பெருந் தோட்டத்துறை சிறுவர் உரிமை மீறல்கள்
-தொடர்ச்சி-
மிகக் குறைவான வருமானத்தைக் கொண்ட வீட்டுத் துறையினர் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துவது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும். எனவே தொழிற் படையிலிருந்து சிறுவர்களை நீக்க வேண்டுமெனின் அவர்களின் குடும்ப வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். சிறுவர்களின் விருப்பத்திற்கு முரணான சூழ்நிலைகளினால் அவர்கள் தொழிலில் பலவந்தமாக தள்ளப்படுகின்றனர். பெருந்தோட்டத் துறைச் சிறுவர்களின் உரிமை மீறல்கள் காலனித்துவக் காலங்களிலிருந்தே இடம்பெற்று வருகின்றன. இலங்கையில் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது பெருந்தோட்டத் துறையிலேயே அதிகளவான சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவது அண்மைக்கால ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இக் கட்டுரையில் தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களிலிருந்து 225 பிள்ளைகளிடமும் பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள், தோட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் போன்ற பலரிடமிருந்தும் கலந்துரையாடி தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இங்கு 6-14 வயது வரையிலான சிறுவர்கள் தொடர்பாகவே கவனம் செலுத்தப்பட்டது. அதிலும் 14 வயதிற்கு கீழ்ப்பட்ட முழு நேரத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களின் பிரச்சினைகளே ஆராயப்பட்டன. இதில் 12 வீதமான சிறுவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகி தொழிலில் சேர்ந்துள்ளமை கவலைக்குரியதே. சிறுவர்கள் குடும்ப வறுமையின் காரணமாகவே தொழிலில் சேர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 60 வீதமான சிறுவர்கள் தரகர்களின் ஊடாகவே தோட்டத்திற்கு வெளியில் தொழிலில் சேர்கின்றனர். இவர்கள் மிக மோசமான சூழ்நிலையிலேயே தொழில் புரிய வேண்டியுள்ளது. பெருந் தோட்டத்துறையில் சிறுவர் தொழிலை ஊக்குவிக்கின்ற ஒரு காரணியாக குடும்ப பிளவும் காணப்படுகின்றது. எனவே தொழிலில் ஈடுபடுகின்ற சிறுவர்களது நலன் முழுமையாக பாதுகாக்க முடியாத நிலை காணப்பட்டதுடன் எந்த உரிமைகளையும் அனுபவிக்க முடியாத ஒரு பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் இவர்கள் வாழ்நாள் முழுவதும் துன்ப துயரங்களுடனேயே வாழவேண்டிய நிலை காணப்படுகின்றது. அவர்களது திறன்கள் சிறு வயதிலேயே அழிந்து விடுகின்றன. இதனை விடவும் சிறுவர்களின் எண்ணங்கள், அபிலாசைகள் என்பவற்றை வெளிப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது. இது காலப்போக்கில் அவர்கள் வாழ்க்கையில் விரக்தி நிலையும் சமூகத்தில் வெறுப்பும் தோன்றி அவர்களை தவறான வழியில் செல்லத் தூண்டுகின்றன. அண்மைக்காலமாக சமூக, தேசிய, சர்வதேச மட்டங்களிலிருந்தும் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான பல கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இலங்கை அரசாங்கமானது ஒரு குடும்பத்திற்குள் பிள்ளையின் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் ஊக்கப்படுத்தக்கூடிய வகையில் பல நிறுவன ரீதியான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இவற்றுள் இலவசக் கல்வி வசதி, இலவச மருத்துவ வசதி, தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கவையாகும். எனினும் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு இவற்றை அனுபவிக்கக்கூடிய வாய்ப்பு மிகவும் குறைவாகும். பெருந்தோட்டதுறைச் சமூகத்தில் சிறுவர் தொழிலாளர்களை தடுப்பதற்கு தேசிய சர்வதேசிய ரீதியிலான ஒத்துழைப்புக்கள் அவசியமாகின்றன. பெருந்தோட்டத்துறையின் சிறுவர் தொழிலாளர்களை குறைப்பதற்கு பல செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பெருந்தோட்டத்தில் சிறுவர் நலன் தொடர்பான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள கசல அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து சிறுவர் நல செயல்பாடுகள் தொடர்பான ஒரு பொதுவான செயற்திட்டத்தை உருவாக்க வேண்டும். இவ்வமைப்பில் தோட்டத்தில் இருக்கின்ற பிரஜைகள் குழுக்களின் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுவர்கள் தொடர்பான செயற்திட்டங்களை முன் வைக்கும் போது முதலில் அவர்களது பிரச்சினைகள் சரியாக இனம் காணப்பட வேண்டும. சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம், அவர்களது உரிமைகள் தொடர்பான தெளிவான விளக்கம், உரிமை மீறல்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் போன்றவை தொடர்பான சிறந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தோட்டங்களில் பல மட்டங்களிலும் உள்ள மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அத்துடன் கல்வியின் பெறுமதி பற்றி தோட்டங்களில் பெற்றோர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். இங்கு தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகள் மத்தியில் தொழில் நுட்ப பயிற்சிகளை பெறக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். சுயதொழிலை ஆரம்பிப்பதற்கான இலகு தவணைக் கடன்களை அறிமுகப்படுத்த வேண்டும். அத்துடன் அவர்களது உற்பத்திகளுக்கு சந்தை பற்றிய தகவல்களை வழங்க வேண்டும். இதனை விடவும் தற்போது தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களை இனம் கண்டு அவர்களுக்கு புனர் வாழ்வு வழங்கக்கூடிய செயற்பாடுகளை நேரடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் பெருந்தோட்டத்துறைச் சிறுவர் தொழிலாளர்களை தடை செய்து அவர்களை பாதுகாத்து அவர்களுக்கான சிறப்பான எதிர்காலத்தை வழங்குவதற்கு சகல தரப்பினரும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும். அப்பொழுதுதான் பெருந்தோட்டத்துறையில் ஒரு சுபிட்சமான எதிர்காலத்தை சிறார்களால் பெற்றுக் கொள்ள முடியும்.
அமரர் இரா. சிவலிங்கம் ஞாபகார்த்த நினைவு பேருரை
-ஷோபனாதேவி இராஜேந்திரன்-
பேராதனை பல்கலைகழக முதுநிலை விரிவுரையாளர்
No comments:
Post a Comment