Sunday, December 6, 2015

தொழிற்சங்க போராட்டத்திற்கு முஸ்தீபு

கடந்த ஒன்பது (9) மாதங்களுக்கும் மேலாக இழுபறி நிலையில் காணப்பட்டு வரும் பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக தோட்டக் கம்பனிகளும், முதலாளிமார் சம்மேளனமும் கடைப்பிடித்து வரும் உதாசீனப் போக்கைக் கண்டித்து, தொழிலாளர்களைத் தொழிற்சங்கப் போராட்டத்தில் இறக்கும் முஸ்தீபில் அனைத்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்களும் இறங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பெருந்தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ். இராமநாதன் தெரிவித்தார்.நேற்று முன்தினம் (6ம் திகதி) காலை 9.30 மணியளவில் மாத்தளை தொழிற்சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கைத் தோட்ட சேவையாளர் சங்க அலுவலகத்தில் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் பி.ஜி. சந்திரசேனவின் தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் விசேட செயற் குழுக் கூட்டத்தில் தொழிற் சங்கப் போராட்டத்தில் இறங்குவது தொடர்பாகத் தீவிரமாக ஆராயப்பட்டதாகவும், எஸ். இராமநாதன் மேலும் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கூறியதாவது,

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு விடயத்தில் தலையிட்டு மூன்று வாரங்களுக்குள் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறும், தவறும் பட்சத்தில் மலையகத்தின் ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி தொழிற்சங்கப் போராட்டமொன்றில் ஈடுபடுத்த நேரிடும் எனவும் கடிதங்கள் மூலம் ஜனாதிபதி, பிரதமர், தொழிலாளர்கள், முதலாளிமார் சம்மேளனம், தோட்டக் கம்பனிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவிப்பதென இக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது என்னுடன் எஸ். முத்தையா, ஐயாத்துரை, பி. தேவகுமார், என்.எம்.ஆர். சிறில், எஸ். கந்தையா, போரசிரியர் விஜேகுமார், நாத் அரமசிங்ஹ, மேனகா கந்தசாமி, மற்றும் ஏ. முத்துலிங்கம் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர் எனத் தெரிவித்த எஸ். இராமநாதன் மேலும் கூறுகையில், தோட்டத் தொழிலாளர்களது கூட்டு ஒப்பந்தம் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற பின்னர் தோட்டக் கம்பனிகள் தொழிற் திணைக்களம், மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றுடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தியும் தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பளத்தை உயர்த்தித் தராது பிடிவாதமாக இருந்து வருகின்றன.

இது தொடர்பாக தொழிலாளர்கள் ஆங்காங்கே எதிர்ப்புப் போராட்டங்களிலும் மெதுவாகப் பணி செய்யும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளமை தொடர்பிலும் கொழும்பில் 4 ஆம் திகதி இக்கூட்டத்தில் முகவும் உன்னிப்பாக ஆராயப்பட்டது.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை ஒன்றைத் தோட்டக் கம்பனிகளுடனும் தொழிற்சங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு விடுத்த கோரிக்கைக்கும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

தொழிலாளர்களைத் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபடுத்தும் பட்சத்தில் அதற்கு முன்னதாக சகல அரசியல் சமூக தொழிற்சங்க அமைப்புகளுடனும் கலந்து பேசி அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ். இ¡மநாதன் மேலும் தெரிவித்தார்.

-தினகரன் -

No comments: