Thursday, September 17, 2009


தோட்டத் தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து
தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 405 ரூபாவை வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டனர்.
2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு அமுலுக்கு வரும் விதத்தில் இவ்வொப்பந்தம் கொழும்பு ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளன அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் இ.தொ.கா சார்பில் ஆறுமுகன் தொண்டமான், ல.தே.தோ.தொ.ச சார்பில் கே.வேலாயுதம், தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இராமநாதன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

அதிகரிக்கப்பட்ட சம்பளத்திற்கான நிலுவைத் தொகையை மூன்றுகட்டங்களாக அதாவது எதிர்வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 50 வீத சம்பள நிலுவையையும் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 25 வீத சம்பள நிலுவையையும் ஜனவரி மாதம் தைப் பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்துடன் எஞ்சிய 25 வீதத்தை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் 75 வீத வருகைக்கு ஞாயிற்றுக்கிழமை, போயா தினம் மற்றும் விடுமுறை தினங்களும் இதுவரை காலம் உள்வாங்கப்பட்டிருந்தது. இனிமேல் ஞாயிறு, போயா தினம், விடுமுறை தினங்கள் நீக்கப்பட்டுள்ளன.
தொழிலாளி ஒருவர் சுகயீனம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் 75 வீத வருகை இல்லாத இடத்து அவர் தொழிலுக்கு வந்தவராகவே கருதப்படுவார்.

  • தோட்டத் தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 285 ரூபாவாகவும்,
  • 75 வீத வருகைக்கான கொடுப்பனவு- 90 ரூபா,
  • உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு 30 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தொகையைவிட கூடுதலான கொழுந்து அல்லது இறப்பர் பால் சேகரிப்பவர்களுக்கு முறையே 12 ரூபா 15 ரூபாவை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2011 மார்ச் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.


  • தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து எடை போடும் காட்சி1900ம் ஆண்டின் முற்பகுதியில்
  • இடிந்த கிணற்றில் குடி தண்ணீர் எடுத்துச் செல்லும் மலையகத்து பெண் தொழிலாளர்கள். அன்று தொடக்கம் இன்றுவரை இந்த மக்களின் வாழ்வு இந்த இடிந்த கிணறு போலவே செப்பனிடப்படாது, செழிப்பற்றுக் கிடக்கின்றது. எந்த" பெருந்தேசியங்களும், கதையாடல்களும், போராடல்களும்" இவர்களின்பால் என்ன அக்கறை செலுத்தின
  • கங்காணிகளும், தோட்டத் தொழிலாளர்களும். 1870இல்

Wednesday, September 16, 2009


தோட்டப் பகுதிகளில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

தமக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 405 ரூபா சம்பள உயர்வை எதிர்த்தும், 500 ரூபாவே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் பொகவந்தலாவை, கொட்டகலை, மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களைச சுமார் 1500 தோட்டதொழிலாளர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் மலையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படங்கள் - வீரகேசரி
உத்தேச சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது – தொழிற்சங்கங்கள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை தொடர்பாக மலையக மக்கள் முன்னணி- பெ.சந்திரசேகரன், தொழிலாளர் ஐக்கிய முன்னணி- எஸ்.சதாசிவம், தொழிலாளர் தேசிய சங்கம் - பி.திகாம்பரம், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் -ஆர்.சந்திரசேகரன், பாட்டாளி வர்க்க புதிய ஜனநாயக சங்கம் - இ.தம்பையா, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், ஆர்.முரளிதரன் ஆகிய ஆறு தொழிற்சங்கங்கங்களின் பிரதிநிதிகள் கூடி கலந்துரையாடி தெரிவித்துள்ள பத்திரிகை அறிக்கையில்
  • அடிப்படை சம்பளம் 500 ரூபாவாக இருக்க வேண்டுமென்ற அனைத்து தொழிற்சங்கங்களின் முடிவுக்கு மாறாக 290 ரூபாவை அடிப்படை சம்பளமாக ஆக்கியிருப்பது தொழிலாளர்களின் உழைப்பையும் விலைவாசி ஏற்றத்தையும் உதாசீனப்படுத்துகிறது
  • ஏனைய கொடுப்பனவுகளோடு 405 ரூபா வழங்கப்படுமென தெரிவித்திருப்பது தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார சுமையை புரிந்து கொள்ளாததாகவே அமைந்திருக்கிறது.
  • அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமான சம்பள கொடுப்பனவுகள் அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைப்பதற்கு உத்தரவாதமில்லை என்பது தெளிவானதாகும்.

எனவே பின்வரும் கோரிக்கைகளை முன் வைப்பதாக மேற்படி ஆறு தொழிற்சங்கங்களும் தெரிவிக்கின்றன.

  • அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் 500 ரூபா அடிப்படை சம்பளமாக வழங்கப்பட வேண்டும். • தற்போதைய கூட்டு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்படும் சம்பள உயர்வு கோரிக்கைகளையும், தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்களையும் அலட்சியப்படுத்துவதாகவே அமைவதால் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் இக் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக இக் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய பகுதிகள் யாவும் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
  • இந்த ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் நிராகரிப்பதனாலும் முற்றாக எதிர்ப்பதனாலும் தொழிலமைச்சர் இதில் ஒப்பமிடுவதை உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
  • 500 ரூபா அடிப்படை சம்பளத்திற்காக தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தும் தொழிலாளர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

இந்த விவகாரத்தில் அரசு பார்சையாளராக இல்லாமல் சமூக நியாயபூர்வமான தீர்வுக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க மலையக தொழிற்சங்கங்கள் தீர்மானம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவதென்று கொழும்பில் ஒன்று கூடிய மலையக தொழிற்சங்கங்கள் மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கம் ஆகியன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரபா கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பி. திகாம்பரம், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதென்றும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் பங்குபற்றுமாறு கோருவது எனவும் இந்த சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெ. சந்திரசேகரன் தெரிவித்தார்

Tuesday, September 15, 2009

மலையகம் தந்த பாடம்
வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?
-சாகரன்-
கடந்த இரு வாரங்களாக தமது வாழ்வு ஆதாரமான சம்பள உயர்வுப் போராட்டத்தை மலையக தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வந்தனர். பிரிட்டஷ் ஆட்சிக்காலத்தில் தென் இந்தியாவில் இருந்து வாழ்வு அளிப்பதாக பசப்பு வார்த்தை காட்டி இராமேஸ்வரம் துறைமுகத்தில் ஆடு மாடுகள் போல் ஏற்றப்பட்டு தலைமன்னார் துறைமுகத்தில் இறக்கப்பட்டனர் இத் தொழிலாள அடிமைகள்.
அக்கால கட்டத்தில் தலைமன்னார் தொடக்கம் மலையகம் வரைக்கும் வீதிகள் ஏதுமற்ற நிலை இருந்தது. தலைமன்னாரில் இருந்து மலையகம் செல்வதற்கான வீதிகளை தாமே நிர்மாணித்து, தாம் நிர்மாணித்த பாதை வழியே நடந்தே பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையை அம்மக்கள் கொண்டிருந்தனர். இப்பாதை நிர்மாணிப்பில் பல ஆயிரக்கணக்க மக்கள் தமது உயிரை மாய்த்தக் கொண்டு ஏதுமற்றவர்களாக எரியூட்டப்பட்டனர் என்பதே சோக வரலாறு. மன்னார் மண்ணுக்கு உரமாக்கப்பட்டனர். இராமாணயத்தில் அனுமான் தனது பரிவாரங்களுடன் இணைந்து இலங்கைக்கு கடல் வழியே பாதை அமைத்ததாக கதைகள் கூறுகின்றன. அது உண்மையோ, பொய்யோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நாம் வாழும் நூற்றாண்டில் தலைமன்னாரில் இருந்து மலையகம் வரை பாதையமைத்து தமது உயிரை தியாகம் செய்த வரலாறு எமது மலையக மக்களுக்கே சேரும். இவர்களே உண்மையில் வரலாற்று நாயகர்கள். ஆமாம் இலங்கையில் நாம் கண்ட வரலாற்று நாயகர்கள்.

பொகவந்தலாவையில் பதற்ற நிலை தொடர்கிறது

சம்பள உயர்வு கோரி பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த கொட்டியாக்கலை, பொகவான, குயினா, கில்லானி, செல்வக்கந்தை உட்பட பல தோட்டங்களைச் சேர்ந்த சகல தொழிலாளர்களும் எவ்வித தொழிற்சங்க, அரசியல் கட்சி பேதமின்றி நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட பின்னர் (15-09-2009) ஒன்றிணைந்து ஊர்வலமாக சென்றனர். பேரணி பொகவந்தலாவை கல்லூரி வீதிக்குச்சென்ற போது, ஊர்வலத்தினர் மீது இனந் தெரியாதவர்கள் கல்லால் அடித்ததைத் தொடர்ந்து அவர்களும் திருப்பித் தாக்குதல் மேற்கொண்டனர். பொகவந்தலாவை நகர மத்தியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொகவந்தலாவை நகருக்கூடான சகல போக்குவரத்துக்களும் பல மணிநேரம் தடைபட்டன. இதனைத் தொடர்ந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். நிலைமை எல்லை மீறிச்செல்லவே பொலிஸார் 10 க்கும் மேற்பட்ட கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.


இதனால் மறியலிலில் ஈடுபட்டவர்கள் எதிர்த்து நின்ற போதும் புகை மண்டலம் பரவியதால் தொழிலாளர்கள் அல்லோலகல்லோலப்பட்டனர். சிதறி ஓடினர். உடனடியாகப் பொகவந்தலாவை நகரின் சகல கடைகளும் இழுத்து மூடப்பட்டன. பொகவந்தலாவைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தையிட்டுத் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் கண்டனம் தெரிவித்தனர்.