Sunday, September 28, 2008

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் சொந்தமா?

இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக வழிவழியாக தோட்டத் தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் எட்டடி நீளமுள்ள அறைகளிலேயே புகைக் கூண்டுகளில் வாழ்வதைப் போல் வாழ்ந்து வருகின்றனர். இந்த துர்ப்பாக்கிய நிலையிலிருந்து தாங்கள் வாழும் அறைகளை விஸ்தீரணமாக ஓரளவேனும் நல்ல நிலையில் அமைக்க வேண்டும் என்ற உந்துதலில் நாகரீகமாக வாழும் ஆசையுடன் சிறிது சிறிதாக சேமித்து வைத்துள்ள சேமலாப நிதியைக் கொண்டு கட்டியுள்ளனர். ஏனையோர் பொருளாதார வசதி குறைவாகல் அதே எட்டடி அறைகளுக்குள் வாழ்க்கையை முடக்கி விடுகின்றனர்.

இப்படி வாழ்நாளில் பெரும் பங்கிளை கழித்து இறுதி காலத்தில் ஓய்வாக உணவுக்கு வழி செய்து கொண்டு வாழ வேண்டிய பணத்தை இந்த லயன் வீடுகளுக்கு செலவழிப்பதன் மூலம் ஏதும் பலன் உண்டா என்பதை தெரிந்து கொள்கிறார்கள் இல்லை. தோட்ட நிர்வாகங்களின் கீழ் இருக்கும் வீடுகள், உடைமைகள் அனைத்துக்கும் கம்பனிகளே கம்பனிகளே சொந்தக்காரர்கள் ஆவர் . அரச உடைமைகள் எனில் மக்களுக்கான உரிமைகளைப் பற்றி வாதிட முடியும். கம்பனிகளுக்கு சொந்தமானவைகளை நாம் செலவழிப்பதன் மூலம் நாளை ஒரு பிரச்சினை ஏற்பட்டு சிக்கலில் வீழ்ந்து விட்டால் சாதுரியமாகவும், சட்டரீதியாகவும் கம்பனிக்கே சொந்தமாகி விடும் என்பதை புரியாமல் இருப்பது கவலையைத் தருவதாகும்.
இந் நிலையில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைமைகள் அரசியல் பிரதிநிதிகள் எடுத்த ஓரளவு முயற்சியினால் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டத்தினால் தனி வீடுகளாகவும் பின்பு மாடி வீடுகளாகவும் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இவ் வீடமைப்புக்கான செலவுத் தொகையை குடியிருக்கும் தொழிலாளர்கள் சம்பளத்திலிருந்தே அறவிடப்படுகின்றது. தனி வீடுகளுக்கு மாதாந்தம் 350 ரூபாவும் மாடி வீடுகளுக்கு 600 ரூபாயுமாக பதினைந்து வருடகால மாதத் தவணையில் அறவிடப்படுகின்றது. இத் திட்டத்தின் கீட் வழங்கப்படும் வீடுகள் சம்பந்தப்பட்டவர்களின் ஊழியர் சேமலாப நிதியை பிணையாகக் கொண்டே வீடுகள் வழங்கப்படுகின்றன.

இந் நிலையில் சம்பந்தப்பட்ட தொழிலாளி சேவையிலிருந்து ஓய்வு பெறுவாராயின் அவருடைய சேவைக்கால பணத்தில் முழுத் தொகையுமே அறவிடப்படுகின்றது. சேவைக்கால பணம் குறைவாகவோ அல்லது இல்லாமலிருப்பின் சம்பந்தப்பட்டவர் மேலும் பணம் செலுத்தியாக வேண்டும்.

அரசியல் வாதிகளும், தொழிற்சங்க வாதிகளும் மேற்படி வீடுகள் அவர்களுக்கே சொந்தம் என்கின்றனர். தொழிலாளர்களும் இந்த பசப்பு வார்த்தைகளை நம்பி சொந்த வீடுதானே என வங்கிகளில் கடனை பெற்று வீடுகளை சிறப்பாக அமைத்துள்ளனர். ஆனால் இந்த வீடுகளை விற்கவோ, வேறு நபர்களுக்கு மாற்றியோ கொடுக்க முடியாது. இதுதான் ஒப்பந்தத்தின் சாரம்சம்.

ஊண்மையில் உழைப்பவனின் ஊதியத்தில் அறவிடப்படும் பணம் அந்த உழைப்பாளியின் வாழ்க்கைக்கு பலன் தர வேண்டும். ஆனால் அந்த பலன் கிடைக்காவிட்டாலும் உரிமையும் இல்லாது போய்விடும் அபாயம் தான் தெரிகிறது.

-தொடரும்-

சிதம்பரம் ஜோதி



No comments: