Sunday, September 6, 2009

தோட்டத் தொழிலாளரின் ஒத்துழையாமைப் போராட்டம்

500 ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து மலையகப் பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் ஒத்துழையாமைப் போராட்டம் முடிவின்றித் தொடருகிறது.
தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையே இதுவரை நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் இணக்கப்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் இந்நிலையில் கடந்த 2ம் திகதியிலிருந்து ஒத்துழையாமைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒத்துழையாமைப் போராட்டம் காரணமாக மலையகப் பெருந்தோட்டங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. அதேசமயம் சாதகமான முடிவொன்று எட்டப்படும் வரை தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் தொடருமென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென்பது தொழிற்சங்கங்களின் நிலைப்பாடாகும். இக் கோரிக்கையை அரசாங்கமும் ஆதரித்து வரு வது தெரிகிறது.
தோட்டத் தொழிலாளர்கள் கடந்த காலத் தில் ஒவ்வொரு சம்பள உயர்வையும் போராட்டம் நடத்தியே பெற்று வந்துள்ளனர். அவ் வேளைகளிலெல்லாம் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைக்குச் சாதகமாக அரசாங்கம் செயற்பட்டு வந்தமை நினைவிருக்கலாம்.
தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையே கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தைகளின் போதெல்லாம் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் பொருட்படுத்தியே வந்துள்ளது.
தற்போது இடம்பெற்று வருகின்ற ஒத்துழையாமைப் போராட்டமானது தோட்டத் தொழிலாளர்களின் ஜீவனோபாயப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டதென்பதை இவ் விடயத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் புரிந்துகொள்வது இங்கு அவசியமாகிறது. தோட்டத் தொழிலாளர்கள் கோருகின்ற ஐநூறு ரூபா சம்பள உயர்வானது இன்றைய காலகட்டத்தில் நியாயமானதென தொழிற் சங்கங்கள் அனைத்துமே கருத்துத் தெரிவிக்கி ன்றன.
சர்வதேச ரீதியில் தற்போது பொருளாதார வீழ்ச்சி காணப்படுகிறது. இந்நிலைமைக்கு இல ங்கை விதிவிலக்கானதல்ல. மக்களின் மாதாந்த வருமானம் அதிகரித்துச் செல்கின்ற போதிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உலக சந்தையில் அதிகரித்துச் செல்வதனால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் தவிர்க்க முடியாததாகிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது தோட்டத் தொழிலாளர்களைக் கூடுதலாகப் பாதித்துள்ளது. அவர்கள் குறித்ததொரு மட்டத்துக்குக் கீழேயே மாதாந்த வருமானம் பெற்று வருகின்றனர். அதேசமயம் அவர்களது மாதாந்த வருமானம் ஏனைய துறை தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது.
இதனாலேயே தோட்டத் தொழிலாளர்களில் பெருமளவானோர் வறிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நிலையில் அவர்கள் ஐநூறு ரூபா சம்பள உயர்வு கோருவதை நியாயமில்லையெனக் கூறுவதற்கில்லை.
பண்டைய காலம் தொட்டு உலகில் சிறந்ததொரு விவசாய நாடாக இலங்கை திகழ்ந்து வருகிறது. திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவாக உலகில் கைத் தொழில்துறை வளர்ச்சியடையத் தொடங்கியதும் விவசாயத்துறை பாரிய பின்னடைவைச் சந்தித்தது. இதனாலேயே உலகம் உணவு நெருக்கடியைச் சந்திக்க வேண்டியேற்பட்டது.
இலங்கையும் கடந்த காலத்தில் விவசாயத்தில் பின்னடைவையே சந்தித்தது. இப்பாதிப்பை நீக்கி கமத்தொழில் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதில் இன்றைய அர சாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.
சிறிது காலமாக வீழ்ச்சியான நிலைமைக்குச் சென்றுள்ள தேயிலை உற்பத்தித்துறையையும் மீளக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் விரிவான திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. பெருந்தோட்ட அபிவிருத்திக்கு நிகராக சிறு தேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதிலும் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
தேயிலைத் தொழில் துறைக்காக கடினமுடன் உழைப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் அவர்களது பொருளாதார நிலைமை இயன்றளவு சீர்செய்யப்பட வேண்டும். அப்போதே வினைத்திறன் கூடிய சேவையை தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும் தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பில் இன்று மீண்டும் பேச்சு சுமுகமான முடிவு ஏற்படும் என இ.தொ.கா. தலைவர் நம்பிக்கை
நன்றி- தினகரன்
தலைவர்கள் ஒன்றுபட்டுத் தொழிலாளரின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

மலையகத் தேயிலைத் தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தமக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப் பெறாமையினால் பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றனர். இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் கூடுதலான இலாபத்தினை பெற்றுக் கொடுக்கும் தொழில் என்றால் அது தேயிலைப் பயிர்ச் செய்கையாகும்.
ஆனாலும் இத்தோட்டத் தொழிலாளர்கள் தமது உழைப்புக்கு ஏற்ற வகையில் சம்பள உயர்வினைக் கேட்கும் போது தோட்டங்களை நிர்வகிக்கும் நிர்வாகங்கள் அதனை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கின்றன.
இதற்குப் பல்வேறு காரணங்களையும் காட்டுகின்றனர்.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை பறித்தல், மரங்களை வெட்டுதல், கவாத்து வெட்டுதல், மானாபுல் வெட்டுதல், புல்லூப் பிடுங்குதல், மருந்து தெளித்தல், கான்வெட்டுதல், தவானையைப் பராமரித்தல், முள்ளுக்குத்துதல், தேயிலை மரம் பிடுங்குதல், தேயிலைத் தொழிற்சாலை வேலை என இன்னும் பல வேலைகளைத் தமது முழு சக்தியையும் பிரயோகித்துச் செய்கின்றனர்.
இவர்களுக்கும் குறைந்த சம்பளத்தினை வழங்குவது கொடுமைதான். இவ்வாறான நிலையில் சிறிய வருமானத்தினைப் பெறும் தோட்டப்புற மக்கள் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை நகரப்புறங்களுக்குத் தொழில் தேடி செல்லும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் சிறார்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் அவர்களின் கல்வி வளர்ச்சியும் தடைப்படுகின்றது. மலையக தோட்டத் தொழிலாளர்கள் தமது குடும்ப வாழ்க்கையை நடாத்த எத்தனிக்கும் போது வறுமை நிலை தடையாக இருக்கின்றது. இந்நிலைமையில் அவர்கள் தங்களுக்கும் பிள்ளைகளுக்கும் போஷாக்கான உணவுகளைப் பெறுவதற்கு இயலாது. இதன் காரணமாகப் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். அதேவேளை போஷாக்கின்மையின் காரணமாக இளம் சிறார்கள் தமது கல்வியில் அக்கறை செலுத்துவதும் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கான காரணங்களை ஆராயுமிடத்து தோட்டத் தொழிலாளர்களுக்குப் போதியளவான சம்பளம் கிடைக்காமையே என்பது புலனாகும்.மலையகப் பகுதிகளில் அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் வாக்குக் கேட்டுத் தொழிலாளர்களின் இல்லங்களை நாடுகின்றனர். ஆனால் பின்னர் அவர்களைக் காண முடியவில்லை. தேர்தல் காலங்களில் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தும் தொழிற்சங்க அரசியல் வாதிகள் வாக்களித்த தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தையின் போது பின் நிற்கின்றனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இம்முறை இந்நிலைமை மாறவேண்டும். இதற்குத் தொழிற்சங்க அரசியல் வாதிகள் முனைந்து செயற்பட வேண்டும்.இலங்கை நாட்டினைப் பொறுத்த மட்டில் ஏனைய அரச துறைகளில் தொழில்புரிபவர்கள் வருடாவருடம் தமது வாழ்க்கைச் செலவிற்கு ஏற்றவாறு எதுவித நிபந்தனைகளுமின்றிச் சம்பள உயர்வு பெறுகின்றனர். ஆனால் கம்பனிகளினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப சம்பளத்தினைப் பெற்றுக் கொள்ள ஒவ்வொரு வருடமும் போராட்டங்கள் நடத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது.அரச உத்த்தியோகத்தர்களின் அளவுக்குத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்காவிட்டாலும் தமது அன்றாடச் செலவுகளை நிவர்த்தி செய்யும் அளவுக்காவது சம்பளத்தினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் தமது உணவு மற்றும் உடை, போக்குவரத்து, மருத்துவ செலவு, பிள்ளைகளின் கல்விச் செலவு, விருந்தாளிகளின் உபசரிப்பு உள்ளிட்ட அனைத்தினையும் தமது நாட் சம்பளத்தினை அடிப்படையாகக் கொண்டே செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் மிகக் கஷ்டமான வாழ்க்கையை வாழ்கின்றனர். இதனை உணர்ந்து செயற்பட வேண்டிய தொழிற்சங்க அரசியல் தலைவர்கள் அனைத்து தொழிற்சங்களுடன் ஒன்றிணைந்து ஒரு கணிசமான சம்பள உயர்வினைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.200 ஆண்டுகளுக்கு முன்பு தென் இந்தியாவில் இருந்து தோட்ட தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களின் தொழில் நிலை அந்தஸ்தினை உறுதிப்படுத்தும் வண்ணம் செயற்பட வேண்டும்.எதிர்கால சந்ததியின் நிலை குறித்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். அதனால் இம்முறை தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தை வெற்றி அளிக்கத் தொழிற்சங்க அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுத் தீர்க்கமான நன்மையைத் தோட்டத் தொழிலாளருக்குப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
க. விக்னேஸ்வரன்
தினகரன்

Wednesday, September 2, 2009

போராட்டங்களில் பங்கேற்கத் தயார்- மலையக தொழிற்சங்கங்கள்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக வலியுறுத்தும் எந்தவொரு போராட்டத்தையும் ஆதரிக்க தாம் தயார் என மலையக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மலையக மக்கள் முன்னணி- தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்தில் பங்கெடுக்க பின்நிற்காது. கட்டாயமாக இன்றைய வாழ்க்கையை ஓரளவாவது சமாளிக்க 600 நாட் சம்பளமாக வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கடந்த காலத்தில் நடந்து கொண்ட முறையிலிருந்து விடுபட்டு சமூக நலனில் அக்கறை காட்டும் வகையில் நடவடிக்கையெடுக்க வேண்டும். ஐ.தே.க இந்த விடயத்தில் ஒதுங்கியிருக்கக் கூடாது. உழைப்பவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க மறுப்பது மனிதாபிமான செயலாகாது. போராட்டம் நடத்தி சம்பள உயர்வு பெறுவதென்பது தொழிலாளர்களின் உரிமைகளுக்கு கடிவாளம் போடப்பட்டது போன்றதொரு நிலையாகும்.
தொழிலாளர் தேசிய சங்கம்:- தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 500 ரூபா பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டு இறுதி வரை செயற்பட வேண்டும்.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி:- தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் 500 ரூபாவுக்கும் குறையாத சம்பளம் இன்றியமையாததாகும். இதனை பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற்சஙகங்கள் இதய சுத்தியுடன் போராட்டங்களை முன்னெடுப்பது அவசியம். இந்த விடயத்தில் தொழிலாளர்களை ஏமாற்றும் வகையிலான எத்தகைய செயற்பாடுகள் இடம் பெற்றாலும் அவற்றுக்கு எதிராக தமது தொழிற்சங்கம் போராடும்.
தொழிலாளர் விடுதலை முன்னணி: சம்பள உயர்வுக்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்காமைக்கு தொழிற்சங்கங்களின் ஒற்றுமையின்மையே காரணம். கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் சரியானதொரு போராட்டத்திற்கு முன்வருவது மூலமாக அனைத்துத் தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி போராட வழி வகுக்க வேண்டும்.
கொழும்பில் தொழிற்சங்கங்களின் ஒன்றுகூடல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவுள்ள ஒத்துழையாமைப் போராட்டம் குறித்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத மலையக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று கூடி ஆராயவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி, மலையகத் தொழிலாளர் முன்னணி, அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பனவற்றின் முக்கிய பிரதிநிதிகளே ஆராயவுள்ளதாக சதாசிவம் தெரிவித்தார்

Tuesday, September 1, 2009

சம்பள உயர்வை வலியுறுத்தி ஒத்துழையாமைப் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 31-09-2009 அன்று தொழிற் சங்களுக்கும்,முதலாளிமார் சம்மேளத்திற்குமிடையே இடம் பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து இ.தொ.கா தலைமையில் 01-10-2009 அன்று முற்பகல் 11.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணிவரை கொட்டக்கலை காங்கிரஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்வரும் 02-10-2009 தொடக்கம் ஒத்துழையாமை போராட்டத்தினை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் தோட்டத் தொழிலா ளர்களுக்கு எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் 500 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதெனவும் இதனை வலியுறுத்தும் வகையில் நாடு தழுவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகங்களுக்கு ஒத்துழையாமை போராட்டங்களை முன்பெடுப்பதற்கும் திர்மானிக்கப்பட்டது. இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான மற்றுமொரு பேச்சுவார்த்தைக்கு எதிர்வரும் 07-10-2009 ஆம் திகதி வருமாறு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Monday, August 31, 2009

தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையே 31-09-2009 ஆம் திகதி கொட்டக்கலையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொள்ளவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக 01-10-2009 காலை 10.00 மணிக்குக் கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப் பேச்சுவார்த்தையில் இ.தொ.கா. பொதுச்செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப்பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இ.தொ.கா. தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், பிரதியமைச்சர் எஸ்.ஜெகதீஸ்வரன், இ.தொ.கா.வின் தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜன், இலங்கைத்தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் ஊவா,மாகாணசபை உறுப்பினருமான கே.வேலாயுதம், பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் இராமநாதன் மற்றும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இ.தொ.கா.வின் உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், தோட்டக் கமிட்டித் தலைவர்கள், மாதர் சங்கத் தலைவிகள் ஆகியோர் உட்படப் பலர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியை வேலைக்கமர்த்திய வீட்டு உரிமையாளருக்கு விளக்கமறியல்

மஸ்கெலியாவைச் சேர்ந்த மதுரைவீரன் ஜீவராணி (13) சிறுமியை வேவைலக்கமர்த்தியிருந்த பௌத்தாலோக்க மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட வர்த்தகர் ஒருவர் சட்ட விரோதமான முறையில் வேலைக்கமர்த்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையையடுத்து கொழும்பு மேலதிக நீதவான் வீட்டு உரிமையாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மதுரைவீரன் ஜீவராணி மற்றும் லெட்சுமன் சுமதி ஆகிய இரு சிறுமிகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள கழிவு நீர்க்கால்வாயில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது