Sunday, July 4, 2010

மக்களை மையமாகக் கொண்டே எல்லைகள் மீளமைக்கப்பட வேண்டும்

இலங்கையின் தற்போதைய பொருளாதார, சமூக, அரசியல் சூழ்நிலைகளை எடுத்து நோக்கும் போது அரசியல் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படுகின்றது. அவ்வடிப்படையில் யாப்பு சீர்த்திருத்தம், தேர்தல் முறைமையில் மாற்றம் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் இலகுவாக மக்களை அணுகக் கூடியதாக இருக்க வேண்டும்.

அரசாங்கம் பிரதேச செயலக, கிராம சேவகர் பிரிவு எல்லை ஆகியவற்றை மீள் நிர்ணயம் செய்தல் அல்லது புதிதாக அமைத்தல் சம்பந்தமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அது தொடர்பாக மக்களின் சிவிலமைப்புகளின் கருத்துக்களை கோரியுள்ளது. உள்ளூரா ட்சி அமைப்பின் எல்லைகளில் மாற்றங்களைக் கொண்டு வருதல் என்பது வெறுமனே புவியியலை மாத்திரம் மையப்படுத்தியதாகக் கொள்ள முடியாது. சிவில், அரசியல், பொருளாதார, கலாசார உரிமைகளை சார்ந்த சகல விடயங்களையும் தீர்மானிப்பதாக அமைந்திருந்திருக்கின்றது

சிறுபான்மை மக்கள் இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனடிப்படையில் மனித அபிவிருத்தித் தாபனம் மலையக மக்களை மையமாகக் கொண்டு பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவகர் எல்லைகளை மீளமைத்தல், மீள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினர் மத்தியில் கலந்துரையாடல் களையும், கள ஆய்வுகளையும் மத்திய, ஊவா, சப்ரகமுவ போன்ற மாகாணங் களில் மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து உயர்மட்ட கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றது.

கலாநிதி ஏ. எஸ். சந்திரபோஸ், பேராசிரியர் எம். எஸ். மூக்கையா, எஸ். விஜேசந்திரன் ஆகியோரின் ஆய்வறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டும், பல்வேறு மட்டங்களிலிருந்து முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மூலம் தயாரிக்கப்பட்ட முன் மொழிவுகளைக் கொண்டும் நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களுக்கான முன்மொழிவுகள் மனித அபிவிருத்தி தாபனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் மலையக சிவிலமைப்புகள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற பலர் தமது ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு சிறந்த சேவையளிக்கும் நோக்கத்துடனேயே பிரதேச செயலகங்கள், கிராம சேவகர் பிரிவுகள் போன்ற நிர்வாக சேவை அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. எனினும் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் குறிப்பாக தோட்டப் பகுதிகளிலும் நிர்வாக சேவை முறை மிகவும் பின்னடைவாகவே காணப்படுகின்றன. மலையக மாவட்டங்களைப் பொறுத்தவரையில் வட கிழக்கிற்கப்பால் மிக அதிகமான தமிழ் பேசும் மக்களைக் கொண்டதாகக் காணப்படுவது நுவரெலியா மாவட்டமாகும். ஒப்பீட்டு ரீதியில் நுவரெலியா மாவட்டம் ஏறக் குறையை 7,55,500 பேரை சனத்தொகையாகக் கொண்டிருந்த போதும் அங்கு 5 பிரதேச செயலகங்களே காணப்படுகின்றன. அதேவேளை அம்பகமுவ பிரதேசச் செயலகம் சராசரியாக 130,000 தோட்ட மக்களுக்கு சேவையாற்ற வேண்டியுள்ளதோடு, ஒரு கிராம சேவை அலுவலர் சராசரியாகத் தோட்டப்பகுதியில் ஏறத்தாழ 3500 மக்களுக்கு சேவை செய்ய வேண்டியுள்ளது. இது தேசிய மட்டத்தை விட 5 மடங்கு பெரிதானது. இந்த நிலைமை, பிரதேச செயலகத்தினதும் கிராம சேவை அலுவலரினதும் நிலைமைகளை மட்டுப்பாட்டிற்கு உள்ளாக்குகின்றது. அதேவேளை பயனாளி மக்கள் தங்களுடைய பல்வேறு உரிமை களையும் சலுகைகளையும் இழக்க வேண் டிய நிலைமைக்கு உள்ளாகின்றனர்.

எனவே தான் பல சிவிலமைப்புகள் பிரதேச செயலகங்களில் மக்களுக்கு நியாயமான சேவைகள் சென்றடைய வேண்டும் என வலியுறுத்துகின்றன. இதுவரை காலமும் மலையக அரசியல் தலைமைகளை எடுத்து நோக்கின் அவர்கள் தங்களது அதிகாரத்தின் அல்லது கட்சியின் இருப்பினை கருத்திற் கொண்டே கோரிக்கைகளை முன்வைக்கின்றனரே யொழிய இத்தகயை விடயங்களை மேற்கொள்வதில் அவர்களின் பங்கு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. மலை யக அரசியற் கட்சிகள் தமது வாக்கு, வங்கியை மையமாகக் கொண்டு தேர்தலுக்கு முன் வழங்கும் விஞ்ஞாபனங்கள் எந்தளவுக்கு நடைமுறைக்கு சாத்தியமாகியுள்ளன. என்பது கேள்விக் குறியே.

பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் ஆகியன பற்றிய எல்லைகள் மீள் நிர்ணயம் செய்தல் என்பது ஒரு புவியியல் சார்ந்த விடயம் மாத்திரமல்ல. அது ஓர் அரசியல் சார்ந்த விடயமாகும். மலையக மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளித் தமிழர் கள் ஒன்றில் பரந்துபட்ட அளவில் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். அல்லது பிரதான போக்குவரத்து தொடர்பு மையங்களிலிருந்து மிகத் தொலைவில் வாழ்ந்து வருகின்றனர். எனவே தற்போதைய பிரதேச செயலக அமைப்பு முறைகள் அவர்களின் பங்கு பற்றலை அல்லது அவர்களின் அணுகு தலை அல்லது அவர்களின் உரிமை களை நிலைநாட்டிக் கொள்வதிலிருந்து மட்டுப்பாடுடையதாகவே காணப்படுகின்றன.
பல சந்தர்ப்பங்களில் பெருந்தோட்ட மக்கள் பிரதேச சபை அமைவிற்குள் உள்வாங்கப்படாதவர்களாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. கிராம சேவகர் பிரிவுகளை எடுத்துக் கொண் டால் அண்மைக் காலங்களில் தோட்ட மக்களை உள்ளடக்கிய கிராமப் பிரிவுகள் அமைக்கப்பட்டாலும் கூட இன்று பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. சில பிரதேச செயலகங்கள் புவியியல், அடிப்படையில் மிகத் தொலைவில் காணப்படுவதும் அதேவேளை அப்பிரதேச செயலகங்களை அணுகுவதற்கான போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படுவதும் மற்றொரு குறைபாடாகும்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லைகள் அப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களை உள்வாங்குவதிலிருந்து மட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றமையால் அவற்றை மீள் நிர்ணயம் செய்யப்படுகின்ற தேவை காணப்படுகின்றது. உதாரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சனத் தொகையை அடிப்படையாகக் கொண்டும், புவியியல் இட அமைவை அடிப்படையாகக் கொண்டும் போக்குவரத்து தொடர்பாடலை மையமாகக் கொண்டும், வரலாற்று ரீதியான வறுமையை அடிப்படையாகக் கொண்டும், மொழி வாரியான பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. இதேபோல் பதுளை, இரத்தினபுரி, கண்டி உட்பட ஏனைய மாவட்டங்களிலும் மேற்படி விடயங்களைக் கவனத்திற் கொண்டு எல்லைகளை மீள் நிர்ணயம் செய்தல் அவசியமாக இருக்கின்றது.
புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பிரதேச செயலகங்கள்

இவ்வடிப்படையில் மனித அபிவிருத்தி தாபனம் கீழ்வருமாறு நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மலையக பெருந்தோட்ட மக்களையும் தமிழ் பேசுகின்ற மக்களையும் அடிப்படையாக கொண்டு கீழ்வருமாறு 14 புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குமாறு பிரேரணையை முன்வைக்கின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்கனவே காணப்படுகின்ற 5 பிரதேச செயலகங்களுடன் புதிதாக அட்டன், நோர்வுட், தலவாக்கலை, நானுஓயா, ராகலை, பூண்டுலோயா, மதுரட்ட போன்ற புதிய 7 பிரதேச செயலகங்கள் பிரேரிக்கப் பட்டுள்ளன.

மும்மொழியப்பட்ட கிராம சேவகர் பிரிவுகள்
அதேபோல் கண்டி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் பெருந்தோட்ட மக்கள்சார் அல்லது தமிழ் பேசுகின்ற மக்கள் அதிகமாக பன்விலை, புஸ்ஸலாவ, நாவலப்பிட்டி, தெல்தோட்டை, இரங்கலை பிரதேசங்களிலே வாழுகின்றனர். இவ்வடிப்படையில் பெருந்தோட்ட மக்களை மையமாகக் கொண்டு புதிதாக ரங்களை பிரதேசத்தல் 30 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம், ரஜவெலை பிரதேசத்தில் 30 கிராம சேவகர் பிரிவு களை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம், புஸ்ஸலாவ பிரதேசத்தில் 30 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம் புதிதாக அமைக்க வேண்டுமென பிரேரணை செய்யப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், மலையக பெருந்தோட்ட மக்கள் பசறை, ஹாலிஎல, அப்புத்தளை போன்ற பிரதேசங்களிலேயே செறிவாக வாழ்கின்றனர். அதேபோல் இப்பிரதேச ங்களில் தமிழ் பேசுகின்ற மக்கள் குவி யப்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கத் தக்கது. அவ்வடிப்படையில் நமுனுகல பிரதேசத்தில் 50 கிராம சேவகர் பிரிவு களை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டியுள் ளது. அத்துடன் ஹல்துமுல்ல பிரதேச செயலகம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு புதிதாக வெலன்விட்ட என்ற பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங் கொடை, இம்புல்பே, இறக்குவானை, காவத்தை, நிவித்திகல போன்ற பிரதேச ங்களிலேயே பெருந்தோட்டங்கள் மையப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேச ங்களில் வாழும் தமிழ் பேசும் மற்றும் கிராமிய பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி பலாங்கொடை, இபுல்பே ஆகிய பிரதேச செயலகங்களுடன் புதிதாக மாரத்தென்ன என்ற பிரதேச செயலகம் 40 கிராம சேவகர் பிரிவு களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட வேண்டும் என பிரேரிக்கப்பட்டுள்ளது. அதே போல் 38,000 சனத்தொகையையும் 38 கிராம சேவகர் பிரிவுகளையும் மையமாகக் கொண்டு புதிதாக இறக்குவானை என்ற பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும் என பிரேரி க்கப்பட்டுள்ளது.

மலையக பெருந்தோட்ட மக்கள் வாழும் மாத்தளை, கேகாலை, மொனராகலை, குருநாகல் போன்ற மாவட்டங்களிலும் தோட்ட, கிராமிய மக்கள் பயன் பெறுவதற்கு பிரதேச செயலக எல்லைகளை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டிய தேவை காணப் பட்டாலும் கூட அப்பிரதேசங்களின் சமூக அரசியல் நிலைமைகளையும் புவியியல் நிலைமைகளையும் அடிப் படையாகக் கொண்டு பார்க்கும் போது, அவ்வாறான பிரேரணைகளை முன் வைப்பதில் பல சிக்கல்களும் முரண் பாடுகளும் காணப்படுகின்றன. பிரதேச எனவே இம்மாவட்டங்களில் ஏற்கனவே காணப்படுகின்ற செயலகங்களில் பெருந்தோட்ட மக்களை அல்லது தமிழ் பேசுகின்ற மக்களை மையமாகக் கொண்ட அலகுகள் உருவாக்கப்பட வேண்டிய தேவை காணப்படுவது சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேற்படி பிரேரணைகள் அடிமட்ட மக்களின் ஆலோசனைகளுடன், மலை யகம் சார்ந்த புத்திஜீவிகள் மனித அபி விருத்தி தாபனம் மற்றும் சிவில், அரசி யல் கட்சிகளினாலும் முன்வைக்கப்படு கின்றன. இப்பிரேரணைகள் நடைமுறைப் படுத்துவதென்பது மலையக அரசியல் சார்ந்தவர்களின் பொறுப்பாக இருப்ப துடன், மலையக பொது மக்கள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், புத்தி ஜீவிகள், வர்த்தகர்கள் போன்ற அனைவரி னதும் பொறுப்பாகும். இவ்வடிப்படையில் மேற்படி முன்மொழிவுகள் சம்பந் தமான பல்வேறு மட்டத்திலான கருத் துக்கலங்கள், கருத்துப் பகிர்வுகள் ஆலோசனைகள் ஏற்பாடு செயப்பட வேண்டியதும், அவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டியதும் சகலரினதும் பொறுப்பாக இருப்பதுடன் சம்பந்தப் பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.
பி. பி. சிவப்பிரகாசம்
மனித அபிவிருத்தி தாபனம்

நன்றி- தினகரன் வாரமஞ்சரி 04-07-2010

Sunday, May 2, 2010

மே தினத்திலாவது பெண் தொழிலாளர்கள் கௌரவிக்கப்படுவார்களா?

உதிரத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்து மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் 8 மணி நேரம் கொண்ட உழைப்பை உரிமையாகப் போராடி பெற்ற நாள் மேதின மாக உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது. 16, 12, 10 மணி நேரங்கள் செக்கு மாடுகள் போல் உழைத்து உழைத்து அலுத்துப் போன தொழிலா ளர்கள் நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை செய்வோமென சூளுரைத்து 1886 ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி கிளிர்ச்சியை நடத்தினர். கிளர்ச்சியை அடக்க கடுமையான தண்டனை கள் கொடுக்கப்பட்ட போதிலும் தோழர்கள் துளியும் அஞ்சாது உறுதியுடன் போராடி அதில் வெற்றியும் கண்டனர்.

அன்று சிந்திய இரத்தத்தை ஆண்டு தோறும் மே தின விழாவில் பாட்டாளி மக்கள் நினைவுகூருகின்றனர். இது ஒன்றும் உழைக்கும் வர்த்தகத்தின் ஓய்வுநாள் அல்ல. பொழுதுபோக்கும் களியாட்ட நாளும் அல்ல. மாறாக மூலதனத்துக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் இரத்தம் சிந்தி போராடிய நாள். உலக தொழிலாளர் வர்த்தகத்தின் நலனுக்காக போராடி பலர் மரணித்த நாள். வேலைநிறுத்தம் செய்த நாள், மூலதனத்தின் குவிப்பை ஒருநாள் உழைப்பால் மறுத்து அதைக் குறைத்த நாள். மூலதனம் இந்த நாட்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய நாட்கள் அவை. மூலதனம் தனது அடக்கு முறை இயந்திரத்தையே தொழிலாளி வர்க்கத்துக்கு ஏவிவிட்ட நாள். சுதந்தி ரம் ஜனநாயகத்தை உழைக்கும் வர்க் கத்துக்கு மறுத்த நாள்.

எட்டு மணி நேர வேலை என்ற அடிப்படையான அரசியல் கோசத்தை முன்வைத்து தொடங்கிய போராட்டத்தின் போது அமெரிக்காவில் கொல்லப்பட்ட தொழி லாளர்களின் நினைவாக இக்கோரிக்கையை முன்நிறுத்தி போராடத் தொடங்கிய நாள். இத்தினம் உலகெங்கும் உள்ள தொழிலாளி வர்க்கம் தனது வர்க்க உணர்வோடு ஒன்றுபட்டெழுந்த நாள். மேதினம் என்பது வெறுமனே வெற்றி கோஷங்களை மேடையில் முழங்கும் நிகழ்வாக மாறி வருகின்றது. மேதினக் கூட்டங்களில் மேடைப் பேச்சுக்களும், பட்டாசு சத்தங்களும் முழங்குகின்றன.

ஆனால் தொழிலாளர் தினமான அன்று எந்த மேடையிலாவது தொழிலாளர் கழுத்தில் மாலை விழுந்திருக்கின்றதா? இல்லையேல் தொழிலாளர் எவராவது கௌரவிக்கப்பட்டிருக்கிறார்களா? தொழிலாளியை மேடையில் பேச வைத்து அரசியல் தலைமைகள் தான் கேட்டுக் கொண்டிருந்த சரித்திரங்கள் தான் உண்டா?

மலையகத்தில் மேதினக் கூட்டங்கள் ஒருநாள் கூத்தாக மறைந்து விடுகின்றன. மேதினத்தன்று காலை ஒவ்வொரு தோட்டங்களிலும் கட்சிக் கொடிகள் ஏற்றப்படுகின்றன. கட்சித் தலைவர்கள் பேசுவதை கூட்டத்துடன் கூட்டமாய் நின்று கேட்டுவிட்டு இருப்பிடங்களுக்குத் திரும்பி விடுகின்றனர். தவிர தொழிலாளர் உரிமை, தொழிலாளர் நலன் அல்லது குறைந்த பட்சம் தனது நலன் தொடர்பாக கூட சிந்திப்பதில்லை.

ஆனால் ஒரு சில தோட்டங்களில் தொழிலாளர் விழாக்கள், பூசைகள், விளையாட்டுப் போட்டிகள், பரிசில் வழங்கல் என தொழிலாளர் உளம் மகிழும் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இது சகல தோட்டங்களிலும் நடைபெறுமாயின் மேதினம் சிறக்கும் தொழிலாளர் நன்மை அடைவர்.

இன்று மலையகப் பகுதிகளில் முதலாளித்துவத்தின் தாக்கத்தினாலும், அரசியல் தலைமைகளின் பொறுப்புணர்வு இன்மையினாலும் மேதினம் வெறும் பொழுது போக்கு விடுமுறை நாளாக, ஓய்வுநாளாக, களியாட்ட நாளாக, அரசியல்வாதிகளின் மேடை வாக்குறுதிகளாக காட்டி சிதைக்கப்படுவதால் அதன் தன்மை மறைந்து வருகின்றது.

எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்நிலையிலும் கொத்தடிமை நிலை முற்றிலும் நீங்கியதாகத் தெரியவில்லை. எத்தனை வர்த்தக நிலையங்களில் கல்லுடைக்கும் இடங்களில், எத்தனை எஜமான்களின் வீடுகளில், உணவு விடுதிகளில் தினக் கூலிக்காக வேலை செய்யும் இடங்களில் ஏராளமானோர் முழு நேர வேலை களில் சட்டத்திற்கு விரோதமாக அமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் அறியாமையினாலேயே வேலை செய்பவர்களும் உண்டு. இவர்களுக்கு தேவையினை பூர்த்தி செய்ய முடியாத கூலியை வழங்குகின்றனர் என்பதை சிந்தித்தல் வேண்டும். இவர்களுள் முறைசார் ஊழியர்களும், முறை சாரா ஊழியர்களும் தங்களை அறியாமலே தங்கள் உரிமைகளை இழந்து வருகின்றனர் என்பதை உணர வேண்டும்.

மலையக தொழிற் சங்கங்கள், கட்சிகள் மலையகத்தில் திருவிழாவாகக் கொடிகளும், போஸ்டர்களும் ஒட்டி கொண்டாடுவார்கள். வாக்குறுதிகளையும் அளிப்பார்கள். ஆனால் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்பட்டதாக இல்லை. மலையகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுள் லயன் குடியிருப்புக்கள், காணிப் பிரச்சினைகள், ஊழிய சேமலாப நிதியை உரிய நேரத்தில் பெற முடியாத பிரச்சினைகள், சுகாதாரப் பிரச்சினைகள். எத்தனைத் தோட்டங்களில் அம்பியூலன்ஸ் வண்டி சேவைகள் இருக்கின்றன என்பன பிரதானமானவை.

மேலும் போக்குவரத்து வசதிகள் போதாமையும் பாதைகள் புனரமைக்கப்படாமையும், நிர்வாக அலுவல்களில் மொழிப் பிரச் சினைகள் என்பன குறிப்பிடத்தக்கவை. மலையகத்திற்கென நீண்ட காலத் திட்டங்கள் வகுக்காமை, சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதல், மலையக பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைகள், தொழில் பயிற்சி நிலையங்களின் பற்றாக்குறைகள், தொழில்நுட்ப கல்விசார் நடவடிக்கை கள் இன்மை, போதியளவான ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் காணப்படாமை, தோட்டப்புறங்கள் பிரதேச அலகிற்குள் உள்ளடக்கப்படாமை, குறைந்தளவிலான எழுத்தறிவு வீதம், போதியளவான அரச தொழில் வாய்ப்புகள் இன்மை, அடிப்படை ஆவணங்களை பெறுவதில் பிரச்சினைகள், அதிகரித்து வரும் போதைப் பொருள் பிரச்சினைகள், அடிப்படை வசதிகள் பூரணத்துவமின்மை, தேசிய நீரோட்டத்தில் மலையக மக்கள் இணைக்கப்படாமை என தேவைகளின் பட்டியல் நீளுகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தீர்க்கும் முகமாக கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றனவா? இல்லை. வெற்றி ஊர்வலங்கள் மட்டும் நடத்தத் தவறுவதேயில்லை.

இலங்கை பொருளாதாரத்தின் பெண்களின் பங்கு அளப்பரியதாகும். இலங்கையின் பொருளாதார மேன்மைக்கு பெண்களின் பங்கு அளப்பரியதாகும். இவர்கள் உடல், உள உழைப்புக்களில் தமது பங்கை செலுத்துகின்றனர். இவர்களே இன்று குடும்ப பாரங்களை சுமப்பவர்களாக உள்ளனர். இவர்களது உரிமைகள் பாலியல் வன்முறை, அதிகரித்த வேலை, அடக்குமுறை, ஆணாதிக்கம் என்ற வகையில் அதிகளவில் மீறப்படுகின்றன. இவர்களுடைய உரிமைகள் மேம்பட வேண்டும்.

எந்த மே தினத்திலாவது பெண் தொழிலாளி ஒருவர் கௌரவிக் கப்பட்டுள்ளாரா? இல்லை. கொழும்பு நகரங்களில் வீட்டு வேலை செய்யும் சிறார்களுள் பெரும்பாலானோர் மலையகத்தைச் சேர்ந்தவர்கள், பொருளாதார சிக்கல்கள் வறுமை என்பதை காரணம் காட்டி வீட்டு வேலைகளுக்கு தொடர்ந் தும் பிள்ளைகளை அனுப்பி வைக்கப் படுகின்றனர். தொழிற் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புக்கள், இச்சிறுவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறின.

அந்த முன் மொழிவுகள் எங்கே என இந்த மே தினத்தில் நினைவுகூரல் வேண்டும். மலையக தொழிற்சங்கங்களின் போட்டாப் போட்டித் தன்மையும் தனித்துவத்தை காட்டுமுகமாக பிரிந்து செல்வதும் மலையகத்தில் நீண்ட கால அபிவிருத்தி திட்டங்கள் ஏதும் நடை முறைப்படுத்தப்படாமைக்கான காரணமாகக் கொள்ளலாம். இந்நிலையே கண்டி, பதுளை மாவட்டங்களில் எத்தகையதான தமிழ் பிரதிநிதித்துவத்தையும் பெற முடியாமைக்கான காரணமாகும். எனவே, இம்மே தினத்திலாவது ஒரு குடையின் கீழ் மலையக மக்களுக்கு என கோரிக்கைகளை விடுக்க வேண்டும்.

ஆரம்ப காலங்களில் சாதி அரசியல் செல்வாக்கு செலுத்தியிருந்தது. இன்று அனைத்தையும் தாண்டி சுய நல அரசியலையே நடைமுறையில் காண முடிகிறது. மேலும் அதிகார அந்ஸ்துக்கான போட்டி நிகழ்கிறதே தவிர மக்கள் சேவையில் போட்டி எதையும் காண முடியவில்லை.

உழைக்கும் வர்க்கத்தின் உண்மை நிலை உணர்த்தி தொழிலாளி தனது உழைப்பை தடையின்றி தொடரவும் கட்டளையிடும் அதிகாரியாக மாறவும் அரசியல் அதிகாரத்தை, உரிமையை நிறுவும் நாளாக முன்நிறுத்தி அதை நோக்கிப் போராட மலையக மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சிறு துளி உரிமையையும் போராடி பெற்ற வரலாறே நம்முடையது. உழைப்பும் உயர வேண்டும், உழைக்கும் தொழிலாளியும் உயர வேண்டும்.

தலவாக்கலை கே. எச். கே.

Thursday, April 29, 2010

தொழிலாளர்களின் உரிமைகளை பெற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

உலகத் தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைந்து போராடி பெற்ற உரிமைகளை பெறுவதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகச் செயலாளர் எஸ். ஜோதிவேல் விடுத்துள்ள மேதின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த தொழிற்சங்கங்களுடன் தோட்டக் கம்பனிகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கம்பனிகள் நேர்மையாகப் பின்பற்றுவதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. தொழிலாளர்களின் குமுறல் இல்லாதொழிக்கப்படுகிறது. அடுத்த ஒப்பந்தம் வரை தொழிற்சங்கங்கள் மௌனித்து போகின்றன.

இனிவரும் காலங்களில் கம்பனிகளுடன் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தம் கூட்டு ஒப்பந்தத்திற்கு மாறாக செயற்படும் கம்பனிகளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மூலம் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.

இதற்காக தொழிற்சங்கங்களுக்கு அங்கத்தவர்கள் பாரிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும். தோட்ட உத்தியோகத்தர்களுக்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று வீட்டு வசதிகளுக்கான நிவாரணமும் பெற்றுக் கொடுக்க சகலரும் ஒன்றிணைய வேண்டும்.

கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன் வைப்பதில் வலுசேர்க்க முடியாவிடில் மீண்டும் சம்பள நிர்ணய சபையின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வழி செய்வதுடன் காலத்துக்குக் காலம் ஏற்படும் வாழ்க்கைச் செலவுக்கேற்ப மாற்றம் செய்யவும் நிர்ப்பந்திக்கவும் போராட்டங்களில் ஈடுபட்டு தொழிற்சங்கங்களை விழிப்புறும் நிலைக்கு தொழிலாளர் சக்தி இட்டுச் செல்ல வேண்டும் என்றார்.

Wednesday, April 28, 2010

உரிமையை தட்டிக் கேட்டும் தினமாக மேதினம் மாற வேண்டும்

30 வருட யுத்த காலத்தின் பின்னர் இந்த நாட்டில் இடம்பெறும் முதலாவது மேதினம் நாடு முழுவதுமாக நடைபெறுகிறது. மலையகத்தை பொறுத்தவரை மேதினம் ஒரு ஆலய திருவிழா, சடங்கை போல இடம்பெற்று வருகிறது.
மேதினம் தொழிலாளர்கள் தினமாகும். முதலாளித்துவத்திற்கு எதிராக எழும்பிய அலைககளினால் ஏற்படுத்தப்பட்ட தொழிலாளர் தினத்தின் வரலாறு நீண்டதோர் வரலாறாகும். தொழிலாளர்களின் அடிமைத்தன வாழ்வுக்கு எதிராக அமெரிக் சிக்காகோ நகரில் 1889 மே மாதம் 01 திகதி மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் விளைவாக ஏற்றபட்டதன் பயனே மே 1ம் திகதிய தொழிலாளர் தினமாகும்.
தொழிலாளர்களின் ஒற்றுமையின் விளைவாக 1890 மே 1ம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பட்டது. இச் சம்பவத்தின் பின்னரேபல நாடுகளில் மே முதலாம் திகதி உலகத் தொழிலாளர் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் இன்று மலையகத்தில் மேதினம் ஒரு கேலிக்கூத்தாக அதன் புனித தன்மைக்கு எதிராக இடம் பெறுகிறது. வெறுமனே வருடா வருடம் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலத்தை ஏற்படுத்துவதாலும் கூட்டத்தின் இறுதியில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றுவதாலும் எமது சமுதாயத்திற்கு இதுவரை எதுவுமே நன்மைகள் கிடைக்கப்பெற்றதாக தெரியவில்லை.
கடந்தகால மேதினங்களில் எழுப்பப்பட்ட கோஷங்களாலும் தீர்மானங்களாலும் என்ன பயனை எமது மக்கள் எட்டியுள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்களை மகிழ்விததது மட்டுமே எமது மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
மலையக பாட்டாளி மக்களின் உரிமையை தட்டிக்கேட்கும் ஒரு சந்தர்ப்பமாக மலையகத்திலும் மேதினம் மாற வேண்டும்.
ஏட்டிக்குப் போட்டியாக ஒவ்வொரு தொழிற்சங்கமும் தெருக்கூத்து நாடகங்களை நடடத்துவதுபால தலைவர்களின் செல்வாக்கை பிரதிபலிக்கும் நிகழ்வாகிவிட்டது மேதினம். தொழிலாளர்களின் உணர்வுகளை கொண்ட தொழிலாளர் தினமாக மேதினம் மாற்றம் பெற வேண்டும். வெறுமனே இந்திய சினிமா பாடகர்களையும் வெத்துவேட்டு தீர்மானங்களை கொண்டு மேதினத்தை நிரப்புவதைவிட எமது மண்ணுக்காகவும் தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் உயிர்நீத்த மலையக தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் தினமாக மாற்றம் பெற வைக்க வேண்டும்.
இலட்சக்கணக்கான செலவுகளை செய்து பந்தா மேதினக் கூட்டங்களை நடத்துவதை விட்டு அச் செலவு பணத்தை கல்வி செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ள மலையக மாணவ மாணவிகளுக்கு வழங்கினால் அதுவே எமது சமுதாயத்தின் அறிவுக் கண்கள் திறப்பதற்கான அத்திவாரமாக அமையும் நடைமுறைக்கு ஒத்துவராத செயல்களை கைவிட்டு நடைமுறை வழிக்கு ஏற்ற வகையில் எமது மக்களே மேதினத்தை மாற்றம் பெற வைக்க வேண்டும்.
எமது பாட்டாளி வர்க்க போராட்டத்தில் முதன் முதலாக 1939 ஜனவரி 12ம் திகதி முல்லோயா போராட்டத்தில் சுரவீர என்ற பொலிஸ்காரரால் கோவிந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் முதல் மலையக மக்களின் போராட்டத்தில் கண்டி பல்லேகல தோட்டத்தை சேர்ந்த பழனிவேல்(1979) வi 36 தியாகிகள் உயிரை இழந்துள்ளனர்.
இந்த தியாகிகளை எந்தவொரு தொழிற்சங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ மேதினத்தினத்திலாவது நினைவுகூராமை வருந்தத்தக்கதாகும்.
ஓவ்வொரு மேதினத்தன்றும் இத் தியாகிகளை நாம் நினைவு கூரல் வேண்டும்.
வெறுமனே மேதினத்தை ஒரு திருவிழாவாக கொண்டாடுவதால் எமது எதிர்கால சமுதாயத்திற்கு எவ்வித பயனுமில்லை.
அர்த்தபுஷ்டியான செயல்களில் எதிர்வரும் காலங்களில் நாம் செயற்படுவோம்.
அதன் மூலமாக எமது தொழிலாளர்களின் பலத்தை அடையாளப்படுத்துவோமாக
திண்ணனூரான்
சிலாபம்

Thursday, April 22, 2010

மாணவி கடத்தல்

ஹட்டன் கொட்டகலை வெலிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்விபயிலும் 13 வயது மாணவி ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது உடைகள் காட்டுப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை மாணவி கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஹட்டன் மனித உரிமைகள் தாபனம் தெரிவித்தது.
கடந்த 5ஆம் திகதி பாடசாலையிலிருந்து வரும் வழியில், முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாதோர் மாணவியைக் கடத்திச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர் ஸ்டொனிகிளிப் தோட்டத்தின் காட்டுப் பகுதியிலிருந்து மாணவியின் ஆடைகளும் புத்தகங்களும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். எனினும் இந்த மாணவி தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை எனப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஹட்டன் மனித உரிமைகள் தாபனத்திலும் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Monday, April 19, 2010

தோட்டத்திற்குள் புகுந்த பெரும்பான்மை இனத்தவர்களின் தாக்குதலால் நால்வர் காயம்

நிவித்திகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னகந்த மகாவெல தோட்டத்திற்குள் புகுந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்;ந்த சிலர் குடிபோதையில் அங்குள்ள தமிழர்களை தாக்கியுள்ளதோடு அவர்களின் வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இச் சம்பவத்தில் காயமடைந்த நால்வர் இத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது நீண்டகாலமாக இத் தோட்டத்திலுள்ள காணியை வெளியார் அத்துமீறி கைப்பற்றி வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து பெரும்பாலான தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்ட நிலையில் சொற்ப எண்ணிக்கையிலானவர்களே அங்கு வசித்து வருவதாகவும் தெரியவருகிறது.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நிவித்திகலை பொலிசில் முறைப்பாடு செய்த போதிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறைப்பாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை எனவும் மாறாக தொழிலாளர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.டி ராஜனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அவர் சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தார். தொழிலாளர்கள் நிவித்திகலை பொலிசில் முறைப்பாடு செய்யவும் ஆவண செய்தார்.

மேம்படுத்தப்பட்ட தொழில் சூழல் மூலம் தொழிலாளர் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது


கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால தேயிலைத் தொழில், பிரித்தானியா சார்ந்த சம்பிரதாய பெருந்தோட்டத்துறையில் இருந்து விலகி நீண்டதூரம் வந்துவிட்டது.

பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் அங்கத்தவரான ரேஜி ராஜியா, 1962ம் ஆண்டு இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் நுழைந்தார். அவர், பெருந்தோட்ட நிர்வாகியாக, தரகராக, இயக்குநராக மற்றும் கொள்வனவாளராக தேயிலை தொழிற்துறையின் சகல நிலைகளிலும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் 45 வருட அனுபவம் உள்ளவர்.



இலங்கையின் சம்பிரதாய பெருந் தோட்டத் துறையில் இருக்கும் பெருந்தோட்ட வாழ்க்கை, நிலையான உற்பத்தி தாக்கத்திலும், இலாபத்திலும் சீரடைந்துள்ளது என்று இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கு அளித்த பேட்டியில் ராஜியா தெரிவித்துள்ளார்.


அன்று நாட்டிலுள்ள பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் தோட்டங்களுக்கு அவற்றின் முக்கியமான சாதனைகளைத் தெரிவு செய்யும் பொருட்டு மேற் கொள்ளப்பட்ட சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பிறகு அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார். பெருந் தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத் தினால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை களுக்கு அமையவே இச்சாதனைகள் பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டன.


“நிச்சயமாக முன்னேறுவதற்கு பல இடைவெளிகளிலிருந்தும் கடந்த 1980ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தோட்ட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் மனிதவள அபிவிருத்தி சம்பந்தப்பட்ட துறைகளிலும் காணக் கூடியதாக உள்ளது” என்கிறார் ராஜியா.
கம்பனி தோட்டங்களில் டிரஸ்டின் தலையீட்டினால் தோட்ட மகளிர் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காண முடிந்திருக்கிறது.
“எந்த விதமான காலநிலையிலும், கடினமான நிலப்பரப்பில் கொழுந்துகளை பறிக்கும் விசேட தொழிற்றிரன் படைத்த அதேநேரம் அப்பெண்கள் துவைத்தல், விறகுகள் சேகரித்தல், உணவு தயாரித்தல், குழந்தைகளை பராமரித்தல் போன்ற வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது ராஜியா என்றார். இன்று


“ஆனால் இன்று, முன்னேற்றமடைந்துள்ள குடும்ப வசதிகளாலும் சமூக அந்தஸ்தாலும், கௌரவிக்கப்படுவதாலும் தோட்டப் பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் அரும்பத் தொடங்கியுள்ளன.” என்றும் ராஜியா கூறுகிறார்.


தோட்டங்களின் முக்கியமான துறைகளான சுகாதார பராமரிப்பு, சிறுவர் அபிவிருத்தி, குடியிருப்பு அபிவிருத்தி, வதிவிட மற்றும் சமூக அபிவிருத்தி போன்றவை முன்னேற்றம் அடைந்துள்ளது.

உதாரணமாக மது போதைக்கு அடிமையானோர்களுக்கு, கூட்டுறவு சங்கங்கள் மூலம் அறிவுரை வழங்குதல், வீட்டு நிதி பராமரிப்பு, வங்கியிடுதல் மற்றும் சேமித்தல், கால்நடை வளர்ப்பு, வருவாய் பெருகக் கூடிய எடுத்துக்காட்டாக சிகை அலங்கார நிலையம் போன்ற தொழில்துறைகளுக்கு கடன் வழங்குதல் போன்றவற்றில் டிரஸ்ட் எடுபட்டுள்ளது. இச்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களது பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்காக நிதியுதவியும் வழங்கப்படுகிறது.


வீட்டு சௌகரியங்களுக்கு தேவையான வசதிகள், சூரிய ஒளி மூலம் மின்சாரம், சுடுநீர், தொழிற்சாலையிலும் வெளிக்களத்திலும் ஓய்வு அறைகள், முதியோர் இல்லம் மற்றும் கலாசார தேவைகளை கருதி சில பெருந்தோட்ட மாவட்டங்களில் மயானங்களையும் டிரஸ்ட் அமைத்துத் தந்துள்ளது.


“தேசிய மயமாக்கப்பட்ட நாளிலிருந்து, பெருந்தோட்ட சமூகத்துக்காக கட்டாயச் சேவைகளை முன்னேற்ற தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது கம்பனி தோட்டங்கள் இதைவிடவும் முன்னேறியுள்ளன. தற்போது விசேடமான சேவைகள், சிறந்த முறையான கட்டமைப்பில் தோட்ட குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சில நேரங்களில் அயல் கிராமப்புற சமூகங்களுக்குக் கொடுக்கும் விதத்தில் சலுகைகள் நிரம்பி வழிகின்றன” என்கிறார் இவர்.


அநேக தோட்டங்களில் உள்ள 0-5 வயதெல்லையையுடைய சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் சமூக கட்டமைப்புடன் உபகரணப்படுத்தப்பட்ட பிரிவுகளுடன் பயிற்சியளிக்கப்பட்ட தராதரமுள்ள உத்தியோகத்தர்கள் மூலம் முகாமைப்படுத்தப்பட்டதாகும். இன்றைய காலகட்டத்தில் அனேகமான நிறுவனங்களில் நிகழும் குழந்தை பிறப்புக்களின் போது, தாய்மார்களுக்கு உரிய ஊட்டச்சத்தும், பிரசவ பராமரிப்பும் வழங்கப்படுகிறது. இன்று இறப்புகளின் எண்ணிக்கை தேசிய கணக்கிற்கு உட்பட்டதாகவே உள்ளது.
கூடுதலான இளைஞர்களும் இள வயதினருமே புதிய வசதிகளுடைய வீடமைப்பு குடியிருப்புகளில் குடியேறுகின்றனர். இது அவர்கள் தனித்தனியான வீடமைப்புகளை ஏற்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. வயது முதிர்ந்தோர் இம்முறைமையை ஏற்றுக்கொள்ள காலம் எடுக்கலாம். ஆனால் இது முன்பைவிடவும் மிகப்பெரியதொரு முன்னேற்றமாகும். அதிகமான தகராறுகள் நீர் குறைவினாலும், கூரை ஒழுக்கினாலும், வதிவிட குறைபாடுகளாலுமே ஏற்படுகின்றன” என்கிறார் ராஜியா.


பிராந்திய கம்பனி தோட்டங்கள், சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவீனமயமான தரக்கட்டமைப்பாகிய சுகாதார, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரச்சான்றிதழ்களுடன், தொழிற்சாலை அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இத்தொழிற்சாலைகள் மேம்படுத்தப்பட்டதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளதுடன் சுத்தமான, ஒழுங்கமைக்கப்பட்ட தொழில் சூழ்நிலை மூலம் தொழிலாளிகளின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. தொழிற்சாலை ஓய்வறை உட்பட இவைபோன்ற செயற்பாடுகள் இலங்கை தேயிலையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


கம்பனி தோட்டங்களில் பொதுவாகக் காணப்பட்ட வேலை செய்யும் நிலைமை வெகுவாக மாறி நல்ல நிலையை அடைந்துள்ளது. தற்போது தோட்ட முகாமைத்துவம், தொழிலாளர்களது கண்ணியத்தினை அடையாளம் கண்டுகொள்வதை அதிகரித்துள்ளதுடன் உடன்பாட்டுடனான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.


“ஆரம்பத்தில் இது ஒரு கொடுங்கோலான அமைப்பாக இருந்தது. தற்போது தோட்டங்களை நிர்வகிப்பதில் கலந்தாலோசிக்கும் அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு தோட்டத்திலும் தோட்ட கண்காணிப்பாளர், தொழிலாளர் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டு தொழிலாளர் செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான செயற் குழுக்களில் தற்போது பெண்களும் பிரதிநிதிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இது முன்னேற்ற வழியின் பெருமாற்றமாகும். இந்த செயற்குழுக்கள் மூலம் தொழிலாளர்களது தகராறுகள் சுமுகமாக பேசித்தீர்க்கப்படுகிறது. இதன் மூலம் தகராறுகளில் வீணாக்கப்படும் நேர விரயம் மற்றும் வேலை நிறுத்தங்கள் தவிர்க்கப்படுகின்றன” என்று சொல்கிறார் ராஜியா.


(இலங்கை பெருந்தோட்ட முதலாளிகள் சம்மேளன ஊடக வெளியீடு)
நன்றி- தினகரன் வாரமஞ்சரி