். மூக்கையா, திரு எஸ் விஜயசந்திரன் ஆகியோர்களின் ஆய்வறிக்கையினை அடிப்படையாகக் கொண்டும் பல்வேறு மட்டங்களில் இருந்து முன் வைக்கப்பட்ட ஆலோசனைகள் மூலம் தயாரிக்கப்பட்ட முன் மொழிவுகளை கொண்டும் நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களுக்கான முன்மொழிவுகள் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் மலையக மக்கள் வாழும் பகுதிகளில் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் அங்கு வாழும் மக்கள் தொகைக்கேற்ப அதிகரிக்கப்படல் வேண்டும் எனவும் இதற்கு சகலரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் மனித அபிவிருத்தி ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்

மலையக மாவட்டங்களை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கிற்கு அப்பால் மிக அதிகமான தமிழ் பேசும் மக்களைக் கொண்டதாக காணப்படுவது நுவரெலியா மாவட்டமாகும். ஓப்பீட்டு ரீதியில் நுவரெலியா மாவட்டம் ஏறக்குறைய 7,55,500 பேர்கள் சனத்தொகையை கொண்டிருந்த போதும் அங்கு ஐந்து(5) பிரதேச செயலகங்களே காணப்படுகின்றன. அதேவேளை அம்பேகமுவ பிரதேச செயலகம் சராசரியாக 130,000 தோட்ட மக்களுக்கு சேவையாற்ற வேண்டியுள்ளதோடு, ஒரு கிராம சேவை அலுவலர் சராசரியாக தோட்டப்பகுதியில் ஏறத்தாழ 3500 மக்களுக்கு சேவை செய்ய வேண்டியுள்ளது. இது தேசிய மட்டத்தை விட ஐந்து (5) மடங்கு பெரிதானது.

அதேபோல் கண்டி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் பெருந்தோட்ட மக்கள் சார் அல்லது தமிழ் பேசுகின்ற மக்கள் அதிகமாக பன்வில , புசல்லாவ, நாவலபிட்டிய, தெல்தோட்ட, இரங்கலை, பிரதேசங்களில் வாழ்கின்றனர். இவ்வடிப்படையில் பெருந்தோட்ட மக்களை மையமாகக் கொண்டு புதிதாக ரங்கலை பிரதேசத்தில் 30 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம், ரஜவெல பிரதேசத்தில் 30 கிராம சேவகர்களை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம் புதிதாக அமைக்கப்பட வேண்டுமென பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் மலைய பெருந்தோட்ட மக்கள் பசறை, ஹாலி-எல, அப்புத்தளை, போன்ற பிரதேசங்களிலேயே செறிவாகக் காணப்படுகின்றனர். அதேபோல இப் பிரதேசங்களில் தமிழ் பேசுகின்ற மக்கள் குவியப்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அந்த அடிப்படையில் நமுனுகல பிரதேசத்தில் 50 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டியுள்ளது. அத்துடன் ஹல்துமுல்ல பிரதேச செயலகம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு புதிதாக வெலன்விட்ட என்ற பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொட, இம்புல்பே, இறக்குவான, காவத்தை, நிவித்திகலை போன்ற பிரதேசங்களிலேயே பெருந்தோட்டங்கள் மையப்படுத்தப்பட்டுள்ளன. இப் பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மற்றும் கிராமிய பெருந்தோட்ட மக்களின் நலன் கருதி பலாங்கொட, இப்புல்பே ஆகிய பிரதேச செயலகங்களுடன் புதிதாக மாரத்தன்ன என்ற பிரதேச செயலகம் 40 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட வேண்டுமென பிரேரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 38,000 சனத்தொகையையும் 38 கிராம சேவகர் பிரிவுகளையும் மையமாக கொண்டு புதிதாக இறக்குவானை என்ற பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டுமென பிரேரிக்கப்பட்டுள்ளது.

No comments: