தோட்டங்கள் கிராமங்களாக மாற்றப்பட வேண்டும்.
தோட்ட நிர்வாகங்களின் ஆதிகத்திலிருந்து மீள்வதே முன்னேற்றத்திற்கான முதல்படி!
இலங்கையில் காலனித்துவ காலம் தொட்டு இன்றுவரை சகல துறைகளிலும் பின் தங்கிய சமூகமாக மலையக சமூகம் காணப்படுகின்றது என்பதை கடந்த வரவு செலவு திட்ட உரையின் போது ஜனாதிபதி, பெருந்தோட்ட மக்கள் கணிசமாக வாழ்கின்ற நுவரெலியா மாவட்டத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த பின் தங்கிய நிலைமைக்கான அடிப்படை காரணம் என்ன? முதலாவதாக நாம் தோட்ட நிர்வாகங்களின் பிடியிலிருந்து மீள வேண்டும். தோட்ட நிர்வாகங்கள் தொழில் வழங்குநர்களாக மாத்திரமே செயற்பட வேண்டுமே தவிர அரசு நேரடியாக அம் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
பெருந்தோட்டப் புறங்களில் பல ஆண்டுகளாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது தோல்வியை தழுவியிருப்பதுடன் மேலும் மேலும் அம் மக்களின் ஏழ்மையை அதிகரிக்கவே வழிவகுத்துள்ளது. அரசு இம் மக்களின் சமூக, பொருளாதார மாற்றங்கள் ஏற்பட பெருந்தொகை நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்ட போதும் அத் திட்டங்கள் அனைத்தும் பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக மகிந்த சிந்தனையின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் பாதை சீரமைப்பிற்காக தோட்ட நிர்வாகங்கள் ஊடாக நிதி வழங்கப்பட்டது. ஆனால் தோட்ட கம்பனிகள் தோட்டப்புற பாதைகளை சீர் செய்யாமல் தோட்ட நிர்வாகிகளின் விடுதிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் செல்கின்ற பாதைகளை சீர் செய்திருக்கின்றன.
எனவே அபிவிருத்தி திட்டங்கள், பொருளாதார செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது அங்கு வாழ்கின்ற மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. ஆனால் கிராமப் புறங்களில் அல்லது நகரப்புறங்களில் அரசினால் நேரடியாக மேற்கொள்ளப்படும் போது தரமானதாகவும், சிறப்பானதாகவும் அமைகின்றன. ஆனால் பெருந்தோட்ட சமூகம் தோட்ட கட்டமைப்புக்கள் இருந்த போதும் ஏனைய சமூகங்களோடு முன்னேற்றத்தில் பங்கு கொள்ள முடியாது விலகி நிற்கின்றது.
பெருந் தோட்டங்களில் அடிப்படை அத்தியாவசிய சேவைகளான கல்வி, சுகாதாரம், தபால் சேவை என்பன அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. அரசின் நடவடிக்கையால் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தோட்டப் புறங்களில் தமிழ் கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நியமிக்க போதும் அவர்கள் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தவென உருவாக்கப்பட்டுள்ள மனிதவள நிறுவனம் தோட்ட கம்பனி நிர்வாகங்களின் நேரடி தொடர்பில் உள்ளது. அரச அபிவிருத்தி செயற் திட்டங்கள் பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் ஊடாக நேரடியாக மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. அரச திட்டங்களை மேற்கொள்ளும் போது தோட்ட நிர்வாகங்களிடம் கருத்துக்களை கேட்பதை விடுத்து அம் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அதற்காக அங்கு உருவாக்கப்படும் கிராம அபிவிருத்தி சங்கம், விவசாய சங்கங்கள் கிராமிய எழுச்சி அமைப்புக்கள் போன்றவற்றின் ஊடாக செயற்பட அரசு முன்வர வேண்டும்- சந்திரமோகன்- லுணுகலை
No comments:
Post a Comment