தேயிலை பெருந்தோட்டங்களுக்கு சிற்றுடைமைகளின் நன்மைகள் - கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்
தொடர்ச்சி…..
இவ்வாறு காணிகளை பெற்றவர்கள் இன்று தேயிலைச் சிற்றுடைமையாளர்களாக வளர்ச்சியடைந்துள்ளனர். ஏறக்குறைய இன்று தேயிலைச் சிற்றுடைமையின் பரப்பு 100,000 ஹெக்டயராகக் காணப்படுகின்றது. இது இலங்கையில் மொத்த தேயிலை பயிர் செய்யப்படும் பரப்பில் 48 வீதமாகும். இவற்றில் பெரும்பாலானவை தாழ்நிலப் பகுதிகளிலேயே பரந்து காணப்படுகின்றன. இதில் ஏறக்குறைய 216,000 பேர் சிறு தோட்ட உரிமையாளர்களாக உள்ளனர். ஆகக்குறைந்தது 1/8 ஹெக்டயர் பரப்பிலான காணித்துண்டுகளை பெருமளவில் கொண்டுள்ள சிற்றுடமை தேயிலை கைத் தொழிலில் மேலோங்கிய நிலையில் காணப்படுகின்றது. இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்தியில் ஏறக்குறைய 65 சதவீதமானவற்றை இந்த தேயிலை சிற்றுடைமைகளே வழங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த சிற்றுடைமையாளர்களை பராமரிப்பதற்கு தேயிலை சிறு உடைமை அதிகாரசபை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு மானியங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக உயர் விளைவு தரக்கூடிய தேயிலைக் கன்றுகளை 1980களின் பின் வழங்கி வருகின்றன. ஏறக்குறைய எல்லா சிறு நில தோட்டங்களும் உயர் விளைவு தரும் தேயிலை செடிகளைக் கொண்ட நிலப்பரப்பாகவே காணப்படுகின்றன. இலகு வட்டியில் கடன்கள் வழங்கியமை, பசளை மானியம் வழங்கியமை, பச்சைக் கொழுந்துக்கு உயர்ந்த விலையை பெற்றுக் கொடுத்தமை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்ட உதவியுடன் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய தொழிற்சாலைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இன்று இத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிற்றுடைமையாளர்கள் இப் பிரதேசத்தில் ஒரு பலம் மிக்க மத்தியதர சமூகமாக வளர்ச்சியடைந்துள்ளனர். இவர்கள் சிறந்த முயற்சியாளர்களாகவும் வளர்ந்திருப்பதுடன் தேயிலை உற்பத்தியில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களாகவும் குறுகிய காலத்தில் வளர்;ந்துள்ளனர். தம் சொந்த வீடுகளில் வசிக்கும் இவர்கள் மத்தியில் வறுமையானவர்கள் என அடையாளப்படுத்தக் கூடிய குடும்பங்களை அவதானிக்க முடியவில்லை. ஒரு மத்தியதர சமூகக் கட்டமைப்பை விஸ்தரித்துள்ள இச் சிறு நிலச் சொந்தக்காரர்கள் காணிகளுக்கு உரித்துடையவர்களாக இருப்பதுடன் ஒப்பீட்டளவில் வசதியான வீடுகளிலும் வாழ்கின்றனர். அரசியல் ரீதியாக சிறந்த பின்னணியைக் கொண்டுள்ள இம் மக்கள் அரசாங்கத்துடன் பேரம் பேசி தமது எதிர்பார்ப்புக்களை குறுகிய காலத்தில் பெற்றுக்கொள்ளக் கூடிய அளவில் வளர்ச்சியடைந்துளம் உள்ளனர்.
இந்த நன்மைகள் ஏதேனும் கடந்த 150 வருடங்களுக்கு மேலாக தேயிலைத் தொழிலைச் செய்யும் தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ளதாகத் தெரியவில்லை. தேயிலைத் தொழில் என்பது பெருந்தோட்டங்களுக்கே மட்டுப்படுத்தப்பட்ட ஒரு தொழில் என்ற கோட்பாட்டை சிற்றுடைமையாளர்களின் வளர்ச்சியானது பொய்மை படுத்திவிட்டது. தேயிலைச் செய்கையில் சிறு தோட்டங்களே முன்னிலையில் இருக்கின்றன. காலனித்துவ முகாமைத்துவத்தினால் சாதிக்க முடியாதவற்றை சிற்றுடைமைகள் இன்று மிகக் குறுகிய காலத்தில் சாதுரியமாக செய்திருக்கின்றன. தேயிலைச் செய்கையில் சிறு தோட்டங்களின் வெற்றிகரமான இலக்கு இலங்கையில் மட்டுமல்ல கென்யா, கெமரூன், இந்தியாவில் நீலகிரி போன்ற இடங்களிலும் உற்பத்தி, சந்தை, தொழிலாளர் நலன் போன்றவற்றில் உன்னத நிலை காணப்படுகின்றன.
விஸ்தரிக்கப்பட்ட தேயிலைச் சிற்றுடைமையின் நன்மைகளை பெருந்தோட்ட மக்கள் பெற்றுக் கொள்வது பல வழிகளிலும் நன்மை தரும் விடயமாகும். வறுமையில் இருந்து மீள்வதற்கும் நாளாந்த வேதனத்திற்கும் ஊழியம் செய்யும் மிகப் பழைமையான பொருளாதார உறவுகளில் இருந்து மீண்டெழுந்து சுயமாக தொழில் செய்யும் சமூகமாக மாறுவதற்கும் சிற்றுடைமைகளின் விஸ்தரிப்பு மிக அவசியமாகின்றது. இதனூடாக அரசாங்கம் பொருளாதார உதவிகளை நேரடியாக உள்வாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு சமூகமாக பெருந்தோட்டங்களில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் வளரலாம்.
சிற்றுடைமைகளின் பிணக்குகளை அரசாங்கம் நேரடியாக தலையிட்டு தீர்வு காணப்பட்ட சந்தர்ப்பங்களை அண்மைக் காலத்தில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. உதாரணமாக கடந்த ஒக்டோபர் மாதத்தில் சிற்றுடைமையாளர்களின் தேயிலை ஏற்றுமதியில் நெருக்கடிகள் ஏற்பட்டதை யாவரும் அறிவர். சிற்றுடைமைகளின் தேயிலையில் 60 சத வீதத்திற்கும் அதிகமானவற்றை கொள்வனவு செய்யும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான முகவர்கள் விலை உயர்வு, தரம், மற்றும் வேறு காரணங்களால் இலங்கையின் தேயிலையை வாங்க மறுத்தனர்.
இதனால் சிற்றுடைமைகளின் தேயிலை ஏலவிற்பனையின் போது எதிர்பார்த்த விலைக்கு விற்கக் கூடியமாக இல்லை. உடனடியாக தேயிலைச் சபை தலையிட்டு அதனை உடனடியாகக் கொள்வனவு செய்ததுடன் அடுத்த வாரமே அதனை மீளவும் விற்பனை செய்து நெருக்கடிக்கு தீர்வு கண்டது. சிற்றுடைமைகளின் தேயிலை விலை ஏற்றத்திற்கு காரணமாக இருக்கும் காரணிகளை அரசாங்கம் அடையாளப்படுத்தியதுடன் அதற்கு படிப்படியான தீர்வுத் திட்டங்களையும் முன்வைத்தது. அதில் முக்கியமாக தேயிலைக்கு பயன்படுத்தப்படும் பசளையை மானியமாக வழங்கியதாகும். இதன்படி 50 கிலோ கிராம் பசளை ரூபா 5000 வரையில் இருந்ததை அரசாங்கம் தலையிட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரூபா 1000 ஆக விநியோகிக்க முன்வந்தது. இதனால் சிற்றுடைமையாளர்கள் பெருமளவு நன்மையை அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. இது போன்ற வேறு சில பிரச்சினைகளுக்கும் முறையான தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே பெருந்தோட்டங்களில் தொடர்ந்து தொழிலாளர்களை தக்க வைத்து வறுமை மற்றும் காணியின்மை போன்ற துன்பச் சூழலில் இந்த மக்களை தொடர்ச்சியாக நிறுத்தி வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா அல்லது இந்த நாட்டில் சிற்றுடைமைகளின் நன்மைகளை இந்த மக்களுக்கும் விஸ்தரிப்பதற்கு பொருத்தமான கொள்கைத் திட்டங்களை வகுத்துக் கொள்ளதா என்பது பற்றி கொள்கை திட்டமிடலாளர்களும் இச் சமூகம் தொடர்பான ஆர்வலர்களும் போதுமான அளவு புரிந்துணர்வை பெற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.
No comments:
Post a Comment