சிந்தித்து வாக்களிக்குமா மலையகம்?
மலையகத்திற்கு மீண்டும் ஒரு தேர்தல். அது மாகாணசபைத் தேர்தல். நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 1741 சதுர கி.மீ. விஸ்தாரமான இப் பிரதேசம் ஐந்து பிரிவுகளாக நுவரெலியா, மஸ்கெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குரன்கெத்த என அமைந்துள்ளது. மக்கள் தொகை 742,083 ஆக இருப்பினும், வாக்காளர்களாக 452,495 பேரே உள்ளனர். ஒரு காலத்தில் தமிழர்கள் பெரும்பான்மை வாக்காளர்களாக இருந்தனர். ஆனால் படிப்படியாக இழக்கப்பட்டு இன்று தமிழர் 16,879 வாக்காளர்களாக பின் தங்கி நிற்கின்றனர். இந் நிலையில் நடைபெறவுள்ள இம் மாகாணசபைத் தேர்தலைப் பற்றி சிந்திப்போமாக!
சிறுபான்மை இனம் ஒன்று சேர்ந்து (தமிழ், முஸ்லீம்) ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால் நடைமுறையில் சாத்தியமாகுமா? சப்ரகமுவவில் நடந்த மாதிரி எம் பிரதிநிதித்துவம் இங்கு பாதிக்கப்படுமா? இங்கும் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் அமைந்திருப்பது கவலை அளிக்கிறது. அதன் தாக்கமே இந்த வேண்டுகோள்!
நுவரெலியா மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் 452,395 என்பது தெரிந்ததே. இம்; முறை 14 அரசியல் கட்சிகள் சார்பிலும் 10 சுயேட்சைக் குழுக்கள் சார்பிலும் மொத்தமாக 456 பேர் 16 மாகாணசபை அங்கத்தினர் பதவிகளுக்காக போட்டியிடுகின்றனர். சுமார் நான்கு லட்சம் பேர் வாக்களித்தால் ஒரு மாகாணசபை அங்கத்தினர் தெரிவாவதற்கு பெரும்பாலாக ஒரு அங்கத்தினருக்கு சராசரியாக 15,000 முதல் 20,000 வாக்குகள் தேவைப்படுகின்றது. அதன்படி முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல்களை பார்க்கும் போது எம் விருப்பு வாக்குகள் சிதறடிக்கப்படும் சூழ்ச்சி தெளிவாகின்றது. இன வாக்குகள் சமனாக இருக்கும் போது வேட்பாளர் பட்டியலில் எம்மவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதன் நோக்கம் என்ன? எம் வாக்குகளை சிதறடிக்கத்தானே இந்த மறைமுக நாடகம்.
அது ஏன் எம்மவர்களுக்கு புரியவிலலை! ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் 10 தமிழர்கள், ஐக்கிய தேசிய கட்சியிலும் 10 தமிழர்கள். விருப்பு வாக்குகள் சிதறும் பட்சத்தில் எம் இனத்தவரின் தெரிவு பாதிக்கப்படுமல்லவா? எனவே தகுதியுள்ள ஒருவருக்கே உங்கள் விருப்பு வாக்குகளை அளியுங்கள்.
பொதுஜன ஐக்கிய முன்னணி இப்போது மலையகத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் தொடர்வதற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்யும் அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி தமிழர் அடக்கு முறைக்கு ஒரு திருப்பு முனையாக அமைய வாக்களிக்குமாறு வேண்டுகிறது.
எம் சமூகம் பெரும்பாலும் இவ்விரு கட்சிகளில் ஒன்றைத்தான் தெரிவு செய்து வாக்களிக்கும். ஆனால் அக் கட்சிகளுக்கே வேட்பாளர் பட்டியலில் தமிழர் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டுமென்பதில் தான் பொதுவான இணக்கம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற ரீதியில் இ.தொ.கா,ம.ம.மு, மாகாண முன்னாள் அமைச்சர் அருள்சாமி என பலரும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட நாமும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் சதாசிவம், கணபதி கனகராஜ், மற்றும் மனோ கணேசன், திகாம்பரம், கூட்டணியுடன் ஐ.தே.க தமிழ் உறுப்பினர்களும் களத்தில் குதிக்கின்றனர். விருப்பு வாக்குகள் அளிக்கும் போது எந்த முன்னணி குதிரைகள் ஜெயிக்கும் என்று தெரிந்து அவர்களுக்கு வாக்களிக்கவும், வாக்குகளை (விருப்பு வாக்குகளை) சிதறடித்து உங்கள் பிரதிநிதித்துவத்தை நீங்களே சிதறடிக்காதீர்கள். சிந்தித்து செயல்பட்டு வெற்றி காண்பீராக
- கிருஷ்ணசாமி விவேகானந்தன்-
No comments:
Post a Comment