தொழிலாளர் ஐக்கியம் பிளவு படாமலிருக்க இம் மேதினத்தில் உறுதியெடுப்போம்
உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் உயிர்ப்புத் தினமும் உரிமைத் தினமுமான உன்னத மே தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தினர் இன்னல்களையும் எதிர்ப்புகளையும் கண்டுவரும் காலகட்டத்திலேயே மீண்டுமொரு மே தினம் இன்று வந்துள்ளது.
இவ்வாறு ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைவர் ஏ.பி.கணபதிப்பிள்ளை விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
திசைமாறிப்போகும் மேதினம் களியாட்டங்களுக்கு கைகொடுக்கின்றதே தவிர, தொழிலாளரின் அவஸ்தைகளை தூரவைத்தே பார்க்கின்றது. உழைப்புக்கேற்ற ஊதியமில்லாத நிலையில், விஷம் போல் ஏறிவரும் விலைவாசி உயர்வும் அமைதியற்ற சூழலும் தொழிலாளர் நசுக்கப்படுவதை நிரூபணமாக்கிறது. அரசியல்மயப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளே தொழிலாளரின் ஒற்றுமை சீர்குலைவுக்கு வித்திடுகின்றன. தொழிலாளரின் சீர்குலைவானது அவர்களைச் சுரண்டும் கம்பனிகாரர்களுக்கு மாத்திரமல்லாமல் அரசுக்கும் கூட இலாபமாக அமைகின்றது.
கூட்டு ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிந்து அடுத்த கட்ட நகர்வு என்னவென்று பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், நியாயமான சம்பள உயர்வு கிடைக்கவென போராடியும் வீண்வாத பிரதிவாதங்களால் தொழிற்சங்க மற்றும் தொழிலாளர் ஐக்கியம் பிளவுபடாமல் போவதையும் தடுத்து நிறுத்த இம் மே தினத்தில் உறுதிபூணுவோமாக. தொழிலாளர் வர்க்கத்திற்கும் அவர்களது போராட்டத்திற்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகள்.
No comments:
Post a Comment