பிரஜாவுரிமை சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
இந்திய தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்குவதற்கு ஏற்ற வகையில் பிரஜாவுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்படவிருக்கிறது.
இதற்கேற்ப 2003ம் ஆண்டின் 35ம் இலக்க இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவது தொடர்பான சட்டத்திருத்த மூலம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதேவேளை 1988ம் ஆண்டின் 39ம் இலக்க நாடற்றவர்களுக்குப் பிரஜாவுரிமை வழங்குதல் சிறப்பேடுகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பிரேரணையொன்றையும் அமைச்சர் தினேஷ் சபையில் சமர்ப்பித்தார். இந்தச் சட்டத் திருத்தத்தின்படி தமிழ் நாட்டில் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் அனைவரும் இலங்கை பிரஜாவுரிமையை பெறுகின்றனர்.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்தபோதும் பொருட்களின் விலையில் வீழ்ச்சியில்லை. தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை அவசியம்
சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைக்கப்படாமல் உள்ளமை எவ்வகையிலும் நியாயமானதல்ல. பெருந் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட உழைக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் தினசரி வாடி வருகின்றனர். முன்பு எண்ணெய் விலை அதிகரிப்பினால் வாழ்க்கை செலவும் அதிகரித்தமைக்கு காரணமாய் அமைந்தது.
அண்டை நாடான தமிழகத்தில் தற்போத ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குகிறார்கள். உணவுப் பொருட்கள் உட்பட மண்ணெண்ணெய் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படுகி;ன்றது. இதே போல் நாட்டு மக்களின் பசிப் பிணியை போக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் வாழக்கை செலவை குறைக்கவும், எண்ணெய் விலையை குறைக்கவும், சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந் தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் ஓ. ஏ. இராமையா தெரிவித்துள்ளார்.
பத்து வருடங்களாக தற்காலிக குடிசைகளில் வாழும் தொழிலாளர்கள்
நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் சுமார் 48 குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 10 வருடங்களாக தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த தற்காலிக குடிசை ஒன்றில் 4,5 பேர் பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர். இது சம்பந்தமாக தோட்ட நிர்வாகத்துடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தும்பொழுது காணி வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இத்தோட்டத்தில் சுமார் 160 குடும்பங்கள் வசிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment