ஹட்டன் கொட்டகலை வெலிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்விபயிலும் 13 வயது மாணவி ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது உடைகள் காட்டுப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை மாணவி கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஹட்டன் மனித உரிமைகள் தாபனம் தெரிவித்தது.
கடந்த 5ஆம் திகதி பாடசாலையிலிருந்து வரும் வழியில், முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாதோர் மாணவியைக் கடத்திச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர் ஸ்டொனிகிளிப் தோட்டத்தின் காட்டுப் பகுதியிலிருந்து மாணவியின் ஆடைகளும் புத்தகங்களும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். எனினும் இந்த மாணவி தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை எனப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஹட்டன் மனித உரிமைகள் தாபனத்திலும் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment