Friday, December 11, 2015

மாமழை மீட்டெடுத்த மனித நேயம்!

சென்னையில் குடியிருப்பவருக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவர்களைக் கூடத் தெரியாது. வெளியூர்க்காரர்கள் இதனை கிண்டலுக்காக சொன்னாலும், பெரும்பான்மையான இடங்களில் உண்மை இதுதான்.

 வணக்கம் வைத்தாலோ, புன்முறுவல் பூத்தாலோகூட பதிலுக்கு அப்படி செய்வதையே விரும்பாத அடுக்குமாடி குடியிருப்புவாசிகளும் உண்டு. அவர்களிலும் சிலர் சொத்து எழுதிக் கேட்ட பங்காளியைப்போல முறைத்து விட்டோ, முகத்தைத் திருப்பிக் கொண்டோ போவார்கள். மொத்தமும் ஒரே நாளில் தலைகீழானது.

 திரைப்படங்களில் பார்த்த, திகில் கதைகளில் படித்த காட்சிகள் கண்ணெதிரே நடந்தன. கொஞ்சமும் இரக்கமற்ற அரக்கனைப் போல கொட்டித்தீர்த்தது மழை. இதைப் பேய் மழை என்று சொல்வதெல்லாம் மிகச் சாதாரண வார்த்தை. நேற்றுவரை சாக்கடைகளாக மட்டுமே இருந்த ஆறுகள் எல்லாம் பழிதீர்க்கும் வேகத்தில் பாலங்களை மீறி சென்னைக்குள் பாய்ந்தன. சுற்றிலும் தண்ணீர்க்காடு. எனினும், குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை.

 ஒரு பாக்கெட் அல்லது ஒரு பாட்டில் தண்ணீர் கிடைக்காதா என கண்கள் ஏங்கின. பாலுக்காக அழுத பிள்ளைகளின் கண்ணீர் வற்றிப்போனது. இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் நகர முடியவில்லை. பேருந்துகள் இல்லை. பிதுங்கி வழியும் மின்சார ரயில்கள் செல்வதற்குத் தண்டவாளங்களே தெரியவில்லை. சென்னையின் இருபெரும் ரயில் நிலையங்களான சென்ட்ரலும், எழும்பூரும் மொத்தமாக இயக்கத்தை நிறுத்திக் கொண்டன.

 மீனம்பாக்கத்தில் நின்றிருந்த விமானங்கள் பொம்மைகளைப் போல மிதந்தன. ஏற்கெனவே புறநகர்வாசிகளுக்கு மட்டும் பழக்கமாயிருந்த படகுகளும், பரிசல்களும் பெருநகரத்திற்கான ஏக போக போக்குவரத்து சாதனங்களாயின. பார்த்து, பார்த்து வாங்கிய வீடுகளில் இருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஒரு தாதாவைப் போல புகுந்த தண்ணீர் பலரையும் வெளியேற்றியது. மாதத் தவணையிலும், கடன் அட்டையிலும் வாங்கிய பொருள்கள் எல்லாம் கண் முன்னே மிதந்து சென்றன.

 படகில் தப்பிபோகும் போதே கீழே மூழ்கிக் கிடக்கும் கார்களை ஏக்கத்தோடு பார்த்துச் செல்வது தவிர, வேறெதுவும் செய்ய முடியவில்லை. கையில் பணம் வைத்துக்கொண்டு பொருள்கள் வாங்குவதைக் கெளரவக் குறைச்சலாக மாற்றியதன் இன்னொரு முகத்தை ஏ.டி.எம். மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் உணர்ந்தார்கள்.

 மணிக்கணக்கில் நின்ற பிறகும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியவில்லை. அதுவும் கிடைக்காமல் அல்லாடியவர்களும் உண்டு. வீட்டில் ஆயிரம் ரூபாய்கூட வைத்திருக்க வேண்டியதில்லை, எல்லாவற்றுக்கும் அட்டை போதும் என்ற தாராளமயமாக்கலின் வரம் பல் இளித்து நின்றது.

 மின்சாரம் தொலைந்த கணங்கள் உயிர் இருக்கும்போதே நரகத்தில் தூக்கிப்போட்டன. உயிரைப்போல இறுக்கிப் பிடித்து வைத்திருந்த செல்லிடப்பேசிகள் செயலிழந்தது இதன் உச்சம். செல்லிடப்பேசி இன்றி எங்கும் செல்ல முடியாது, எதுவும் செய்ய முடியாது என்பதும் பொய்த்துப்போனது.

 செல்லிடப்பேசிக்கு மின்னூட்டம் (சார்ஜ்) ஏற்ற மின்சாரம் இல்லை. மாற்று வழிகளில் சார்ஜ் ஏற்றினாலும் பேசுவதற்கு சமிக்ஞை (சிக்னல்) கிடையாது. கைவிடப்பட்ட குழந்தைகளைப்போலக் கிடந்த பழைய தொலைபேசிகள் இருக்கிற இடங்களைத் தேடி ஓடினார்கள். வெளியூர்களில் இருந்து தவித்த உறவுகள் ஒருபக்கம் என்றால், சென்னைக்குள்ளேயே வெவ்வேறு பகுதிகளில் இருந்த சொந்தங்களையும் நட்பையும் தொடர்பு கொள்ள முடியாமல் மிரண்டு கிடந்தனர்.

 இருமல், தும்மல் என ஒன்று விடாமல் பதிவேற்றும் முகநூல் பக்கம் போக முடியாதது பலருக்கு சோகத்திலும் ஆகப்பெரும் சோகம்.

சுற்றி என்ன நடக்கிறது என்று உணர முடியாத பயங்கரத்தில் பக்கத்து வீட்டுக்காரனைக்கூடத் தெரியாத சென்னையின் இன்னொரு முகம் வெளிப்பட்டது. மாமழை மீட்டெடுத்த அந்த மனித நேயத்தின் வடிவங்கள் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தன.

 உணவு, உறைவிடம், உடை, தண்ணீர் என தத்தளித்தவர்களுக்கு வாரிக்கொடுத்த பலர், நேற்று வரை யாரென்றே தெரியாதவர்கள். அரசுகளுக்கோ, அதிகாரிகளுக்கோ அவர்கள் யாரும் காத்திருக்கவில்லை. இயன்றவர்கள் முடிந்ததை எல்லாம் செய்து கொடுத்தார்கள். இவர்களில் பலர் பெரிய கோடீஸ்வரர்கள் இல்லை. பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தவர்கள்.

 அங்கங்கே குழுக்களாகச் சேர்ந்தார்கள். போக்குவரத்து வழிகாட்டுதலில் தொடங்கி, நீச்சலடித்து காப்பாற்றியது வரை அவரவர் சக்திக்கு ஏற்ப, எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆளுக்கு ஒரு வேலை செய்தார்கள். பேரிடர் துயரத்திலும் பெரும் ஆறுதல் தந்தது இந்த மனிதம்தான். இதுபோக, இனம், மதம், மொழி, சாதி, பாலினம் எல்லாவற்றையும் ராட்தச மழை ஒரே அடியில் சமமாக்கியது. எஞ்சியது இரண்டே பிரிவு. மிதந்தவர்கள். மிதக்காதவர்கள். அவ்வளவுதான்.

 அதேநேரத்தில், வானம் நிகழ்த்திய துயரம், நமக்கு சிலவற்றைப் பாடமாக சொல்லி இருக்கிறது. அவற்றை, இப்போதே அழுத்தந்திருத்தமாக மனதில் பதியவைக்கவில்லை என்றால், வெள்ள நீரோடு சேர்ந்து அதன் வேகமும் வடிந்து போய்விடும். முதலில் இது ஒன்றும் வரலாறு காணாத மழை இல்லை.
 சமீபத்திய ஆண்டுகளில் நாம் பார்த்ததில்லையேத் தவிர பாட்டன், பூட்டன் காலத்திலேயே இப்படியான மழை இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் கணக்கீட்டு அளவுகளும், முன்னெச்சரிக்கை ரமணன்களும் இவ்வளவு நவீனமாக இல்லை. இருந்தாலும் அவற்றை எல்லாம் சமாளிக்க ஏற்ற வகையில், தமிழர்களின் வாழ்க்கை முறை இயற்கையோடு இயைந்திருந்தது.

 ஒவ்வோர் ஆண்டும் கோடைக் காலத்தில் கூரை வீட்டை கீற்றோ, பனை ஓலையோ வேய்ந்து செப்பனிடுவார்கள். அதற்கு மேல் வைக்கோல் போட்டு, அம்மிக்கல்லைத் தூக்கும் ஆடி மாத காற்றடித்தாலும் பறக்காத அளவுக்கு பக்குவப்படுத்துவார்கள்.

 ஐப்பசி மாத அடைமழைக்கு முன்பாக அரிசி உள்ளிட்ட தானியங்கள் சேகரமாகிவிடும். புரட்டாசியில் மழைத் தொடங்கி, கார்த்திகை கடைசியில் ஓய்ந்து, பனி ஆரம்பிக்கும் வரையில் தேவையான எரிபொருள்கள் வீட்டுப் பரணில் பத்திரமாக இருக்கும். மழை நேரத்தில் காய்கறிகள் கிடைப்பது கடினம் என்பதால், அப்போது குழம்பு வைப்பதற்குத் தேவையான மாங்காய், கத்திரிக்காய், கொத்தவரங்காய் என வித விதமான வற்றல் வகையறாக்கள் சித்திரை வெயிலில் சரடாக காய்ந்து பானைகளில் காத்திருக்கும்.
 இத்தகைய, திட்டமிட்ட வாழ்வியல் முறையால்தான் ஒரு நாள்கூட விடாமல் மாதம் முழுக்க கொட்டிய மழையிலும் கச்சிதமாக வாழ்ந்திருக்கிறார்கள். கோணிப்பையை மழைக் கோட்டாக மாற்றி சுற்றிச் சுழன்றுள்ளார்கள். இன்றைக்கு லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்களின் வீடுகளிலும் மாதத்தின் முதல் நாளில் சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாமல் தத்தளித்த காட்சிகளை என்னவென்று சொல்வது.. அடச்சே - என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் இவர்கள் - எவ்வளவு சம்பாதித்து என்ன செய்ய - அன்றாடங்காய்ச்சிகளான ஏழை - பாழைகளே தேவலாம் போலிருக்கிறதே.

 தனி மனிதர்கள் மட்டுமல்ல, தன்னை நம்பியிருக்கும் கால்நடைகளுக்கான வைக்கோல் படப்பு போடுவதையும்கூட நுணுக்கமாக செய்தார்கள். அதன் மேலடுக்கு தாண்டி சொட்டுத்தண்ணீர் உள்ளே இறங்காது. எல்லாவற்றுக்கும் மேலாக நீர்நிலைகளை நம்முடைய தாத்தாக்கள் கையாண்ட விதமே தனி. குளம், ஏரி, ஊருணி எல்லாம் அந்தந்த ஊர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. விவசாய வேலைகள் முடிந்த காலத்தில் அவற்றை எல்லாம் தூர் எடுத்தார்கள். வீட்டுக்கு ஓர் ஆள் இந்தப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். முடியாதவர்கள் அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். இதற்கென குடி மராமத்து வரி போடுவார்கள். ஆறுகள், வாய்க்கால்களும் செடி, கொடிகள் அகற்றப்பட்டு தண்ணீர் வரும் பாதை தரமாக தயாராகிவிடும். வயல் வெளிகளுக்கு, ஏரி - குளங்களுக்கு நீர் வருவதை உறுதி செய்வது போல, எல்லா ஊர்களிலும் வடிகால்களும் வெள்ளம் வந்தால் தண்ணீரை வடித்தெடுக்கும் வகையில் தூர் வாரப்படும்.

 சென்னையில் ஓடும் ஆறுகளின் பெயர்கள்கூடத் தெரியாமல் எல்லாவற்றையும் கூவம் என்று சொல்வதைப்போல, கிராமங்களிலும் பாசன வாய்க்காலுக்கும், வடிகாலுக்கும் வித்தியாசம் தெரியாத தலைமுறை வளர்ந்து நிற்கிறது. அதன் விளைவைத்தான் இப்போது எதிர்கொண்டிருக்கிறோம்.

 ஆமாம், கனவு போல நடந்து முடிந்திருக்கிற கோரத்தாண்டவம் சென்னைக்கு மட்டுமானதல்ல. ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான ஆகப் பெரிய எச்சரிக்கை மணி. இதன்பிறகும் சுதாரித்துக் கொள்ளாவிட்டால் - அனுபவத்திலிருந்து பாடம் கற்காவிட்டால்...?

மீனம்பாக்கத்தில் நின்றிருந்த விமானங்கள் பொம்மைகளைப் போல மிதந்தன. ஏற்கெனவே புறநகர்வாசிகளுக்கு மட்டும் பழக்கமாயிருந்த படகுகளும், பரிசல்களும் பெருநகரத்திற்கான ஏக போக போக்குவரத்து சாதனங்களாயின.பார்த்து, பார்த்து வாங்கிய வீடுகளில் இருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஒரு தாதாவை போல புகுந்த தண்ணீர் பலரையும் வெளியேற்றியது.

-கோமல் அன்பரசன்-

நன்றி- தினமணி

தேவைகளை நிறைவேற்ற முடியாவிடின் தோட்ட மக்களிடம் ஏன் வாக்கு கேட்கின்றீர்கள்

மலையக தோட்டத் தொழிலாளர்களின் தேவைகளை கம்பனிகளே நிறைவேற்ற வேண்டும் என்றால் ஏன் தேர்தலில் அம்மக்களிடம் வாக்கு கேட்கின்றீர்கள்? அம்மக்களை கம்பனிகளுக்கு வாக்களிக்க சொல்லுங்கள் என நேற்று சபையில் ஜே.வி.பி. எம்.பி. அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மலையக தோட்டத்தொழிலாளர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். எனவே அவர்களையும் மனிதர்களாக மதிக்கும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சு மற்றும் தொழில் மற்றும் தொழிலாளர் உறவுகள் தொடர்பான அமைச்சுக்களின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அநுர குமார திஸாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் மலையக தோட்டத் தொழிலாளர்களும் இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரை சேர்ந்தவர்களே என்பதனை புரிந்துகொள்ளுங்கள். ஆனால் அவர்கள் தொடர்பில் எந்த விதமான அக்கறையும் காட்டப்படுவதில்லை.

இன்றும் அவர்களது நாள் சம்பளம் ரூபா 450 ரூபா. அத்தோடு கொடுப்பனவுகள் இணைந்தாலும் ரூபா 620 கிடைக்கின்றது. இத்தொகையை கொடுப்பனவாக பெற்றுக் கொண்டு வாழ்க்கையை நடத்த முடியுமா? ஏன் அம்மக்களுக்கு மட்டும் அநீதி இழைக்கப்படுகிறது.

மலையக தோட்டத் தொழிலாளர்கள் இன்று வறுமைக் கோட்டில் வாழும் சுகாதார உரிமைகள் மறுக்கப்பட்ட வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்டஇ இந்நாட்டின் அடிமைப்படுத்தப்பட்டஇ ஓரங்கட்டப்பட்ட மக்களாக வாழ்கின்றனர்.

இம்மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுமாறு அரசை கேட்டால் தோட்ட கம்பனிக்காரர்களே அதற்கு பொறுப்புஇ அவர்களிடம் கேளுங்கள் என்கிறீர்கள். அப்படியென்றால் தேர்தலில் அம் மக்களின் வாக்குகளை ஏன் கேட்கின்றீர்கள்.

அம் மக்களது வாக்குகளையும் கம்பனிக்காரர்களுக்கே கொடுங்கள் என்று சொல் லலாமே. மலையகத் தோட்டத் தொழி லாளர்கள் அடிமைகள் என்ற நிலைப் பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். ஏனைய உழைக்கும் வர்க்கத்தினர் அனு பவிக்கும் உரிமைகள் அவர்களுக்கும் வழங் கப்பட வேண்டும் என்றார்.

Sunday, December 6, 2015

தொழிற்சங்க போராட்டத்திற்கு முஸ்தீபு

கடந்த ஒன்பது (9) மாதங்களுக்கும் மேலாக இழுபறி நிலையில் காணப்பட்டு வரும் பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக தோட்டக் கம்பனிகளும், முதலாளிமார் சம்மேளனமும் கடைப்பிடித்து வரும் உதாசீனப் போக்கைக் கண்டித்து, தொழிலாளர்களைத் தொழிற்சங்கப் போராட்டத்தில் இறக்கும் முஸ்தீபில் அனைத்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்களும் இறங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பெருந்தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ். இராமநாதன் தெரிவித்தார்.நேற்று முன்தினம் (6ம் திகதி) காலை 9.30 மணியளவில் மாத்தளை தொழிற்சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கைத் தோட்ட சேவையாளர் சங்க அலுவலகத்தில் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் பி.ஜி. சந்திரசேனவின் தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் விசேட செயற் குழுக் கூட்டத்தில் தொழிற் சங்கப் போராட்டத்தில் இறங்குவது தொடர்பாகத் தீவிரமாக ஆராயப்பட்டதாகவும், எஸ். இராமநாதன் மேலும் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கூறியதாவது,

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு விடயத்தில் தலையிட்டு மூன்று வாரங்களுக்குள் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறும், தவறும் பட்சத்தில் மலையகத்தின் ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி தொழிற்சங்கப் போராட்டமொன்றில் ஈடுபடுத்த நேரிடும் எனவும் கடிதங்கள் மூலம் ஜனாதிபதி, பிரதமர், தொழிலாளர்கள், முதலாளிமார் சம்மேளனம், தோட்டக் கம்பனிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவிப்பதென இக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது என்னுடன் எஸ். முத்தையா, ஐயாத்துரை, பி. தேவகுமார், என்.எம்.ஆர். சிறில், எஸ். கந்தையா, போரசிரியர் விஜேகுமார், நாத் அரமசிங்ஹ, மேனகா கந்தசாமி, மற்றும் ஏ. முத்துலிங்கம் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர் எனத் தெரிவித்த எஸ். இராமநாதன் மேலும் கூறுகையில், தோட்டத் தொழிலாளர்களது கூட்டு ஒப்பந்தம் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற பின்னர் தோட்டக் கம்பனிகள் தொழிற் திணைக்களம், மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றுடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தியும் தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பளத்தை உயர்த்தித் தராது பிடிவாதமாக இருந்து வருகின்றன.

இது தொடர்பாக தொழிலாளர்கள் ஆங்காங்கே எதிர்ப்புப் போராட்டங்களிலும் மெதுவாகப் பணி செய்யும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளமை தொடர்பிலும் கொழும்பில் 4 ஆம் திகதி இக்கூட்டத்தில் முகவும் உன்னிப்பாக ஆராயப்பட்டது.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை ஒன்றைத் தோட்டக் கம்பனிகளுடனும் தொழிற்சங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு விடுத்த கோரிக்கைக்கும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

தொழிலாளர்களைத் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபடுத்தும் பட்சத்தில் அதற்கு முன்னதாக சகல அரசியல் சமூக தொழிற்சங்க அமைப்புகளுடனும் கலந்து பேசி அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ். இ¡மநாதன் மேலும் தெரிவித்தார்.

-தினகரன் -

மலையகத் தலைமைகளின் முரண்பாடுகள் சம்பள உயர்வுக்கு பெரும் தடைக்கல்.

தோட்டத் தொழிலாளர்க ளின் சம்பள உயர்வுப் பிரச்சினை முடி வின்றி தொடர்கின்றது. சம்பளப் பேச்சுவார்த்தையில் பிரதான பங்கை வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தாம் முன்வைத்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கையிலிருந்து கீழிறங்காது அதனையே முன்னிறுத்தி வந்ததுடன், அதனை ஏனைய இரு தொழிற்சங்கங்களான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் வலியுறுத்தி வந்தன. மறுபுறம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை வழங்க முடியாது என ஆரம்பம் முதலே முதலாளிமார் சம்மேளனம் கூறிவருகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தவிர்த்து வருகிறது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான அமைச்சர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் பிதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி தீர்வொன்றினைப் பெற்றுக் கொடுக்க முனைந்தபோதிலும் அதுவும் முடங்கியுள்ளது. அமைச்சர்கள் இருவரும் பிரதமருடன் பேசித் தீர்வுக்கு வந்தாலும் அதனை இ.தொ.கா ஏற்காவிட்டால் கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது.

இதேவேளை, அரசாங்கத்துடன் இல்லாத ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, அமைச்சர்களாக இருக்கும் பழனி திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் பெற்றுத்தரும் தீர்வை ஏற்றுக்கொள்வார் என்பது சந்தேகமே. தோட்டக் கம்பனிகளின் பிரச்சினை ஒருபுறமிருக்க மலையகத் தலைமைகளின் முரண்நிலைகளும் சம்பள உயர்வுக்கு இன்னுமொரு பாரிய தடைக்கல்லாக எழுந்துள்ளது. இதனால் இன்றைய சம்பளப் பிரச்சினை இன்னும் சில காலங்களுக்குத் தொடரலாம் என்பது கண்கூடு.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்துச் செல்லும் விலைவாசிக்கேற்ப வாழ்வதற்கான சம்பளமே தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகின்றது. ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தற்போதைய நிலையில் நியாயமான கோரிக்கையாக காணப்பட்டாலும் அது அடுத்த வருடத்தில் அதிகரிக்கும் விலைவாசிக்கு நிகரானதாக அமையாது.

 எனவே, ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் ஒரு முறை பெரும் போராட்டத்திற்கு மத்தியில் அதிகரிக்கப்படும் சிறிய சம்பள அதிகரிப்பானது ஒருபோதும் தோட்டத்தொழிலாளர்களின் குடும்பங்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதியதானதாக அமையாது.
எனவே இவ் யதார்த்தத்தைக் கருத்திற் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு மாற்று உபாயங்களை இப்போதே அடையாளம் கண்டு அமுல்படுத்த முனைவது காலத்தின் தேவையாகத் தோன்றியுள்ளது.

இன்றைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாஙகம் நிவாரணமாக தோட்டக்கம்பனிகளுக்கு கடன் உதவியை வழங்கினாலும் முதலாளிமார் சம்மேளனம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முன்வராது. எனவே, ஆயிரம் ரூபாவிற்கும் குறைந்த சம்பள அதிகரிப்பிற்கே தோட்டக் கம்பனிகள் இணங்கும். இதனை தோட்டத் தொழிலாளர்களும் நன்கு புரிந்துள்ளனர்.

காலத்திற்கு காலம் தேயிலைத் தொழிற்றுறையில் ஏற்படும் நெருக்கடியானது இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. மாறாக, தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கென்யா, இந்தியா, இந்தோனேஷியா, வியட்னாம், சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பொதுமையானதாகக் காணப்படுகின்றது. தேயிலை தொழிற்றுறை முழுமையாக சந்தை கேள்வியுடன் தொடர்புள்ளதாக இருக்கின்றது.

 தேயிலைப் பண்டமானது மனித தேவைக்கு அத்தியாவசியமான பண்டமல்ல. மாறாக உதிரிப் பானமாகும். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படுகையில் மக்கள் தேயிலைப் பானத்தை பருகாமல் இருக்கலாம் அல்லது குறைவாகப் பருகலாம். இதேவேளை, நாடுகளில் காணப்படும் பணவீக்கம், உள்ளூர் மற்றும் நாடுகளுக்கிடையிலான யுத்தங்கள் என்பனவும் தேயிலையின் விலையை தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன.

 உதாரணத்திற்கு எமது நாட்டினை விட அதிகமாக தேயிலை உற்பத்தி செய்யும் நாடான இந்தியா, தமது தேயிலைக்கான சந்தையை உள்ளூரிலேயே கொண்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவின் தேயிலை உற்பத்தி இந்தியாவின் சந்தைக் கேள்விக்கு போதுமானதல்ல.

ஆயினும் இந்திய சந்தையில் தேயிலையின் விலை கடந்த பல மாதங்களாகக் குறைந்துள்ளது. அந்நாட்டின் பணவீக்கம் தேயிலையின் விலையை தீர்மானிக்கின்றது. இதனால் தேயிலையின் விலை இந்தியாவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களும் சம்பள அதிகரிப்பைக் கோரி பல போராட்டங்களை ஆங்காங்கே மேற்கொண்டு வந்தனர். கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கேரள மாநிலத்தின் மூனார் பகுதியின் “கண்ணன் தேவன்” தோட்டத்தைச் சேர்ந்த தோட்டப் பெண்கள் ஒன்றுகூடி 231 ரூபாவாக உள்ள நாட்சம்பளத்தை 500ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி தன்னிச்சையான போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இப்போராட்டத்தை அவர்களது நான்கு தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததுடன் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரின. ஆனால் தொழிற்சங்கங்களின் மறுப்பை எதிர்த்து 7000 பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவர்களில் 85 சதவீதமானோர் தமிழ் பெண் தொழிலாளர்களாவர். ஒரு மாதம் தொடர்ந்த போராட்டத்தில் ஈற்றில் எதிர்க்கட்சியும் அரசாங்கமும் தலையிட்டு 100 ரூபா சம்பள அதிகரிப்பை ஏற்குமாறு கோரினர். அதாவது 331 சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முன்வந்தனர். ஆனால் பெண் தொழிலாளர்கள் இதனை ஏற்க மறுத்தனர்.

இப்பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை.

எனவே, தேயிலைத் தொழிற்றுறை இலாபகரமான தொழிற்றுறையாகவும் மற்றும் தேயிலைக்கான கேள்வி பரவலாகக் காணப்பட்டாலும் உள்ளக வெளியாக பொருளாதார தாக்கங்களுக்கு உட்பட்டதாகவே இத்தொழிற்றுறை காணப்படுகின்றது. இதனால் ஆரம்பம் முதலே தோட்டத் தொழிலில் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டதுடன் மானிய அடிப்படையில் உணவுப் பொருட்கள், ஆரம்ப மருத்துவ வசதி மற்றும் வீடு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

ஆனால், இன்று ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாறாக சுதந்திரத் தொழிலாளர்களாக தோட்டத் தொழிலாளர்கள் நிலைமாற்றம் அடைந்துள்ளதுடன், அவர்களது அடிப்படை தேவைகள் மற்றும் வாழ்க்கை சுற்றோட்டத்தில் பாரிய மாற்றம் அடைந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வாழ்க்கைச் சுற்றோட்டமும் அடிப்படைத் தேவைகளும் மாறுபட்டுள்ளதால் அவர்களது வருமானமும் அதிகரிக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. வெறுமனே தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை தொழிலிலிருந்து மட்டும் பெறும் சம்பளத்தின் மூலம் தமது குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே ஒட்டுமொத்தமாக வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் நிலைக்குத் தோட்டத் தொழிலாளர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தோட்டத்தில் வாழும் மலையக மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க சமூக அசைவியக்கம் ஏற்பட்டுள்ளது. முழுமையாக தோட்டத்தொழிலாளரை மட்டும் கொண்டிருந்த தோட்ட வாழ் மலையக சமூகம் இன்று பல வர்க்கத் தட்டுக்களை கொண்டமைந்துள்ளது. இவ்வளர்ச்சி மேலும் முன்னோக்கி நகருமே தவிர பின்னோக்கி நகராது.
அதாவது தோட்டத் தொழிலை மட்டும் நம்பியிருக்கும் பட்டாளம் உருவாகாது, மாறாக தோட்டத்தை விட்டகன்று தொழில் தேடிச் செல்லும் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும்.

 எனவே மாற்று வருமான வழிகளைத் தேடி செல்ல வேண்டிய நிலைக்கு புதியத் தொழிலாளர்கள் சமூகம் ஆளாகியுள்ளது. மறுபுறம் முதலாளித்துவ கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தோட்டக் கம்பனிகளும் நிரந்தரத் தொழிலாளர் பட்டாளத்தை வைத்திருப்பதை தவிர்க்க ஆரம்பித்துள்ளது.

இதன் வெளிப்பாடாக குத்தகைத் தொழிலாளர்கள், நாட் சம்பளம் பெறும் தொழிலாளர்கள், அளவுத் தொழிலாளர்கள் என பலதரப்பட்ட நிரந்தரமற்ற தொழிலாளர்கள் இன்று தோட்டத்திற்குள்ளேயே உருவாக்கப்பட்டுள்ளனர்.

இப்பின்புலத்தில் சில தோட்டக்கம்பனிகள் தேயிலைக்காணிகளை பல்வேறு திட்டங்களின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றன. மதுரட்ட தோட்டக் கம்பனி தமது தோட்டத் தொழிலாளருக்கு சேவைக்கால கொடுப்பனவை வழங்கி அவர்களை தோட்டத் தொழிலிலிருந்து முழுமையாக நீக்கி விட்டு அவர்களுக்கு இருவருட குத்தகையின் அடிப்படையில் தலா 2 ஏக்கர் தேயிலைக் காணியை வழங்கியிருகின்றது. குறிப்பிட்ட தோட்டத் தொழிலாளர்கள் தமது சொந்த பணத்தை தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்து அதிலிருந்து பெறும் தேயிலைக் கொழுந்தினை தோட்டத் தொழிற்சாலைக்கு வழங்க முடியும். அதேபோல் ஏனைய சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்கள் போல் சுந்திரமாக எந்தவொரு தொழிற்சாலைக்கும் அவர்களது கொழுந்தை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகம் கண்காணிப்பு வேலையை மட்டும் மேற்கொள்ளும்.

இதேவேளை எல்பிடிய கம்பனி தோட்டத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்திக்கொண்டே அதிக விளைச்சல் தராத தேயிலைக் காணிகளில் காணப்படும் தேயிலைச் செடிகளில் தலா 3000 தேயிலைச் செடிகளை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கியுள்ளது. அத்தேயிலை மரங்களை பராமரிப்பதற்கான உரம் மற்றும் தேவையான மருந்துவகைகளை கம்பனி வழங்கி கண்காணிக்கும்.
தேயிலை மரங்களைப் பெற்ற குத்தகையாளர் கொழுந்தினை அத் தோட்டத்திற்கே வழங்க வேண்டும். தேயிலைக் கொழுந்து கிலோ ஒன்றிற்கான விலைய தோட்ட நிர்வாகமே நிர்ணயிக்கும். இவ்வாறு கம்பனிக்கு கம்பனி மாறுபட்ட குத்தகைத் திட்டங்களை கம்பனிகள் அமுல்படுத்தி வருகின்றன.

இன்றைய முதலாளித்துவம் தொழிலாளியை எட்டு மணிநேர கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை இலாபத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கின்றது. அதாவது எட்டு மணித்தியாலய வேலையிலமர்த்துவது நட்டமாகின் அதனை தவிர்த்து குத்தகை முறைக்கு செல்லும், சில சமயம் எட்டு மணித்தியாலய வேலையிலமர்த்துவது இலாபமாகின் குத்தகையை முறையை கைவிட்டு எட்டு மணித்தியால வேலைநேரத்தை அறிமுகப்படுத்தும்.

இன்றை சூழலில் குத்தகையாளர் முறையையே தோட்டக் கம்பனிகள் பின்பற்ற முனைந்துள்ளன. தோட்டக் கம்பனிகள் அறிமுகப்படுத்தும் குத்தகை முறை தோட்டத் தொழிலாளர்களது வருமானத்தை அதிகரிக்குமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாக இருந்தபோதிலும் தற்போதைய நிலையில் தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் உடனடி வருமானத்தைக் கருத்திற்கொண்டு குத்தகை முறையை ஏற்றுக்கொள்கின்றனர்.
இம்முறை மூலம் தொழிலாளர்கள் என்ற நிலையிலிருந்து விடுபட்டு நில உரிமையற்ற சிறு உற்பத்தியாளர்களாக மாறுகின்றனர்.

சில திட்டத்தின்படி தொழிலாளர்களாகவும் குத்தகையாளர்கள் என்ற இரண்டு பாத்திரத்தையும் வகிக்கின்றனர். இதன் சாதக பாதகத் தன்மையை சிலகாலம் கழித்தே அடையாளம் காணமுடியும்.

 இன்றைய நிலையில் தொழிற்சங்கங்கள் இத்திட்டத்தை தடுத்து நிறுத்தக்கூடிய நிலையில் இல்லை. ஆகையால் அமுல்படுத்தப்படும் குத்தகை முறை திட்டங்களை ஒரு பொதுத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தும்படி மலையக தொழிற்சங்க அரசியற் தலைமைகள் கம்பனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது தோட்டக்காணிகளை பகிர்ந்தளிக்கும் போது குறைந்த பயன் தரும் காணிகளை மட்டும் பகிர்ந்தளிக்காது அதிக விளைச்சல் தரும் காணிகளையும் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதுடன் ஆகக்குறைந்தது நான்கு ஏக்கர் தேயிலை காணிகளை ஒரு குடும்பத்திற்கு வழங்க கோரவேண்டும்.

மேலும் குத்தகைக் காலம் குறைந்தபட்சம் 20 முதல் 30 வருட குத்தகை காலத்தை கொண்டதாக இருத்தல் வேண்டும். இதேவேளை அரசாங்க சிறு தேயிலை உடைமையாளருக்கு வழங்கும் மானியங்கள் மற்றும் சேவைகளை இவர்களுக்கு வழங்கும்படி கோர வேண்டும். அத்துடன் அவர்களது விருப்பின் பேரில் அதிக விலைதரும் தேயிலை தொழிற்சாலைக்கு கொழுந்தை வழங்கும் உரிமையை வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தோட்டத்தொழிலாளர்கள் வாழ்வதற்கான வருமானத்தைப் பெறமுடியும்.

அவ்வாறு செய்ய முடியாவிடின் அனைத்து தோட்டங்களையும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும்படி கோரி தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ஒரு நாளைக்கு ரூபா 1500 வழங்கி அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் சம்பள உயர்வு பொறிமுறையை உருவாக்கிக் கொள்ளும் முறைமையை அறிமுகப்படுத்தும்படி கோர வேண்டும்.

இவ்விரண்டு மாற்று உபாயங்களில் ஏதாவது ஒன்றினை அமுல்படுத்தும்படி மலையகத் தலைமைகள் அரசாங்கத்தை கோராவிடில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பிரச்சினை என்றும் தொடரும் நெருக்கடியாக அமைவதுடன் தொழிலாளர் ஒருபோதும் வாழ்வதற்கான வருமானத்தைப் பெறமுடியாது.

இந்நெருக்கடியை தொழிற்சங்கங்கள் கருத்திற் கொண்டு செயற்படாவிடின் எதிர்வரும் காலத்தில் மூனார் தொழிலாளர்கள் போல் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களை நிராகரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர்.

நன்றி- தினகரன்

சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில்

இயற்கையான நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான காரணம்

சென்னை மட்டுமல்லாமல் டில்லி,கொல்கத்தா, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களும் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இயற்கை நீர்நிலைகளும், வடிகால்களும் முறையாக பராமரிக்கப்பட்டிந்ருதால், சென்னை இப்படியான வரலாறு காணாத நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் என அந்த மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சென்னை,மும்பை போன்ற பெரு நகரங்களில் போதுமான வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல், திட்டமிடாத வகையில் நகரம் வளர்ந்து கட்டிடங்கள் கட்டப்படுவதால், வெள்ளம் ஏற்பட்டதும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகிறது என தெரிவித்துள்ளார் சுனிதா நரெயன்.

இப்படியான அதிவேக நகரமயமாக்கல்கள், இயற்கை வடிகால்களை அழித்துள்ளன என்றும், சென்னை போன்ற நகரங்கள் இதன் தாக்கத்தை இப்போது உணர்ந்துள்ளன என தெரிவித்து;ள்ள அந்த அமைப்பு சென்னை தனது இயற்கை வடிகால் வசதிகளை பராமரிக்கத் தவறியுள்ளது எனவும் சி எஸ் இ அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 1980களில் சென்னையில் 600 நீர் நிலைகள் இருந்தன, ஆனால் இப்போது அதில் மிகச் சொற்பமானவையே எஞ்சியுள்ளன

நீர்நிலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை பேணிப் பராமரிக்காத நிலையில் பருவநிலை மாற்றத்தால் அசாதாரணமான அளவுக்கு மழை பெய்யும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது

பாரிஸில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு நடைபெற்று வரும் வேளையில், இப்படியான விஷயங்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
நீர்நிலைகள் எப்படி சீரழிந்து போயுள்ளன என்பதற்கு போரூர் ஏரி ஒரு உதாரணம் எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நீர்நிலைகள், நிலத்தடி நீர் மீண்டும் ஊறுவதற்கும், வெள்ளம் ஏற்படும் போது அதை சமாளிப்பதற்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும எனத் தெரிவித்துள்ள அறிக்கையில் மேலும்  ஈரநிலப்பகுதியில் எப்படி கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றன எனும் கேள்விக்கு ஒருநாளும் பதில் கிடைத்தது இல்லை எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நிலங்கள் நகர நிலச் சட்டங்களின் கீழ் மிகவும் அரிதாகவே பதியப்படுகின்றன எனவும், அதன் காரணமாக பலருக்கு அது தெரியவருவதில்லை என்கிறார் சுனிதா நரெயின்.

அனுமதி கோரி மனுக்கள் வரும்போது மேலோட்டமாக நிலங்களை மட்டுமே அதிகாரிகள் பார்க்கிறார்கள், அதிலுள்ள நீராதாரங்களைப் பார்ப்பதில்லை, எனவே பேராசை பிடித்த கட்டுமான நிறுவனங்கள் அதை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன எனவும் சி எஸ் இயின் அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழக அரசின் ஆவணங்களின்படி கடந்த 1980களில் 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 1,130ஹெக்டேர்களாக இருந்தது, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 645 ஹெக்டேர்களாக சுருங்கியுள்ளன, அதன் காரணமாக அந்த ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போயின என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளதோடு சென்னையின் பல இடங்களில் மழைநீர் கால்வாய்களில் குப்பைக் கூளங்களால் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன, அவை உடனடியாக தூர்வாரி சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

சென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன என்றும், இதுவே பெருமழையின் போது, சாலைகளில் நீர் ஓடுவதற்கும் தேங்கி நிற்பதற்கும் காரணமாகின்றன.

மனிதர்களால் உருவாக்கப்படும் வடிகால் அமைப்புகள், ஒருநாளும் இயற்கை வடிகால் அமைப்புகளுக்கு மாற்றாக இருக்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ள அவ்வறிக்கையில்  சென்னையில் கூவம், அடையாறு போன்ற நதிகளை இணைக்கும் இயற்கை கால்வாய்களும், வடிகால்களும் இருப்பதை தமது ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

உதாரணமாக, நகரின் 75 குளங்களில் நீரின் அளவு உயர்ந்து கொள்ளளவைக் கடக்கும்போது, அந்த நீர் கூவத்தில் கலக்கவும், அதேபோல் 450 குளங்களில் உள்ள உபரி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு உயரும்போது அதிலுள்ள உபரி நீரும் அடையாற்றில் கலப்பதற்கு வசதிகள் இருந்தன என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
 
கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் 1,218 மிமீ மழை பெய்துள்ளது. இது சராசரியாக ஆண்டொன்றுக்கு கிடைக்கும் மழையின் அளவைவிட மூன்று மடங்கானது.
 
நன்றி- பி.பி.சி

Saturday, December 5, 2015

இரண்டு மாடி குடியிருப்பில் வெடிப்பு

கடும் மழை காரணமாக, லிந்துலை திஸ்பனை தோட்டத்தின் குடியிருப்புப் பகுதியிலுள்ள பாரிய மண்மேடுகள், லயன் குடியிருப்புக்கள் மீது  சரிந்து விழுந்துள்ளதாகவும் அதனை அப்புறப்படுத்துவதற்கு எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லை என்றும் குடியிருப்பிலுள்ள மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மாடி வீடமைப்புத் திட்டம், 2004ஆம் ஆண்டின் போது, லிந்துலை திஸ்பனை தோட்டத்திலுள்ள சுமார் 197 பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
 
இவ்வாறு அமைக்கப்பட்ட மாடி வீட்டு லயன்கள் அனைத்தும், மண்மேடுகள் உள்ள பிரதேசத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 8ஆம் திகதி பெய்த மழையின் போது, 07 வீடுகளைக் கொண்ட இரண்டு லயன் தொகுதி மேல் மண்மேடு விழுந்து, குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன. 
 
மேலும், அதே பகுதியில், 14 வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டு, அவை உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளன.  இதேவேளை, கடந்த 05ஆம் திகதி பெய்த கடும் மழையினால்,   இக்குடியிருப்புக்கள் மீது பாரிய மண்மேடுகள் விழுந்ததில், 05 லயன் தொகுதிகள் சேதமடைந்துள்ளன. இதனால் 84 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
மண்மேடுகள், குடியிருப்புகளின் சமையல் அறைகளிலும் விழுந்துள்ளதனால், மக்கள் தங்களது அன்றாட சமையல் நடவடிக்கைகளில் கூட ஈடுபட முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
 
இது தொடர்பாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் நுவரெலியா மாவட்டப் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் இப்பகுதி கிராம அதிகாரிக்கும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக வந்து பார்வையிட்ட பின்னர், இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்ட போதும், அனைத்தும் பொய்யாகிவிட்டதென மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இனியாவது தங்களது குடியிருப்புக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் மக்கள் கோரி நிற்கின்றனர்.
மலையகத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்தும் மக்களுக்கு தெளிவுறுத்தும் வகையில்  பொகவந்தலாவ கெம்பியன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.

மலையகத்தில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தக்கூடாது  எனவும் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறு கோறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் கோஷம் வெளியிட்டனர்.

இதேவேளை மக்களிடம் வாக்குகளை  பெற்று பாராளுமன்றம் செல்லும் அரசியல்வாதிகள் பாரளுமன்றத்திற்கு சென்று மௌனம் காக்காமல் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கான கடுமையான சட்டதிட்டங்களை  அமுல்படுத்துமாறு பாராளுமன்றத்தில் அழுத்தத்தை தெரிவிக்கபட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் மேலும் தெறிவித்தனர்.

இந்த தெளிவூட்டும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம்   பொகவந்தலாவ கெம்பியன் தோட்ட வைத்தியசாலையில் இருந்து கெம்பியன் நகர்வரை பாதாகைகளை  ஏந்தி பேரணியாக சென்றமை குறிப்பிடதக்கது.

இதேவேளை கெம்பியன் தோட்ட வைத்தியசாலையில்  சிறுவர்கள் எதிர்நோக்கும் துஷ்பிரயோகங்கள் குறித்து சிறுவர்களை தெளிவூட்டும் செயலமர்வு ஒன்று பொகவந்தலாவ பொலிஸாரால் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.