Saturday, February 27, 2016

தேர்தல் கால பேசும்பொருளாக தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை. நித்தம் தொழிலாளர்களுக்கு இருக்கும் இந்தப் பிரச்சினை அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலங்களில் பேசும்பொருளாக இருக்கிறது. அதன்பின்னர் அது பேசாப் பொருளாக மாறி விடுகிறது. 'சம்பளப் பிரச்சினை' தலைப்பில் அவிழ்க்கப்படாத முடிச்சுக்களும், வெளியே வராத உண்மைகளும் ஏராளமாக இருக்கின்றன.

தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகின்றனரா என்ற சந்தேகத்துடனான வலி தினந்தோறும் வந்து, மறைகிறது. மலையக அரசியல்வாதிகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்களா என்ற சந்தேகமும் தற்போது வலுத்து வருகிறது. இதற்கு திடமான காரணங்களும் இருக்கின்றன. மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இதுவரை எந்தவொரு தரப்பும் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்காது இந்த சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது.

பலம்பொருந்திய தொழிற்சங்கங்களாகவும் பலம்பொருந்திய அரசியல் தலைவர்களாகவும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் தரப்புக்கள் எவையும், சம்பளப் பிரச்சினை விவகாரத்தில் மிகுந்த மெத்தனப் போக்கைப் பின்பற்றி வருகின்றன. இது, சந்தா செலுத்தி, வாக்களித்த பெருந்தோட்ட தொழிலாளர் தோழர்களையும் அவர்தம் குடும்பங்களையும் பெரும் வேதனையிலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தேர்தல் காலத்தில் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக் கொடுப்பதாக உரக்கக் குரல் கொடுத்த தலைமைகள், இன்று அதனை மறந்து விட்டார்களா அல்லது மறந்ததைப் போல நடிக்கின்றார்களா என கேள்வி எழும்புகிறது.
அண்மையில் தனியார் துறை ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் நாடாளுமன்றில் இரண்டு சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம், 2500 ரூபா கொடுப்பனவு என்பன தொடர்பிலானவையே அவை. அடிப்படைச் சம்பளமாக 10,000 ரூபா நிர்ணயிக்கப்பட்டதுடன், தனியார் துறையினருக்கு 2,500 ரூபா கொடுப்பனவு வழங்குவதும் சட்ட மூலமாக்கப்பட்டது. தொழிலாளர் ஒருவரின் ஆகக் குறைந்த நாள் சம்பளமாக 400 ரூபா நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தனியார் துறை ஊழியர்களுக்கான 2,500 கொடுப்பனவு இரண்டு கட்டமாக வழங்கப்பட உள்ளதாகவும் கடந்த ஆண்டு முதல் 1500 ரூபாவும், இந்த ஆண்டு முதல் 1000 ரூபாவும் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு சம்பள கொடுப்பனவு வழங்காத தொழில்தருனருக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் எனவும் அபராதமாக 25,000 ரூபாவும், ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட முடியும் எனவும் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்திருந்தார்.

இந்த சட்ட மூலத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் நாடாளுமன்றில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன உறுதிமொழி வழங்கியதுடன், பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரி​ெயல்லவும் இதனை வழிமொழியும் வகையில் நாடாளுமன்றில் 2,500 கொடுப்பனவு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

எனினும், இந்த சம்பளக் கொடுப்பனவு இதுவரையில் எந்தவொரு தோட்டத் தொழிலாளிக்கும் வழங்கப்படவில்லை.இவ்வாறான நிலையில், பல முக்கிய தகவல்களையும், தரவுகளையும் ஒப்பீடுகளையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.

2500 ரூபா சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படுவது தொழிலாளர்களுக்கு பாதக நிலைமையை ஏற்படுத்தும் என தொழிற்சங்கத்தில் இருக்கும் விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

தற்போது வரவு கொடுப்பனவாக 140 ரூபா ரத்து செய்யப்பட்டு, 2,500 ரூபா வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது, கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் தோட்ட நிர்வாகம் வழங்கும் வேலை நாட்களில் 75 வீதமான நாட்கள் வரவை பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 140 ரூபா வழங்கப்படுகிறது.

அதாவது சராசரியாக 25 நாட்கள் வேலை செய்யும் தொழிலாளி ஒருவருக்கு சுமார் 3,500 ரூபா கிடைக்கும். எனினும், இந்த 2500 ரூபா கொடுப்பனவு வழங்கினால் வரவு கொடுப்பனவை நிறுத்த நேரிடும் என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளதாக உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வரவு கொடுப்பனவு நிறுத்தப்பட்டால் அது தொழிலாளர்களுக்கு பாரிய இழப்பாகவே அமையப் போகிறது. இந்த விவகாரம் குறித்து முக்கியமான மலையகப் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் எவ்வித கருத்துக்களையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகின்றன. இந்த மௌனம் இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.

இதேவேளை, 2015 மார்ச் மாதம் 31 திகதியுடன் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் கலாவதியாகியுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியனவே இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன.

தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கு அடிப்படைச் சம்பளமாக 450 ரூபாவும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 30 ரூபாவும், 75 வீதம் வரவிற்காக கொடுக்கப்படும், 140 ரூபா உள்ளடங்களாக 620 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக நிர்ணயிக்கப்பட்ட நிறைக்கு மேலதிகமாக பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ கொழுந்திற்கும் சுமார் தலா 30 ரூபா அளவில் வழங்கப்படுகிறது.இந்தச் சம்பளம் 2013ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டுமென்ற போதிலும், ஒப்பந்தம் காலாவதியாகி ஓராண்டாகியும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.

பொருட்கள், சேவைகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. எனினும், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய வகிபங்காளர்களில் ஒருவராக திகழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மலையக அரசியல் தலைமைகளோ, மத்திய அரசாங்கமோ அல்லது வேறும் எந்தவொரு தரப்பும் உரிய முறையில் பேசாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

'தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த முடியாது' என முதலாளிமார் சம்மேளனம் உறுதியாக கூறிவிட்டதாக தெரியவருகிறது. முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்புக்களின் போதே முதலாளிமார் சம்மேளனம் இந்த கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக உள்ளிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தரப்புக்களும், கூட்டு ஒப்பந்தத்தில் பங்குபற்றதாத அரசியல் தொழிற்சங்க சக்திகளும் பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள விவகாரத்தை தேர்தல் வியூகமாகவும், சந்தாவை அதிகரித்துக்கொள்ளும் யுக்தியாகவுமே கையாண்டு வருகின்றது என்பது இன்னுமொரு கசப்பான உண்மையாகும். இதற்குப் பதில் தருவதில் மலையக பெரும் தலைவர்கள் சிக்கித் தவிப்பதாகவும் உணர முடிகிறது.

இருந்த போதிலும், 'கறிவேப்பிலையாக' தேவைக்கு மட்டும் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது. அதனால், சம்பள விவகாரம் குறித்து பல்வேறுபட்ட வெளிவராத, பேசப்படாத, புரியாத, புரியவைக்கப்படாத என பல தகவல்களையும் விவாதங்களையும், வெளியே கொண்டுவர குருவி தீர்மானித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக சம்பள அதிகரிப்பு விவகாரம் 2500 ரூபா கொடுப்பனவு குறித்து மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கள் தங்களது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.. இனிமேலும் தேவைக்கு மட்டும் 'கறிவேப்பிலையாக' பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

Tuesday, February 23, 2016

மலையகத் தமிழர்களின் முன்மொழிவுகள்

மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அடிப்படைக் கொள்கைகளையும், யாப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவிற்கு மலையக சமூக ஆய்வு மையம் முன்வைக்கவுள்ள அறிக்கையின் முழு வடிவம் 

‘மலையகத் தமிழர்கள்’ சுமார் 200 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தீவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் மத்திய மலைநாட்டிலும் ஏனையோர் மற்றைய மாகாணங்களிலும் வசிக்கின்றனர். காடாக இருந்த மலையக மண்ணை தேயிலை, இறப்பர் செழிந்தோங்கும் பூமியாக மாற்றியவர்கள் இவர்களேயாவர். இதனூடாக இலங்கைக்கான தேசிய வருமானத்தை முதல் நிலையில் பெற்றுக் கொடுத்தனர்.

மலையக மக்களின் கடந்த காலம் கசப்பான வரலாற்றினைக் கொண்டது. மனித குலம் சகிக்க முடியாத கொத்தடிமைகளாக சுதந்திரத்தின் முன்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களாலும, சுதந்திரத்தின் பின்னர் இலங்கை ஆட்சியாளர்களினாலும் இம்மக்கள் நடாத்தப்பட்டனர். சொந்தமாக நிலமோ, வீடோ இல்லாமல் உலகில் வாழும் பெருங்கூட்டம் மலையக மக்கள்தான். இலங்கைத் தீவுக்குள்ளே இன்னோர் இருண்ட தீவாக மலையகம் இருந்தது.

உலகமே தலை குனியும் மனிதாபிமானத்திற்கு எதிரான சட்டங்கள் அவர்கள் மீது ஏவப்பட்டன. பிரஜாவுரிமைச் சட்டம், தேர்தல்கள் திருத்தச் சட்டம் என்பவை இவற்றில் முக்கியமானவை. இவற்றினூடாக பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. இவர்களின் சம்மதமில்லாமல் சிறிமா -சாஸ்திரி, சிறிமா – இந்திரா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு இவர்களில் பெரும் பிரிவினர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தியாவிலும் அவர்களது வாழ்வு சிறப்பாக உள்ளது எனக் கூற முடியாது. கூட்டாக வாழ்ந்த மக்களை இந்திய அரசாங்கம் பல பிரதேசங்களிலும் சிதற விட்டுள்ளது.

மிக நீண்ட காலமாக தேசிய நீரோட்டத்தில் அவர்கள் இணைக்கப்படவில்லை. அண்மைக் காலமாக மலையகத் தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் சிறிது சிறிதாக உள்வாங்கப்படுகின்றனர். அதுவும் இன்னமும் முற்றுப்பெறவில்லை. உள்ளூராட்சிச் சபைகள் பெருந்தோட்ட மக்களுக்கு உதவ முடியாத நிலை இன்றும் உள்ளது.

மேற்கூறியவாறு வரலாற்று ரீதியாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு இம்மக்கள் முகம் கொடுத்தாலும் அதனூடாக இன்று ஒரு தேசிய இனமாக வளர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களது தேசிய இன அடையாளம் தொடர்ந்து சிதைக்கப்படுகின்றது. இது ஒருவகை இன அழிப்பாகும். இதுவே மலையக மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினையாகும். எனவே, மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு, யாப்பு ஏற்பாடுகள் என்பன இந்த அடையாளச் சிதைப்பிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதாக இருத்தல் வேண்டும்.

அடையாளம்

1) இலங்கையில் சிங்களவர்கள், இலங்கைத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என நான்கு தேசிய இனத்தவர்கள் தனித்துவ அடையாளத்துடன் வாழ்கின்றனர். ஏனைய இனங்களைப் போன்று மலையகத் தமிழர்களும் இலங்கைத் தீவின் தனித்துவமான தேசிய இனத்தவராவர்.

இவர்களுடன் வேடுவர், பறங்கியர், மலாயர், ஆபிரிக்கர் ஆகியோரும் இலங்கைத் தீவில் வசிக்கின்றனர்.

2) மலையக மக்கள் ‘மலையகத் தமிழர்’ என்ற பெயரினால் அழைக்கப்படல் வேண்டும். ‘இந்திய வம்சாவழித் தமிழர்’ என்ற பெயரினால் அழைக்கப்படக் கூடாது (இது மலையக மண்ணிலிருந்து அவர்களை அந்நியப்படுத்துவதுடன் மலையகத்தை தாயகமென மலையக மக்களால் கூறமுடியாத நிலையை ஏற்படுத்துகின்றது).

3) மலையகத் தேசிய இனத்தை தாங்கும் தூண்களாக இருப்பவை நிலம், தமிழ்மொழி, பெருந்தோட்டத் துறைப் பொருளாதாரம், மரபு ரீதியான மலையக மக்களின் கலாசாரம் என்பனவாகும். இவை யாப்பு ரீதியாக பாதுகாக்கப்படல் வேண்டும்.

அரசு

1) இலங்கை அரசு பல்லினத் தன்மையை பேணும் வகையில் அனைத்து தேசிய இனங்களுக்கும் நியாயமான இடத்தைக் கொடுக்கும் பன்மைத்துவ அரசாக (சமஸ்டி அரசாக) இருக்க வேண்டும். அதாவது, மாநில அரசுகளின் ஒன்றியமாக இருக்க வேண்டும்.

2) மாநில அரசுகளில் ஒன்றாக மலையகமும் இருக்க வேண்டும். இதற்கு மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை இணைத்து மலையக மக்களுக்கான அதிகார அலகு ஒன்று உருவாக்கப்படுதல் வேண்டும். அது நிலத்தொடர்ச்சியற்றதாகவும் இருக்கலாம் (பாண்டிச்சேரி போன்று).

3) ஏனைய பிரதேசங்களில் வாழும் மலையக வம்சாவழியினரின் நலன் பேணும் வகையில் சமூக அதிகார அலகு உருவாக்கப்படல் வேண்டும் (பெல்ஜியம் மாதிரி).

இறைமை

1) இறைமை பிரிக்க முடியாததாக மக்களிடமும், தேசிய இனங்களிடமும் இருக்கும். இவ் இறைமை வாக்குரிமை, மனித உரிமைகள் என்பவற்றையும் உள்ளடக்கியிருக்கும்.

2) மக்களினது சட்டவாக்க அதிகாரங்கள் மக்கள் சார்பாக மத்திய அரசினாலும், மாநில அரசுகளினாலும் யாப்பின்படி அவற்றினுடைய அதிகார எல்லைக்குள் பிரயோகிக்கப்படும்.

3) மக்களது நிறைவேற்று அதிகாரங்கள் யாப்பின்படி மக்களின் சார்பாக மத்திய அரசினாலும் மாநில அரசுகளினாலும் அவற்றினுடைய அதிகார எல்லைக்குள் பிரயோகிக்கப்படும்.

4) மக்களது நீதி அதிகாரங்கள் யாப்பின் படி மக்கள் சார்பாக மத்திய அரசின் நீதிமன்றங்களினாலும், மாநில அரசுகளின் நீதிமன்றங்களினாலும் அவற்றின் அதிகார எல்லைக்குள் பிரயோகிக்கப்படும். இவற்றிற்கேற்ப இலங்கையின் நீதித்துறை மத்திய அரசின் நீதித்துறை, மாநில அரசுகளின் நீதித்துறை என இரு வகைகளாக பிரிக்கப்பட வேண்டும்.

5) நீதித்துறைச் சுதந்திரத்திற்கான ஏற்பாடுகள் உள்வாங்கப்படல் வேண்டும். அரசியல்யாப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கு அரசியல்யாப்பு நீதிமன்றம் ஒன்றும் உருவாக்கப்படல் வேண்டும்.

மொழி

1) சிங்களமும், தமிழும் இலங்கையின் அரசகரும மொழிகளாகவும், தேசிய மொழிகளாகவும் இருத்தல் வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருத்தல் வேண்டும்.

2) பிரஜைகள் எவரும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அரச கருமங்கள் ஆற்றங்கூடிய நிலையிருத்தல் வேண்டும்.

3) வட கிழக்கு மாநில அரசிலும், மலையக மாநில அரசிலும் தமிழ்மொழி அரச கருமமொழியாக இருத்தல் வேண்டும். ஏனைய மாநிலங்களில் சிங்கள மொழி அரச கரும மொழியாகவும் இருத்தல் வேண்டும். எனினும், எல்லா மாநிலங்களிலும் மூன்று மொழிகளிலும் தொடர்பாடல்களை மேற்கொள்ளக்கூடியாத இருத்தல் வேண்டும்.

4) வட கிழக்கு மாநில அரசிலும், மலையக மாநில அரசிலும் தமிழ்மொழி நீதிமன்ற மொழியாக இருத்தல் வேண்டும். ஏனைய மாநில அரசுகளில் சிங்கள மொழி நீதிமன்ற மொழியாக இருத்தல் வேண்டும். எனினும், அனைத்து நீதிமன்றங்களிலும் மூன்று மொழிகளிலும் தொடர்பாடலை மேற்கொள்ளக்கூடிய நிலை இருத்தல் வேண்டும்.

5) சிங்களமும், தமிழும் நாட்டின் சட்டவாக்கமொழியாக இருக்கவேண்டும். ஒவ்வொரு சட்டமும் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்படல் வேண்டும்.

6) அரச கரும மொழிக் கொள்கையின் அமுலாக்கலை மேற்பார்வை செய்ய தேசிய அரச கரும மொழி ஆணைக்குழுவும், மாநிலங்களின் அரச கரும மொழி ஆணைக் குழுக்களும் உருவாக்கப்படல் வேண்டும்.

தாய்மொழி கல்வி

இலங்கையில் அனைத்து மாணவர்களும் தமது ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் கற்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கான கல்விக் கொள்கை வகுக்கப்படல் வேண்டும்.

மேலும், அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் உள்வாங்கப்படும் மாணவர்கள் தமது தாய்மொழியிலோ அல்லது தாம் விரும்பும் இலங்கையில் பயன்பாட்டிலுள்ள வேறெந்த மொழியிலோ கற்பதற்கான வாய்ப்புக்களை உறுதிப்படுத்தல் வேண்டும்.

மத சார்பற்ற அரசு

1) இலங்கை மத சார்பற்ற அரசாக இருத்தல் வேண்டும். அனைத்து மதங்களின் சுதந்திரங்களும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

2) மதங்களுக்கிடையே ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் வளர்க்கும் வகையில் சமய சுதந்திரத்திற்கான ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.

அரசியல் யாப்பு

1) அரசியல் யாப்பு அனைத்து தேசிய இனங்களையும் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாக இருக்க வேண்டும்.

2) அரசியல் யாப்பே நாட்டின் அதியுயர்ந்த சட்டமாகும். மத்திய அரசினதும், மாநில அரசுகளினதும் சகல செயற்பாடுகளும் அரசியல் யாப்பிற்கு அமைவாகவே இருத்தல் வேண்டும்.

3) அரசியல் யாப்புத் திருத்தங்கள் அனைத்தும் மத்திய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையாலும், த மாநில சட்ட சட்ட மன்றங்களினாலும் நிறைவேற்றப்படல் வேண்டும்.

4) தேசிய இனங்களுடன் தொடர்புடைய விவகாரங்களை பொறுத்தவரை மேற்கூறியவற்றுடன் சம்பந்தப்பட்ட தேசிய இனத்தின் சட்ட சபையின் 2/3 பெரும்பான்மையுடனும் நிறைவேற்றப்படல் வேண்டும்.

5) அரசியல் யாப்புடன் தொடர்புடைய விடயங்களுக்கு அரசியல் யாப்பு நீதிமன்றம் பொறுப்பாக இருக்கும்.

6) அரசியல் யாப்பு நீதிமன்றத்தின் நீதிபதிகள் சகல தேசிய இனங்களிலிருந்தும் நியமிக்கப்படல் வேண்டும். தேசிய இனங்களின் நீதிபதிகளை அந்தந்த தேசிய இனங்களின் சட்ட சபைகள் சிபார்சு செய்தல் வேண்டும்.

7) தேசிய இனங்களின் விவகாரங்கள் தொடர்பான தீர்ப்புகளுக்கு அந்தந்த தேசிய இனங்களின் சட்டசபைகளினது ஒப்புதல் அவசியம்.

வாழ்வதற்கான உரிமை

இலங்கையின் அரசியல் யாப்பில் அனைத்து இனங்களும் தனித்துவத்தோடும், சமத்துவத்தோடும் தமக்கே உரிய அடையாளங்களை பாதுகாத்து, பேணி எதிர்கால சந்ததியினருக்கு நாகரீகமிக்க மனித சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு ஏற்ற வகையில் வாழும் உரிமையினை உறுதிப்படுத்தி, அங்கீகரித்து, பாதுகாப்பளித்தல் வேண்டும்.

தேசிய கீதம்

நாட்டின் தேசிய கீதம் இலங்கையின் அரசகரும மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பாடக்கூடியவாறு தேசிய கீதத்தின் வரிகள் வகுக்கப்படல் வேண்டும். அத்தோடு, இலங்கையில் வாழக்கூடிய ஏனைய இனங்களின் இனத்துவ அடையாளங்களையும் வெளிப்படுத்தும் வகையில் சொற்தொடர்கள் தேசிய கீதத்தில் உள்வாங்கப்படல் வேண்டும்.

தேசிய கொடி

இலங்கையின் தேசிய கொடியானது இலங்கையில் வாழும் அனைத்து இனங்களையும் அடையாளப்படுத்தும் வண்ணமும், சமத்துவ உரிமையை கௌரவப்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்படல் வேண்டும்.

ஒடுக்குமுறைகள்

இன, மத, பால், சாதி, கல்வி, தொழில், பிரதேசம்ஸ ரீதியில் திட்டமிட்ட முறையில் ஒடுக்குதலையும், அழிவுகளையும் மேற்கொள்ளக் கூடிய வார்த்தைப் பிரயோகங்களையும், செயற்பாடுகளையும் தனிநபர்களோ, அமைப்புகளோ மேற்கொள்ளா வண்ணம் அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகளை யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தல் வேண்டும்.

மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்குமிடையேயான அதிகாரப் பகிர்வு

1) ஆட்சி அதிகாரங்கள் மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்குமிடையே பங்கிடப்படல் வேண்டும்.

2) அரசின் அதிகாரங்கள் மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல் என இரு வகைப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

3) மத்திய பட்டியலில் மத்திய அரசும், மாநிலப் பட்டியலில் மாநில அரசுகளும் அதிகாரம் உடையனவாக இருக்கும்.

4) மத்திய பட்டியல் அனைத்து மாநிலங்களுக்குமான பொதுவான விவகாரங்களைக் கொண்டிருக்கும். மாநில பட்டியல் மாநிலங்களின் தனியான நலன்களைக் கொண்டிருக்கும்.

5) மத்திய பட்டியலிலுள்ள அதிகாரங்களை மாநிலங்களில் மத்திய அரசின் சார்பாக மாநில அரசு நிறைவேற்றிக் கொடுக்கலாம். (சுவிஸர்லாந்து மாதிரி)

6) மத்திய அரசின் பட்டியலில் தேசிய பாதுகாப்பு, வெளி விவகாரம், குடியகல்வு – குடிவரவு, பணம் அச்சிடல், குடியுரிமை, சுங்கம், தபால் தொலைத்தொடர்பு, சர்வதேச விமான நிலையங்கள், சர்வதேச துறைமுகங்கள், புகையிரத சேவை, தேசிய நெடுஞ்சாலைகள் என்பன உள்ளடங்கியிருக்கும். ஏனையவை அனைத்தும் மாநிலப் பட்டியலுக்கு உரியவையாக இருக்கும்.

7) மாநிலங்களுக்குள்ளேயான புகையிரத, விமானப் போக்குவரத்து, கடற் போக்குவரத்து, வேறு நீர் நிலைகளினூடான போக்குவரத்து மாநில அரசுகளின் அதிகாரங்களாக இருக்கும்.

8) மாநிலங்களுக்கிடையேயான ஆறுகள், நீர்நிலைகள் மத்திய அரசின் அதிகாரங்களாக இருக்கும். மாநிலங்களுக்குள்ளேயான ஆறுகள், நீர்நிலைகள் மாநில அரசின் அதிகாரங்களாக இருக்கும்.

9) மத்திய பட்டியலில் அடங்காத அனைத்து விடயங்களும் மாநில அரசுக்குரியதாக இருக்கும்.

மாநில அரசுகள்

1) ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியான ஒரு அரசியல்யாப்பு இருத்தல் வேண்டும். அவ்யாப்பு மத்திய அரசின் அரசியல்யாப்பிற்கு இணங்க உருவாக்கப்பட வேண்டும்.

2) ஒவ்வொரு மாநிலத்திற்கும், மத்திய அரசின் பிரதிநிதியாக ஒரு ஆளுநர் இருப்பார். அவர் அம்மாநில மக்களினால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார். (அமெரிக்கா மாதிரி)

3) ஆளுநரின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும். இடைக் காலத்தில் லஞ்சம், பெருங்குற்றம், சட்டமீறல் தொடர்பாக குற்றப் பிரேரணை ஒன்று மாநில சட்ட மன்றத்தில் கொண்டு வந்து 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால் ஆளுநர் பதவி நீக்கப்படுவார்.

4) ஆளுநர் பதவி வெற்றிடமானால் மாநில சட்டசபை புதிய ஆளுநர் ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை தற்காலிக ஆளுநர் ஒருவரை நியமித்தல் வேண்டும்.

5) ஆளுநர் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்குமிடையே ஒரு பாலமாக இருப்பார்.

6) ஆளுநர் மாநில முதலமைச்சரின் ஆலோசனையின் படியே கருமங்களை ஆற்றுதல் வேண்டும்.

மாநில சட்ட சபை

1) ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாநிலச் சட்ட சபையிருக்கும்.

2) சட்ட சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநில சனத்தொகை, மாநிலத்தின் பல்லின சமூக அமைப்பு, மாநிலத்தின் நிலப்பரப்புக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.

3) மாநில சட்டசபையில் பெண்களுக்கும் சமவாய்ப்பு அளித்தல் வேண்டும்.

4) மாநிலச் சட்டசபையில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துதல் வேண்டும்.

5) மாநில சட்ட சபையின் உறுப்பினர்கள் எளிய பெரும்பான்மை முறை மூலமும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை மூலமும் தெரிவு செய்யப்படுவர். 50:50 என்ற விகிதத்தை இதற்கு பயன்படுத்தலாம்.

6) தேர்தல் தொகுதிகள் சனத்தொகை, இன விகிதாசாரம், நிலப்பரப்பு என்பவற்றிற்கு ஏற்ப மாநில தொகுதி நிர்ணய ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும்.

7) ஒரு பிரதேசத்தில் பல்லினங்கள் செறிந்து வாழுமாயின் அங்கு பல்லின பிரதிநிதித்துவம் உருவாக வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.

8) விகிதாசார தேர்தலுக்கு தேர்தல் மாவட்டங்கள் ஒரு அலகாக இருக்கும். தேர்தல் மாவட்டங்களையும் மாநில தொகுதி நிர்ணய ஆணைக்குழு தீர்மானிக்கும்.

9) அரசியல் யாப்பினால் வழங்கப்பட்ட எல்லைக்குள் மாநில சட்டமன்றங்கள் சட்டங்களை இயற்றலாம்.

10) மாநில அரசியல்யாப்புத் திருத்தங்கள் மாநில சட்டசபையில் 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்படல் வேண்டும்.

11) சட்டங்கள் அனைத்தும் சமூகமளித்துள்ளோரில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படல் வேண்டும். சபாநாயகரின் ஒப்புதலுடன் அவை நடைமுறைக்கு வரும்.

12) மாநில சட்ட சபையின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும். இடைக்காலத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை மாநில சட்டசபையில் நிறைவேற்றுவதன் மூலம் ஆளுநர் மாநிலச்சட்ட சபையைக் கலைக்கலாம்.

மாநில அமைச்சரவை

1) மாநில நிர்வாகத்திற்கென ஒரு அமைச்சரவை இருக்கும். இதன் எண்ணிக்கையை மாநில சட்ட சபை ஒரு தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம். அமைச்சரவையின் அமைவு மாநில பல்லினத் தன்மையைப் பிரதிபலிக்கும்.

2) மாநில அமைச்சரவையில் பெண்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படல் வேண்டும்.

3) முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவராக விளங்குவார். சட்ட சபைத் தேர்தலின் பின்னர் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியின் பிரதிநிதியை ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார். பின்னர் முதலமைச்சரின் ஆலோசனையுடன் ஏனைய அமைச்சர்கள் ஆளுநரினால் நியமிக்கப்படுவர். எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிடின் சட்டமன்றத்தில் அதிக ஆதரவு பெற்ற சட்ட சபை உறுப்பினர் ஒருவரை ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார்.

4) அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை மாநில சட்ட சபையில் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலம் அமைச்சரவையை பதவி நீக்கலாம்.

5) அமைச்சர்களுக்குரிய அமைச்சுகளை முதலமைச்சர் தீர்மானிப்பார். அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் முதலமைச்சரின் பொறுப்பில் இருக்கும்.

மாநில நீதித்துறை

1) மாநிலத் நீதித்துறைக்குள் மாநில உயர்நீதி மன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், சிறுவர் நீதிமன்றம், தொழில் நீதிமன்றம், பெண்கள் விவகார நீதிமன்றம் என்பன உள்ளடங்கும்.

2) மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளை முதலமைச்சர்களின் சிபார்சுடன் மாநில ஆளுநர் நியமிப்பார். ஏனைய நீதிமன்ற நீதிபதிகளை மாநில நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிபார்சுடன் ஆளுநர் நியமிப்பார்.

3) மாநில நீதித்துறை நீதிபதிகள் மாநில பன்மைத் தன்மைக்கேற்ப நியமிக்கப்படுவர்.

4) ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாநில சட்டமா அதிபர் இருப்பார். அவரை முதலமைச்சரின் சிபார்சுடன் ஆளுநர் நியமிப்பார்.

வெளிநாட்டு உறவுகளும், உதவிபெறலும்

மாநிலங்கள் வெளிநாடுகளுடன் நேரடியாக உறவுகளை மேற்கொள்ளவும் உதவிகளைப் பெறவும் வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும். இதற்கு வெளிநாடுகளில் செயற்படும் இலங்கைத் தூதுவராலயங்களில் மாநிலப்பிரிவுகளை உருவாக்கலாம்.

தேசியப் பாதுகாப்பு, தேசியப் படைகள்

1) தேசியப் பாதுகாப்பு, தேசியப் படைகள் பற்றிய அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்கும்.

2) தேசியப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு நாட்டின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படல் வேண்டும்.

3) மாநிலங்களின் பாதுகாப்புப் பொறுப்பை அந்தந்த மாநிலங்களில் சேர்க்கப்பட்ட ஆட்களைக் கொண்ட படைப் பிரிவுகளிடம் வழங்கப்படல் வேண்டும்.

உள்ளூராட்சி சபைகள்

1) உள்ளூராட்சிச் சபைகள் மாநிலங்களின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்கும். தமது கருமங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.

2) சகல உள்ளூராட்சி சபைகளும், அரசியல் யாப்பிற்கிணங்கவும் அவற்றிற்குரிய நாடாளுமன்ற சட்டங்களுக்கு இணங்கவும் உபசட்டங்களை இயற்றலாம்.

3) தற்போதுள்ள பிரதேச சபைகளுக்கு பதிலாக பட்டின சபைகள், கிராம சபைகளை (முன்னரைப் போன்று) உருவாக்கப்படல் வேண்டும். இதற்கேற்ற வகையில் பெருந்தோட்டங்களில் மலையகக் கிராமங்களும், பட்டினங்களும் உருவாக்கப்படல் வேண்டும்.

ஆணைக்குழுக்கள்

1) சுதந்திர பொதுச்சேவை ஆணைக்குழு, சுதந்திர நீதிச்சேவை ஆணைக்குழு, சுதந்திர தேர்தல் ஆணைக்குழு, சுதந்திர மனித உரிமை ஆணைக்குழு போன்ற ஆனைத்து ஆணைக்குழுக்களிலும் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

2) சுதந்திர ஆணைக்குழுக்களில் மலையக மக்களின் விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்படும் போது மலையக மாநில சட்டசபையின் சம்மதத்தினைப் பெறுதல் வேண்டும்.
நன்றி- - மாற்றம் -

இந்திய வம்சாவளியினர் இந்நாட்டின் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்

இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையில் தனி தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமனி நுவரெலியாவில் இடம்பெற்ற அரசியல் யாப்பு சீர்திருத்த ஆணைக்குழு அமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் இலங்கை பாராளுமன்றம் இரண்டு சபைகளை கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டாவது சபையில் அந்தந்த சமூகங்கள் சம்பந்தமான விடயங்கள் வரும் பொழுது அந்தந்த சமூக அங்கத்தினர்களின் அனுமதியுனேயே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். 

பிரஜாவுரிமை சட்டத்தில் இவ்வாறு இருந்திருக்குமானால் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்திருக்க முடியாது எங்களுக்கென்று ஒரு மாகாணம் அல்லது மாநில அலகு அவசியமாகின்றது. 

இந்த முறைமை பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழும் இடத்தில் மாத்திரமல்லாமல் வவுனியா அல்லது சிலாபம் அக்குரஸ்ஸ, தெனியாய போன்ற ஏனைய பகுதிகளையும் உள்­ளடக்கியதாக அமைய வேண்டும். மலையக மக்கள் எங்கெங்கு வாழ்ந்தாலும் அவர்களும் அந்த மாநில அமைப்பில் பங்குகொள்ளக் கூடியதாக ஒரு சபையை உருவாக்க வேண்டும். இலங்கை ஒரு மத சார்பற்ற நாடாகவும் பல இனங்கள், பல கலாசாரங்கள், பல சமயங்கள், பல மொழிகள் பேசுகின்ற மக்களை கொண்ட ஒரு நாடாக இருக்க வேண்டும். தமிழிலே இலங்கை குடியரசு நாடு என்று குறிப்பிட வேண்டும் என்றார்.

இலங்கையில் வாழும் மக்களாக சிங்களவர்கள், இலங்கைத்தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், முஸ்லீம்கள், மலேயர்கள், பறங்கியர்கள் மற்றும் ஏனைய இனக்குழுக்களையும் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். மலையக மக்களை குறிக்கும் இந்திய தமிழர் என்ற பதம் மாற்றப்பட வேண்டும். 

ஏனைய தேசிய இன மக்களோடு சமமாக மலையக மக்கள் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கென தனியான பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தேர்தல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் 

கடந்த காலம் தொடக்கம் இன்றுவரை இந்திய வம்சாவளி சமூகம் பின்தங்கிய சமூகமாக வாழ்ந்து வருவதால் இவர்களுக்கென விசேட ஏற்பாடு கொண்டுவரப்படல் வேண்டும் நீதி, நிர்வாக சம்பந்தமான பதவிகளுக்கு ஏனைய சமூகங்களுக்கு வழங்கப்படுவதை போல மலையக மக்களுக்கும் வழங்கப்படல் வேண்டும் என்றார். 

இந்திய அரசிலமைப்பு அரசியல் சட்;டத்தில்; 25,26,30,40 ஆகிய சரத்துக்களில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள், இலங்கை அரசியல் யாப்பு சட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார் புத்திரசிகாமணி

Friday, February 19, 2016

ஊவா மாகாண தமிழ்க் கல்விக்கு தனியான அலகு

ஊவா மாகா­ணத்தில் தமிழ் கல்­விக்­கென்று தனி­யா­ன­தொரு அலகு ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். அப்­போ­துதான் தமிழ்க் கல்­வித்­து­றையில் முன்­னேற்­ற­க­ர­மான மாற்­றங்­களை எதிர்­கொள்ள முடி­யு­மென்று, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசு­கையில், “ஊவா மாகாண தமிழ்க் கல்­வித்­து­றை­யினை அபி­வி­ருத்தி செய்யும் நோக்கில், கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை மேற்­கொண்டு, அத­ன­டிப்­ப­டையில் செயல்­பா­டு­களை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்டேன். கடந்த ஒரு மாத­கா­ல­மாக எடுத்த முயற்சி, தற்­போது பய­ன­ளித்­துள்­ளது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் கல்­வித்­து­றைசார் சக­லரும் பங்கு கொண்­டி­ருப்­பது கண்டு பெரு­ம­கிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.

மாகா­ணத்தின் தமிழ் மொழி மூல­மான பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பப்­படும் கடி­தங்கள் மற்றும் சுற்­ற­றிக்­கைகள் அனைத்தும் தமிழ் மொழி­யி­லேயே அமைய வேண்­டு­மென்று, எம்மால் விடுக்­கப்­படும் கோரிக்­கை­க­ளுக்கு, தற்­கா­லிகத் தீர்­வு­களே கிடைக்­கின்­ற­தே­யன்றி, நிரந்­தரத் தீர்­வுகள் கிடைப்­ப­தில்லை. ஒரு சில கடி­தங்கள் தமிழ் மொழியில் அனுப்­பப்­பட்­டாலும், காலப் போக்கில் அது செயல்­ப­டு­வ­தில்லை.

மாகாண தமிழ்க் கல்­வியில் ஏற்­படும் பின்­ன­டைவே, ஊவா மாகாணம் நான்காம் இடத்­திற்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­ற­தற்கு காரணம். தமிழ்க் கல்­வித்­து­றையும் வளர்ச்சி பெற்­றி­ருக்­கு­மே­யானால், நாட்டின் இரண்டாம் இடத்­திற்கு, ஊவா மாகாணம் வந்­தி­ருக்கும் என்றார்.

அடுத்து, ஊவா மாகாண சபை உறுப்­பி­னரும், ஊவா மாகாண தமிழ் கல்­வித்­து­றைக்கு பொறுப்­பா­ள­ரு­மான ஆ.கணே­ச­மூர்த்தி தம­து­ரையில், பல்­க­லைக்­க­ழகம் பிர­வே­சிக்கும் மாணவர் தொகையில் அதி­க­ரிப்பு இடம்­பெ­ற­வேண்­டி­யது அதி­முக்­கி­ய­மாகும். அந்­நி­லை­யினை ஏற்­ப­டுத்த அதிபர், ஆசி­ரி­யர்கள் மிகுந்த அர்ப்­ப­ணிப்­புக்­க­ளுடன் செயல்­படல் வேண்டும்.

தமிழ்­மொழி மூலம் கற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தொழில்­நுட்பக் கல்­லூ­ரி­யொன்று அமைய வேண்­டி­யதும் அவசியமாகும். பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்கள் விடயத்தில் கூடிய கவனம் எடுத்து, இடைவிலகலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அத்துடன், முன்பள்ளிகளின் தரம் அதிகரிக்கப்படல் வேண்டும் என்றார்.

அபிவிருத்தி பணிகளுக்காக தோட்ட நிர்வாகங்களை நம்பியிருக்க வேண்டியதில்லை

பிரித்தானிய கம்பனிகள் நிர்வகித்த காலம் முதல் இன்றைய கம்பனிகள் நிர்வகிக்கும் காலம் வரை மலையக பெருந்தோட்டங்களின் உள்ளக பாதைகளை அமைக்கும் பொறுப்பினை தோட்ட நிர்வாகங்களே மேற்கொண்டு வந்தன. ஆனால் தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை தோட்டப்பகுதிகளில் வீதிகளை அமைக்கும் பணியை செய்கின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் திலகராஸ் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில் 

முன்பு அபிவிருத்திக்கு பொறுப்பான அரச நிறுவனங்கள் தோட்டப்பகுதிகளில் பணியாற்றுவதில்லை.  புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்பு நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு வீதிகள் கார்பட் வீதிகளாக மாற்றியமைக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்றார். அபிவிருத்தி பணிகளுக்கு தோட்ட நிர்வாகங்களை தங்கியிருக்கும் நிலை தற்போது இல்லை. 

பிரதேச சபைகள் சட்டத்திருத்தத்தை நாம் வேண்டி நின்றதும் அதேபோல்அரச நிதியினை பயன்படுத்தி தோட்டப்பகுதிகளுக்கு அரச சேவையை பெற்றுக்கொடுப்பதற்காக பிரதேச செயலகங்களை அதிகரிக்கும் யோசனையையும் முன்வைத்துள்ளோம் என்றார். மஸ்கெலிய பிரதேசமக்கள் தங்களது அரச தேவைகளுக்காக கினிகத்தேன வரை செல்வதற்கு பதிலாக அதனை நோர்வூட் நகர பகுதியில் பெற்றுக்கொள்ளக்கூடியதான வேலைகளை முன்னெடுத்து  வருகிறோம். 

சம்பள சட்டத்தில் வீட்டுப் பணியாளர்களையும் சேர்க்க வேண்டும்

இலங்கையில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான புதிய சட்டத்தில் வீட்டுப் பணியாளர்களையும் சேர்க்குமாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பள கொடுப்பனவுச் சட்டம் பொதுச் சட்டமாகக் கொண்டு வரப்படவுள்ள நிலையில், அதில் வீட்டுப் பணியாளர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கோரி அந்தத் தொழிலாளர்களுக்கான சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த புதிய சட்டம் தொடர்பில் அரச வர்த்தமானியில் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அதில் நியாயமற்ற விதத்தில் வீட்டுப் பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தில் தொழிலாளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சட்டம் சரியான முறையில் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு போதுமானதல்ல என்ற காரணத்தினாலேயே புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும், வீட்டுப் பணியாளர்களை ஏனைய தொழிலாளர்களை போன்று அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கென தனியான தொழிற்சங்கம் ஒன்று செயற்படுவதையும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருக்கின்றது. தொழிலாளர்கள் தொடர்பிலான சர்வதேச சட்ட நியமங்களையும் அரசு ஏற்றுக் கொண்டிருக்கின்றது என்று வீட்டுப் பணியாளர்களின் தொழிற்சங்கம் கூறுகின்றது.

'உள்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீட்டுவேலைத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றார்கள். அவர்களின் சம்பளம் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கென சட்ட ரீதியான குறைந்தபட்ச சம்பளச் சட்டம் இல்லாத காரணத்தினால் அவர்களின் குடும்பங்கள் இதனால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றன' என்றார் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மேனகா கந்தசாமி.

'அவர்களுக்கு நியாயம் கிடைக்கத்தக்க வகையில், வீட்டுவேலைத் தொழிலாளர்களையும் இந்தச் சட்டத்தில் உள்வாங்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம்' என்றார் மேனகா கந்தசாமி.இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும் மேனகா கந்தசாமி கூறினார்.

Thursday, February 18, 2016

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள்

கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் கோப்புகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த முறையும் அதனை செய்யாமல் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கூட்டம் நடைபெறுவதில் எவ்வித பயனும் இல்லை என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பழனி திகாம்பரம்,பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம் (15.02.2016) அன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
நுவரெலியா நானுஒயா காந்தி மண்டபத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த பொலிஸ் நியைத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு இங்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
(15.02.2016) அன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், கே.கே.பியதாச, மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டதுடன் அமைச்சர்களான பழனி திகாம்பரம், நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம், மயில்வாகனம் திலகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வரவேற்பு உரையை நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முல்ல வழங்கியதோடு இதன்போது அவர் இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆளும் கட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவே உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்திற்கு வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரட்ணயாக்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரில் 6 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,மாநகர சபை, நகர சபை உறுப்பினர்கள்,அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் இந்த தீர்மானத்தை சபைக்கு முன்வைத்தார்.
குறித்த காந்தி மண்டபம் அமைந்துள்ள பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே எமது பெருந்தோட்ட மக்கள் தமது கலைகலாச்சார நடவடிக்கைகளை இந்த மண்டபத்தின் வாயிலாகவே முன்னெடுக்கின்றனர். எனவே இதற்கு அருகாமையில் காவல் நிலையம் ஒன்றை அமைப்பது பொறுத்தமற்ற ஒரு செயலாக அமைந்துவிடும். எனவே அதனை வேறு ஒரு இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இந்த சபையின் ஊடாக ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என அவர் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததார்.இதனை தொடர்ந்து மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு இந்த காந்தி மண்டபத்தை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.எனவே இதனை வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பது பொறுத்தமாக இருக்கும் என தனது கருத்தை முன்வைத்ததை தொடர்ந்து இதனை சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்புகள் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் மரத் தூண்கள் அமைக்கப்பட்டவை என்பதால் தற்பொழுது அவை பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. எனவே அவை முறிந்து விழும் நிலையில் இருப்பதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக அவற்றை அகற்றி கொன்கிறீட் தூண்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மின்சார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
நானுஒயா டெஸ்போட் சுற்றுவட்ட பாதை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.அதாவது இந்த சுற்று வட்ட பாதை வழியாக பேருந்துகள் பயணிப்பதில்லை எனவும் பேருந்துகள் அனைத்தும் குறுக்கு வழியாக செல்வதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலளார் எலன் மீகஸ்முல்ல தனது கருத்தை முன்வைத்தார்.
இதற்கு தேசிய போக்குவரத்து அதிகாரசபையும் ஹட்டன் போக்கு வரத்து சபையும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் எனவே இந்த பிரச்சினை தற்பொழுது தீhக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.எனவே இது தொடர்பாக நானுஒயா பொலிஸ் நிலையத்திற்கு ஆராய்ந்து பார்த்து தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.