Sunday, July 11, 2010

மழைக்காலங்களில்
தொழிலை இழக்கும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்கள்

இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மழைக் காலங்களில் இறப்பர் பால் வெட்ட முடியாததால் நாளாந்தம் வேலைகளை இழப்பதுடன் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

ஏனைய தொழில்துறைகளைப் போலவே இயற்கை அனர்த்தங்களால் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கும் நிவாரண மற்றும் நிதியுதவிகளை வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடும் மழை காரணமாக வேலை செய்ய முடியாமலே போனால் அன்றைய நாட் சம்பளத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் நாட் சம்பளத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் இந்த நிலையானது 150 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்வது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

பெருந்தோட்டத் துறையில் தேயிலை உற்பத்தி துறையில் ஈடுபடுபவர்களின் நிலையும் அது போன்றே தொடர்கிறது. ஆனால் தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் தோட்ட உத்தியோகத்தர்களைப் பொறுத்த வரையில் மாதச் சம்பளம் பெறுவதால் தமது குடும்ப பொருளாதாரத்தை சமாளித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

பெருந்தோட்டத் துறையில் கடும் மழை பெய்தால் இறப்பர் உற்பத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மழைக் காலங்களில் இறப்பர் பால் வெட்ட முடியாது. தனியே இறப்பர் உற்பத்தியை மட்டும் கொண்டிருக்கும் தோட்டங்கள் முடங்கிப் போய்விடுகின்றன.

களுத்துறை மாவட்டத்தில் இறப்பர் தோட்டங்களே அதிகளவில் காணப்படுகின்றன. இறப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் மழைக் காலங்களில் வேலை எதுவுமின்றி இருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அவர்கள் வேறு தொழில்களைச் செய்யக் கூடிய சூழல் இறப்பர் தோட்டங்களில் இல்லாததால் அவர்களுக்கு நிவாரண உதவிகளோ அல்லது விசேட கொடுப்பனவுகளோ கிடைப்பதில்லை. இதனால் தொழிலாளர்கள் எதுவித வருவாயும் இன்றி சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக தொழிலாளர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாதுள்ளது.

களுத்துறை மாவட்டத்திலுள்ள வெளிப்பென்னை, யட்டதொல, மேல்காவ, நேபொட, பதுறலியா போன்ற பகுதி மக்கள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலையேற்படுகிறது. அப்பகுதி தோட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகமோ, அரசியல், தொழிற்சங்கத் தலைமை களோ, தொண்டு நிறுவனங்கள் எதுவும் உதவியளிக்க முன்வருவ தில்லை. அதேவேளை தோட்டப் பகுதிகளை அண்மித்த கிராமப் பகுதிகளில் அந்தந்த கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு பிரதேச செயலகங்கள் ஊடாக அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. அது மட்டுமல் லாது அரசியல்வாதிகளும் போட்டிப் போட்டிக் கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்குவார்கள். ஒருசில அரசியல்வாதிகள் மட்டும் பாகுபாடின்றி தமது சேவைகளைச் செய்கின்றனர். அரசாங்கத்தின் உதவிகள் எதுவும் தோட்ட மக்களைச் சென்றடைவது மிகவும் குறைவு.

எனவே, இவ்வாறான விடயங்கள் தொடர்பாக தொழிற்சங்கங்கள், தோட்டக் கம்பனி உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டியது அவசியமாகும். இயற்கை அனர்த்தங்கள், தொடர் மழை போன்ற காரணங்களால் பெருந்தோட்டத் தொழில்துறை பாதிக்கப்படும் போது தொழிலாளர்களின் நலன்கள் குறித்து கூடிய அக்கறை செலுத்த வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகள் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் நாட்டின் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் செயற்பட வேண்டும். குறிப்பாக இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படும் போது நிவாரணம் வழங்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்த வரை தோட்டம்தான் அவர்களின் வாழ்க்கை. தோட்டத்தின் வளர்ச்சியின் நலன் கருதி கஷ்டப்படும் தொழிலாளர்களை தோட்ட நிருவாகம் கவனிக்க வேண்டும்.

வெளியில் வேலை செய்பவர்கள் எட்டு மணித்தியாலத்திற்கு குறைவாக வேலை செய்து நாட்சம்பளம் பெறுகின்றனர். ஆனால் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்த வரை காலையில் பிரட்டு களத்திற்கு சென்றால் மாலை வரை வேலை செய்து தோட்ட நிருவாகம் எதிர்பார்க்கும் அளவு இறப்பர் பாலோ, கொழுந்தோ கொண்டு வராவிட்டால் அன்றைக்கு அரை நாட் சம்பளம்தான் கிடைக்கும். இவ்வாறான சூழ்நிலையிலும் தோட்டத்தை நம்பி வாழும் மக்களுக்கு யாரும் கேட்காமலே உதவி செய்ய வேண்டும். இதுவே மழைக் காலங்களில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் தோட்ட நிருவாகத்திடம் இருந்து எதிர்பார்ப்பதாகும்.


டி. வசந்தகுமார்
தினகரன்

No comments: