Tuesday, January 13, 2009

தேயிலை பெருந்தோட்டங்களுக்கு சிற்றுடைமைகளின் நன்மைகள் - கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்

இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் காணிகளை கிராமிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டங்களை முதன்மைப்படுத்தின. ஆதனால் மிகவும் உயர்ந்த அளவில் ஏனைய ஆசிய நாடுகளிலும் பார்க்க இலங்கையின் கிராமிய விவசாயிகளின் காணி உரிமை உன்னத நிலையில் காணப்படுகின்றது. இந்தியா, தாய்லாந்து, தென் கொரியா, தாய்வான் போன்ற நாடுகளிலும் கிராமிய விவசாயிகளின் வளர்ச்சியில் காணிப் பகிர்வு முக்கியமான தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் இலங்கையில் வெற்றிகரமாக மேற்கொண்ட காணிப் பகிர்வுகள் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு எட்டவில்லை.

பெருந்தோட்ட சமூகம் இன்று காணிகளுக்கு உரிமையுடையவர்களாகவும் இல்லை. அது மட்டுமன்றி தான் வாழும் வீட்டையும் உரிமை கொண்டாடுபவர்களாகவும் இல்லை. இதனால் இம் மக்கள் தாம் வாழ்கின்ற பிரதேசங்களில் முகவரியற்றவர்களாக இருப்பதுடன் கணிசமான இடம் பெயர்வுகளும் ஏற்பட்டு வருகின்றன. உதாரணமாக 1980 களில் ஏறக்குறைய 400,000 பேராக தோட்டங்களில் பதிவு செய்துள்ள பெருந்தோட்ட மக்கள் இன்று 250,000 பேராக ஏறக்குறைய இவர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இத் தகவல்களை பெருந்தோட்டக் கைத் தொழில் அமைச்சின் புள்ளி விபர கையேட்டில் காணலாம்.
கடந்த பல ஆண்டுகளாக மலையக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தாலும் அரசாங்கம் மேற்கொண்ட ஆய்வின்படி 74 சவீதமான தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் தமக்குச் சொந்தமானதாக இல்லை என எடுத்துக் காட்டப்படுகிறது.

இக் கட்டுரையை வாசிப்பவர்கள் கிராமங்களையும், நகரங்களையும் ஒப்பிடுவது பொருத்தமானதொன்றல்ல என்றும், பெருந்தோட்டங்களின் அமைப்பு வேறு, கிராமிய அமைப்பு வேறு என்று வாதிடலாம். தோட்டங்களில் தொழிலாளர்கள் நாளாந்த வேலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தோட்ட முகாமை வீடு, மற்றும் மருத்துவ செலவுகளை வழங்குகின்றது. தொழிலாளர்களின் நலன்கள் தொழிற்சட்டங்களால் பராமரிக்கப்படுகின்றன. தொழிலாளர்களுக்கென தொழிற்சங்கங்கள் தொழிலுறவு மற்றும் சம்பளங்கள் தொடர்பாக கண்காணிக்கப்படுகின்றன. எனவே கிராமியம் வேறு, தோட்டங்கள் வேறு. தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் மக்களை பராமரிக்க உதவுகின்றன. கிராமியத்துறையில் அவ்வாறான பாதுகாப்பு இல்லை என்றும் கிராமிய மக்களைவிட தோட்ட மக்கள் பல்வேறு சலுகைகளை பெற்றவர்களாகக் கருத வேண்டும் என்று வாதிடலாம்.
ஆனாலும் மிக வேகமாகவே தேயிலைப் பயிர்ச்செய்கை கிராமிய சூழ்நிலைக்கு மாற்றியமைக்கப்பட்டதையும் அவை வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுவதையும் அவதானிக்கலாம். இத்தகைய வரப்பிரசாதங்கள் ஏன் பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்படுத்தக் கூடாது என்பதும் வினவப்பட வேண்டிய விடயமாகும்.

பெருந்தோட்டங்கள் எவ்வாறு கிராமிய சூழ்நிலைக்கு உள்வாங்கப்பட்டன என்பதை சற்று பின்நோக்கிச் சென்று பார்ப்பதும் அவசியமானது. 1972-1975 களில் காணிச் சீர்திருத்தம் மேற்கொண்டபோது அதன் பிரதானமாக காணப்பட்டது காணி இல்லாதவர்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்தல் என்பதாகும். இரத்தினபுரி, கண்டி, கம்பளை, களுத்துறை, மாத்தளை, மத்துகம, காவத்தை, கேகாலை, தெனியாய, போன்ற இடங்களில் காணப்பட்ட பெருந்தோட்டக் காணிகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு பின்னர் அந் நிலங்களில் பெரும்பாலானவை அங்குள்ள கிராமிய விவசாயிகளுக்கு தேயிலை பயிர்ச் செய்கைக்காக பகிர்ந்தளிக்கப்பட்டன. மிக விவேகமுடன் இயங்கிய மத ஸ்தாபனங்களும், பாரம்பரிய தேவாலயக் காணிகள் என அடையாளப்படுத்தப்பட்ட காணிகளுக்காக வழக்கு தொடரப்பட்டு அக் காணிகள் கிராமிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. காவத்தை பகுதியில் இவ்வாறான காணித் துண்டுகளின் பகிர்ந்தளிப்பை அவதானிக்கலாம்.

தொடரும்…..

No comments: